சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே குருவியைப் பாதுகாக்க ஒரு மாதமாக கிராமமக்கள் இருளில் வாழ்ந்து வருகின்னர்.
மறவமங்கலம் அருகே சேதம்பல் ஊராட்சி பொத்தகுடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 20-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. அனைத்து தெருவிளக்குகளையும் இயக்குவதற்கான ஸ்விட்ச் பெட்டி ஒரே ஒரு மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த ஸ்விட்ச் பெட்டியில் குருவி ஒன்று ஒரு மாதத்திற்கு முன் கூடு கட்டியிருந்தது. அதை கலைக்க மனமின்றி கிராமமக்கள் அப்படியே விட்டுவிட்டனர். இந்நிலையில் குருவி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறித்தது.
அந்த குருவியையும், அதன் குஞ்சுகளையும் அக்கிராம இளைஞர்கள் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர்.
மேலும் குருருவிகளுக்காக பெட்டியில் உள்ள தெருவிளக்கு ஸ்விட்ச்சையும் இயக்கவில்லை. இதனால் ஒரு மாதத்திற்கு மேலாக தெருவிளக்குகள் எரியாமல் அக்கிராமமே இருளில் உள்ளது.
வேட்டையாடுதல், மொபைல் டவர் போன்றவற்றால் குருவி இனங்கள் அழிந்து வரும்நிலையில், குருவிகளை பாதுகாக்க இருளில் வாழும் கிராமமக்களை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பொத்தகுடி முருகானந்தம் கூறுகையில், ‘‘குருவி இனங்கள் அரிதாகி வருகின்றன. அந்த இனங்களைப் பாதுகாப்பது நமது கடமை. இதற்காக நாங்கள் தெருவிளக்கு சுவிட்ச்சை இயக்கவில்லை.
குருவி தனது குஞ்சுகளுடன் அங்கிருந்து பறந்தவுடன் ஸ்விட்சை இயக்கலாம் என முடிவு செய்துள்ளோம். இதனால் ஒரு மாதத்திற்கு மேலாக தெருவிளக்குகள் எரியாமல் இருளில் வாழ்கிறோம்,’’ என்று கூறினார்.