கர்நாடகாவில் புகைப்படக் கலைஞர் ஒருவர் தன் மகன்களுக்கு கெனான், நிகான், எப்சன் என கேமிரா நிறுவனங்களின் பெயர்களை சூட்டி, கேமிரா வடிவிலே ஆடம்பரமாக வீடு கட்டியுள்ளார்.
அவரது தொழில் பற்றை வெளிப்படுத்தும் கேமிரா வீட்டின் முன்னால் நின்று நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வியப்போடு 'செல்பி' எடுப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் ரவி ஹொங்கல் (49). புகைப்பட கலைஞரான இவர் அங்கு 'ராணி' என்ற பெயரில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அவர் தன் மகன்கள் 3 பேருக்கும் கெனான் (20), நிகான் (18), எப்சன் (14) என கேமிரா நிறுவனங்களின் பெயர்களை சூட்டியுள்ளார். மேலும் அரும்பாடுபட்டு ரூ. 71 லட்ச செலவில் கேமிரா வடிவிலே மிக நுட்பமான கலைநயத்தோடு புதிதாக வீடு கட்டி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து ரவி ஹொங்கல் கூறுகையில், '' என் அண்ணன் பிரகாஷ் புகைப்படக் கலைஞராக இருந்ததால் எனக்கும் சிறுவயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, விடுமுறை நாட்களில் அண்ணனுடன் திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கச் செல்வேன். நன்றாக புகைப்படம் எடுக்கக் கற்றுக்கொண்ட பின்னர், பெலகாவியில் 'சித்தார்த்' என்ற பெயரில் ஸ்டுடியோ தொடங்கினேன். திருமணம் முடிந்ததும் என் மனைவி ஹிப்ரா ராணி பெயரைக் குறிக்கும் வகையில், ஸ்டுடியோவின் பெயரை 'ராணி' என மாற்றினேன்.
திருமணம், குடும்ப நிகழ்வுகளுக்கு வித்தியாசமான ரசனையோடு புகைப்படம் எடுத்துக் கொடுப்பேன். இதனால் எனக்கு பெலகாவி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்தும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு மகன் பிறந்த போது 'கெனான்' என கேமிராவின் பெயரைச் சூட்ட விரும்பினேன். குடும்பத்தில் பெரியவர்கள் எதிர்த்த போதும், என் மனைவி அந்தப் பெயரையே வைக்கலாம் என ஆதரவு கொடுத்தார்.
அதனால் மூத்த மகனுக்கு 'கெனான்' பெயர் சூட்டினேன். அதற்கு கிடைத்த வரவேற்பில் அடுத்த மகனுக்கு ' நிகான்' என்றும், கடைசி மகனுக்கு 'எப்சன்' எனவும் பெயர் சூட்டினேன். பள்ளியில் சேர்த்த போது கேமிரா பெயராக இருப்பதால் பலரும் கிண்டல் செய்தனர்.
காலப்போக்கில் பெயர்கள் வித்தியாசமாக இருப்பதாக பாராட்டுகின்றனர். எனக்கும், என் பிள்ளைகளுக்கும் தொழிலின் மீது இருக்கும் பற்றின் காரணமாக அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.
சாஸ்திரி நகரில் இருக்கும் இடத்தில் கேமிரா வடிவிலேயே வீடு கட்ட வேண்டும் என கடந்த ஆண்டு முடிவெடுத்தேன். பெங்களூருவில் கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றும் என் மனைவியின் சகோதரர் யெல்லானி ஆர் ஜாதவிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். பின்னர் இருவரும் திட்டமிட்டு கேமிரா வடிவிலே வீடு கட்டுவதற்கான வடிவமைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டோம்.
வீட்டை வெளியே இருந்து பார்த்தால் கேமிரா லென்ஸ், ரீல் ஆகியவை தெரியும் வகையிலும், உள்ளேயும் ஃபிளாஷ் லைட், க்ளிக் பட்டன் போன்ற பாகங்களை போலவே மிகவும் சிரமப்பட்டு கட்டினோம்.
வீட்டின் முதல் தளம் எப்சன் பிரிண்ட்டர் வடிவிலும், 2ம் தளம் நிகான் கேமிராவின் பாடி வடிவிலும், 3ம் தளம் கெனான் கேமிராவின் பிளாஷ் வடிவிலும் கட்டி முடித்தோம். ஜன்னல், கதவு, மின் விளக்குகள், டைல்ஸ், குழாய்கள் ஆகியவையும் கேமிரா உதிரி பாகங்கள் வடிவிலே கட்டி இருக்கிறோம்.
எங்களுக்குத் தேவையான கட்டுமான பொருட்களை பெங்களூரு, மும்பை, ஹூப்ளி, மங்களூரு ஆகிய இடங்களில் வரவழைத்து கட்டினோம். என்னை படம் பிடித்து இந்த சமூகத்துக்கு அடையாளம் காட்டிய கேமிராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த வீட்டை கட்டியுள்ளேன். இந்த வீட்டை சாதாரண வடிவில் கட்டி இருந்தால் 50 முதல் முதல் 60 லட்ச ரூபாய் செலவுஆகியிருக்கும். கேமிரா வடிவில் கட்டியதால் 71.63 லட்ச ரூபாய் செலவு ஆனது.
கரோனா நோய் பரவி வருவதால் மிக எளிமையாகவே திறப்பு விழா நடத்தினேன். இருப்பிலும் சமூக வலைத்தளங்களில் என் வீட்டின் புகைப்படம் வைரலாக பரவியதால், தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்பி எடுத்துச் செல்கின்றனர்.
இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சமூக வளைத்தளங்களில் என்னை பாராட்டி பதிவிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது''என்றார்.