கரோனா பொதுமுடக்கக் காலத்தில் வால்பாறை நகரம் இன்னொரு சிரமத்தையும் எதிர்கொள்கிறது. சிங்கவால் குரங்குகளால் ஏற்படும் தொல்லைதான் அது.
அடர் வனத்தில் அபூர்வமாகக் காணப்படும் ஒரு விலங்கினம் சிங்கவால் குரங்கு. கூடலூர், வால்பாறை, பரம்பிக்குளம், சின்னாறு, மூணாறு அடர் வனப்பகுதிகளின் உயரமான மரங்கள்தான் இவற்றின் வசிப்பிடம். பொதுவாகவே மனிதர்களிடமிருந்து இவை விலகியே இருக்கும். காடுகளில் காய்த்திருக்கும் பழங்களைச் சாப்பிட மரங்களைவிட்டு கீழே வந்தாலும் மனிதர்களைக் கண்டால் உடனே சட்டென்று உயரமான மரக்கிளைக்குத் தாவி ஏறிவிடும்.
இந்தக் குரங்குகள் கோவை மாவட்டம், வால்பாறையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுத்தோட்டம் பகுதியில் ஒரு காலத்தில் மிகுதியாக காணப்பட்டன. இங்கு மக்கள் வரவு அதிகமாக, அதிகமாக சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்களை இவற்றுக்குக் கொடுத்து மகிழ்ந்தனர். நாளடைவில் இவை மனிதர்களோடு நட்பாகிவிட்டன. அந்த நட்பில் அப்படியே இங்கிருந்து புறப்பட்டு இப்போது வால்பாறை நகரத்திற்கே வந்துவிட்டன. இங்கு உணவு தேடி வீடுகள், கடைகள், வணிக வளாகங்களுக்குள் புகுந்துவிடுகின்றன.
இதுகுறித்து வால்பாறையைச் சேர்ந்த ஃபெட்ரிக், நம்மிடம் பேசும்போது, “சோலைகளிலிருந்து இந்த சிங்கவால் குரங்குகள் நகரப்பகுதிக்குள் நுழைந்து பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எப்படியும் இந்தப் பகுதியில் 500 குரங்குகளுக்கு மேல் இருக்கும். இவற்றைப் பாதுகாக்க வனத்துறையினர் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கின்றனர். தன்னார்வ அமைப்பு ஒன்றும் இதில் ஈடுபட்டிருக்கிறது.
இக்குரங்குகள் சாலையைக் கடக்கும் சமயங்களில் வாகனங்ளைத் தடுத்து நிறுத்தி, இவை கடந்தபின் அனுமதிப்பது, இவற்றுக்குக் காய், கனிகள் வழங்குவது போன்ற செயல்களை அந்த அமைப்பு செய்துவருகிறது. அதேசமயம், இந்தக் குரங்குகளால் மனிதர்களுக்குப் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.
ஆரம்பத்தில் வனத்தை ஒட்டியுள்ள காமராஜ் நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளில் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்து பொருட்களை இக்குரங்குகள் நாசம் செய்து வந்தன. இதையடுத்து, குடியிருப்புப் பகுதிகளில் இவை நுழையாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இப்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாகச் சாலையில் வாகனங்கள் இல்லை. கடைகள் பெரும்பாலும் பூட்டப்பட்டே இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் வருகையும் இல்லை. எனவே இவை நகரப் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து குடிநீர் குழாயை உடைப்பது, உணவுப் பொருட்களைத் தூக்கிச் செல்வது எனத் தொல்லைகள் கொடுக்கின்றன. எனவே வனத் துறையினர் இவற்றைப் பிடித்துக்கொண்டு போய் அடர்ந்த சோலைகளுக்குள் விட வேண்டும். அத்துடன் இவை ஊருக்குள் புகுந்துவிடாமல் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். அப்போதுதான் மனிதர்களை மறந்து வனத்துடனே இயைந்து வாழும் தன்மைக்கு சிங்கவால் குரங்குகள் வரும்” என்று தெரிவித்தார்.