வலைஞர் பக்கம்

பணப்புழக்கம் இல்லாமல் இயல்புநிலை சாத்தியமில்லை!

எல்.ரேணுகா தேவி

உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸின் தாக்கம் பெரும்பான்மையான ஏழை மக்களை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்கிறது. இந்தப் பேரிடர் காலத்தில், அரசு மக்களுக்கு நேரடியாகப் பண உதவியை வழங்குவதே மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குச் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. அப்படியான ஏற்பாடே பெரும்பான்மையான மக்களுக்கு மிகவும் உதவியாகவும் அமைந்துள்ளது.

மக்களுக்கு நேரடியாகப் பணம் வழங்கப்படும்போது அவர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள், தொலைபேசி ரீசார்ஜ் போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இந்த அடிப்படையில் மக்களுக்கு நேரடியாக நிவாரண நிதி வழங்கும் நடைமுறையை உலக அளவில் 90 நாடுகள் செயல்படுத்தியுள்ளன என்கிறது உலக வங்கி.

வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களிடம் பணப்புழக்கம் முற்றாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் மக்களின் கைகளில் பணம் இருப்பதை அரசு உறுதிசெய்வதால் மட்டுமே அவர்களால் நிச்சயமற்ற சூழ்நிலைகளை எளிதாகக் கடந்துவர முடியும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இவ்வாறு மக்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நேரடியாகப் பணம் வழங்கும் திட்டத்தை உலகின் வளர்ந்த நாடுகள் தொடங்கி, பல்வேறு நாடுகள் அமல்படுத்தியுள்ளன.

அமெரிக்காவில் ஒருவருக்கு 1,200 டாலர்

உலகின் வல்லரசு நாடு என அழைக்கப்படும் அமெரிக்காதான் உலக அளவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருக்கிறது. அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு மொத்தம் இரண்டு லட்சம் கோடி டாலர் தொகையை நிவாரணமாக அறிவித்துள்ளது. இதனால், 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1,200 டாலர்கள் கிடைக்கும். இது இந்திய மதிப்பில் சுமார் 90 ஆயிரம் ரூபாய். பதினாறு வயதுக்குக் கீழ் உள்ள ஒருவருக்கு 500 டாலர்கள் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமணமானவர்களுக்கு 2,400 டாலர்கள் நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகை ஒவ்வொரு தனிநபரின் ஆண்டு வருமானம் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முழுமையாகவோ குறைத்தோ வழங்கப்படுகிறது.

கனடாவில் இரண்டாயிரம் டாலர்கள்

கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியவுடனே பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அந்நாட்டில் கரோனா பரவல் காரணமாக வேலையிழந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் இரண்டாயிரம் கனடா டாலர்கள் வழங்கப்படுகின்றன. இத்தொகை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு உதவ 9 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க 7.5 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. வீடில்லாமல் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 157.5 மில்லியன் டாலர் தொகையும் முகாம்களில் தங்கியுள்ள பெண்கள், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு 50 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்துக்கு ஒரு மில்லியன்

தென் கொரியா நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 70 சதவீதம் குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் தென்கொரிய நிதி (KRW) வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 62 ஆயிரத்துக்கும் மேல். தென்கொரிய அரசின் இத்தொகை வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள 30 சதவீதத்தினருக்குப் பொருந்தாது.

ஜப்பானில் அனைவருக்கும் ஒரு லட்சம்

ஜப்பான் நாட்டில் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள், பிறநாட்டவர்கள், அகதிகள் முகாமில் வசிப்பவர்கள், சுற்றுலா விசாவில் ஜப்பானுக்கு வந்து நீண்டகாலம் தங்கியிருப்பவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஜப்பான் அரசு ஒரு லட்சம் ஜப்பானிய யென்னை வழங்கியுள்ளது.

அதேபோல் கடனுதவி தேவைப்படுபவர்களுக்கு இரண்டு லட்சம் ஜப்பானிய யென்னை வட்டியில்லாக் கடனாக வழங்குகிறது. இத்தொகைக்கு மேல் கடன் தேவைப்படுபவர்களுக்கு ஆறு லட்சம் ஜப்பானிய யென்வரை தவணை முறையில் வட்டியில்லாக் கடனாக வழங்குகிறது. இந்தக் கடன் தொகையை ஒரு வருடத்துக்குப் பிறகு திருப்பிச் செலுத்தினால் போதுமாம். இந்த நிவாரணத் தொகைக்காக ஜப்பானிய அரசு ஒட்டுமொத்தமாக இரண்டு லட்சம் கோடி ஜப்பானிய யென்களை அறிவித்துள்ளது. இதற்காக அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை ஒதுக்கியுள்ளது.

சீனாவில் வவுச்சர் திட்டம்

சீனாவில் நோய்த்தொற்று அதிகமாக உள்ள முப்பது நகரங்களில் ஐந்து பில்லியன் யுவான் அளவுக்கு ஒவ்வொரு குடிமக்களுக்கும் வவுச்சர் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பணத்துக்குப் பதில் இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி, பொருட்களை வாங்க முடியும். அமெரிக்க டாலர் மதிப்பில் 704 மில்லியன் டாலர் அளவுக்கு சீன அரசு ஒதுக்கியுள்ளது. அதேநேரம் மக்களுக்கு இரண்டாயிரம் யுவான் தொகை வழங்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. சீனாவின் ஹாங்காங் தன்னாட்சி பிரதேசத்தில் 18 வயது நிரம்பிய ஹாங்காங் குடிமக்களுக்கு 10,000 ஹாங்காங் டாலர்கள் வழங்கப்படுகின்றன. இந்திய மதிப்பில் இது சுமார் 97 ஆயிரம் ரூபாய்.

பாகிஸ்தானில் ரூ.12 ஆயிரம்

மலேசியா கரோனா வைரஸ் நிவாரணப் பணிகளுக்காக 53 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. இதில் 2.3 பில்லியன் டாலர் தொகையை மக்களுக்கு நேரடியாக வழங்க ஒதுக்கியுள்ளது. மாதம் 4,000 மலேசியா ரிங்கட் வருமானம் கொண்டுள்ள பத்து லட்சம் குடும்பங்களுக்கு 1,600 மலேசிய ரிங்கட் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 27 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூர் அரசு மக்களுக்கு நேரடியாக நிவாரண நிதி வழங்குவதற்காக மட்டும் 1.1 பில்லியன் சிங்கப்பூர் டாலர் தொகையை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் 21 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் 600 சிங்கப்பூர் டாலர்கள் வழங்கப்படும். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் இது 32 ஆயிரம் ரூபாய்.

உலக வங்கி, ஆசிய வங்கியின் உதவியுடன் பாகிஸ்தானில் கரோன நிவாரண நிதிக்கு ரூபாய் 150 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள 6.7 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். இவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மத்திய அரசு கரோனா நிவாரண நிதித் தொகுப்பாக ரூபாய் 1.7 லட்சம் கோடியை அறிவித்துள்ளது. இதன்மூலம் ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜன திட்ட’த்தின் கீழ்வரும் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல் ‘ஜன் தன்’ திட்டத்தில் பதிவுசெய்த 19.86 கோடிப் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.

‘கிசான் யோஜன திட்ட’த்தில் பதிவு செய்த 8.69 கோடி விவசாயிகளுக்கு ரூ.2000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. நூறு நாள் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்குக் கூலி உயர்த்தப்படும், அறுபது வயதைக் கடந்தவர்கள், கைம்பெண்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வங்கியில் நேரடியாக ரூ.1000 ஒருமுறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கரோனா பேரிடர் காலத்தில் அறிவித்துள்ள இத்தொகை நாட்டின் கடந்த 2019-20 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.83 சதவீதம் மட்டுமே. மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இத்தொகை மிக மிகக் குறைவு என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டமிடலும் சமூகநலத் திட்டங்களை விரிவுபடுத்துவதும் கல்வி மற்றும் சுகாதார திட்டங்களுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதுமே வருங்காலம் குறித்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கும்.

தொடர்புக்கு:renugadevi.l@hindutamil.co.in

SCROLL FOR NEXT