வலைஞர் பக்கம்

சொல்லரங்க மேடைகள் இப்போதைக்கு அமையாது என்பதால் சொல்காப்பியம் யூடியூப் சேனல் தொடங்கிய நாஞ்சில் சம்பத்!

என்.சுவாமிநாதன்

பிரபல திராவிடப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் கரோனாவால் தனக்கு மேடைவாய்ப்பு இல்லாத நிலையில் பேசுவதற்கு களம் இல்லாததால் காலத்திற்கேற்ப மாற்றி யோசித்து யூடியூப் சேனல் தொடங்கியிருக்கிறார். இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழின் பெருமைகளையும், தான் படித்த நூல்களையும் பற்றி பேசிவருகிறார்.

பிரபல பேச்சாளரான நாஞ்சில் சம்பத் கரோனாவால் தனக்கு மேடை வாய்ப்பு இல்லாமல் போனதை அவரே பதிவும் செய்துள்ளது கரோனாவால் பேச்சாளர்களும் அடைந்திருக்கும் பேரிழப்பைப் பேசுகிறது.

எந்தக் கூட்டத்தில் பேசினாலும் தனது கம்பீரமான உரையால் பார்வையாளர்களை தன் வசம் இழுப்பதில் கைதேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். கல்லூரிக் காலத்திலேயே தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டவர், அந்தக் காலத்திலேயே கருணாநிதியால் பாராட்டப்பட்டார். இருப்பினும் வைகோ மீதான ஈர்ப்பால் அவர் மதிமுகவைத் தொடங்கியபோது அவர் பின்னால் நின்றார்.

தொடர்ந்து வைகோவுடனும் மனக்கசப்பு வர, அதிமுகவில் ஐக்கியமானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு தினகரன் அணிக்குச் சென்றவர், அமமுக உதயமானதும் கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை எனச் சொல்லி தினகரனை விட்டு விலகினார். இப்போது திராவிடப் பேச்சாளர் என்னும் அடைமொழியோடு திமுக மேடைகளில் பேசுகிறார்.

அரசியல் தவிர பள்ளி - கல்லூரி விழாக்களிலும் தொடர்ந்து பேசிவந்தார் நாஞ்சில் சம்பத். அதனால் இலக்கிய மேடைகளும் அவரது வருமானத்துக்குக் கைகொடுத்தன. ஆனால், இப்போது கரோனாவால் பெரிய பேச்சாளர்களே பெருந்துயரத்தில் இருக்கிறார்கள். அரசியல், பட்டிமன்ற சிறுபேச்சாளர்களோ வறுமையான சூழலுக்குள் சென்றுவிட்டனர். கரோனாவால் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், இலக்கிய விழாக்கள், பள்ளி, கல்லூரிகளின் நிகழ்ச்சிகளுக்கும் பேச்சாளர்களை அழைப்பது தடைப்பட்டுக் கிடக்கிறது. இதன் எதிரொலியாக நாஞ்சில் சம்பத் ‘சொல்காப்பியம்’ என்னும் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இதில் தினமும் தனது கருத்துகளையும், உரையையும் வீடியோவாகப் பதிவிட்டு வருகிறார்.

சுகி சிவம், ஞானசம்பந்தன் உள்ளிட்ட பேச்சாளர்கள் பலரும் ஏற்கெனவே யூ டியூப் சேனல்களில் பேசிவரும் நிலையில், கரோனா காலம் நாஞ்சில் சம்பத்தையும் யூடியூப் சேனல் நோக்கி நகர்த்தியிருக்கிறது.

இதுகுறித்து குறிப்பிட்டுள்ள நாஞ்சில் சம்பத், ''கரோனா என்னும் கொடிய வைரஸ் நாட்டை முடக்கியது மட்டுமல்ல. நாஞ்சில் சம்பத்தையும் முடக்கிவிட்டது. மேடைகள் வாய்க்காத சூழலில் எண்ணுகிற எண்ணங்களைப் பதிவு செய்ய ஒரு வடிகால் தேவைப்படவே ‘சொல்காப்பியம்’ சேனலைத் தொடங்கினேன்'' என்றார்.

SCROLL FOR NEXT