வலைஞர் பக்கம்

ஒரு புறம் கரோனா; மறுபுறம் கல்விக் கட்டணம் -இரட்டை அச்சுறுத்தல்கள்!

சுபாஷ்

மிகவும் சிக்கலான சூழ்நிலையில் 2020-21 ஆம் கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது. தேர்வு, ஆன்லைன் வகுப்புகள் சார்ந்த குழப்பங்கள் ஓரளவு அடங்கியுள்ள நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தைக் கட்டுமாறு பெற்றோர்களை நச்சரிக்கும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனியார் பள்ளிகள் 75% கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 40 சதவீதக் கட்டணத்தை இப்போது வசூலிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இந்தியா முழுவதும் 26 கோடி பள்ளி மாணவர்களும், 13 லட்சம் பள்ளிகளும் உள்ளன. 3.74 கோடி உயர்கல்வி மாணவர்களும், 993 பல்கலைக்கழகங்கள், 39,953 கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் தனியார் பள்ளிகளில் 29% மாணவர்கள் பயில்கின்றனர். அதாவது 7 கோடி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். உயர் கல்வித்துறையில் 43% தனியார் நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இப்படியாக கல்வியில் தனியார்மயம் விரவிக்கிடக்கிறது. சேவைத் துறையான கல்வியை, சந்தைப் பண்டமாக மாற்றியதன் விளைவாக பேரிடர் காலத்திலும் பெற்றோர்களிடம் வலுக்கட்டாயமாகப் பணம் பெற முயல்கின்றன கல்வி நிறுவனங்கள். மனமுடைந்த பெற்றோர்களின் நம்பிக்கையற்ற குரல்களில் சில...

சென்னையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் ராஜாவின் இரண்டு குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். ஊரடங்கால் இரு மாதங்களாக கடை அடைக்கப்பட்டு வருமானம் இன்றித் தவித்துவருகிறார் ராஜா. அதனால் கல்விக் கட்டணத்தைக் கட்ட இயலாது என்று கூறுகிறார். பள்ளி நிர்வாகத்திடம் கால அவகாசம் கேட்பதைத் தவிர, வேறுவழி இல்லை என்கிறார்.

கோவையைச் சேர்ந்த இரண்டாவது படிக்கும் மாணவியின் பெற்றோர் முதல் தவணைக் கட்டணமாக ரூ. 30,000 செலுத்தியுள்ளனர். அதுவும் செலுத்தவில்லை என்றால், ஆன்லைன் வகுப்பு நடத்தப்படாது என்ற பள்ளி நிர்வாகத்தின் வற்புறுத்தியதன் பேரில் கட்டணத்தை கட்டியதாகப் பெற்றோர் கூறுகின்றனர்

சென்னையைச் சேர்ந்த அரி என்ற மாணவரின் தந்தை டயாலிசிஸ் நோயாளி. தாய் இல்லை. இந்த நேரத்தில் வருமானமும் இல்லாததால் ஊரடங்குக்குப் பிறகு கல்விக் கட்டணம் செலுத்தமுடியாததால் படிப்பைத் தொடர்வதே கடினம் என்கிறார்.

இதுதான்இந்தியாவிலுள்ள பல்வேறு மாணவர்களின் உண்மை நிலை. இப்படி நாடு முழுவதும் மறைமுகமாகவும் நேரடியாகவும் கட்டாயத்தின் பேரில் பெற்றோர்களிடம் கட்டண வசூல் வேட்டையை தொடங்கியுள்ளன தனியார் கல்வி நிறுவனங்கள்.

பாதகங்கள்

ஊரடங்கால் வேலையில்லாமல் வருமானம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் குடும்பங்களால், தனியார் பள்ளிகளின் கட்டணத்தைக் கட்ட முடியாத நிலையே உள்ளது. இதன் விளைவாக கட்டணம் கட்டாத மாணவர்களை மட்டும் ஆன்லைன் வகுப்புகளிலிருந்து விலக்கி வைக்கும் நவீனத் தீண்டாமையை சில தனியார் பள்ளிகள் கடைப்பிடிக்கின்றன. ஊரடங்கு முடிந்தபிறகும்கூட, வேலையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினரால் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் கடன் வாங்கும் நிலை ஏற்படும். பல குழந்தைகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் இடைநிற்கும் பேராபத்தும் உள்ளது.

அது மட்டுமில்லாமல்தன் நண்பர்கள் கல்வி நிலையத்துக்குச் செல்லும்போது கட்டணம் கட்டாததால், தான் மட்டும் போக முடியவில்லையே என்ற எண்ணம் ஏழை மாணவர்களிடம் உளவியல்ரீதியான பிரச்சினைகளை உருவாக்கும் சாத்தியம் அதிகம்.

இது மட்டுமில்லாமல் அவசர அவசரமாக பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டு தனியார் கல்லூரிகள் கட்டணம் வசூலிக்கவும் வழிவகுத்துள்ளது அரசு. எதிர்காலத்தின் மீதுள்ள பயத்தால் மாணவர்களும் பெற்றோர்களும் கல்லூரிகளில் சேரவும் சேர்க்கவும் முயன்று கடனாளி ஆவார்கள். அதுவும் முடியாத மாணவர்கள் கல்வித்துறையிலிருந்தே விலக்கப்படுவார்கள்.

மாற்றமே தீர்வு

கரோனா பேரிடர் முடிந்து பொருளாதார நிலைமை சீரடையும்வரை அனைத்து மாணவர்களுக்கும் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும். நிலைமை சரியாகும்வரை அனைத்து கல்விக் கட்டணங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். மாணவர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்க வேண்டும். ஊக்கத்தொகைகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

கல்வியில் சிறந்து விளங்கும் பின்லாந்து , கியூபா போன்ற நாடுகளில் அரசால் இலவசமாக்க் கொடுக்கப்படும் சேவைப் பட்டியலில் கல்வி உள்ளது. கரோனா பேரிடர் காலத்தை தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ள மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும். இப்போதாவது மக்களுக்கு உதவும் முன்னோடி நடவடிக்கைகளை எடுக்க முயல வேண்டும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: sram72451@gmail.com

SCROLL FOR NEXT