சுந்தரேசன் காப்பகம் வந்தபோது 
வலைஞர் பக்கம்

பெற்ற பிள்ளைகள்கூட இப்படிப் பார்த்துக்கொள்ள மாட்டார்கள்!- கால் இழந்த முதியவருக்குக் கைகொடுத்த மனிதர்கள்

கா.சு.வேலாயுதன்

மிகக் குறுகிய காலத்தில் எத்தனையோ பேரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது கரோனா. இந்தத் துயரத்துக்கு நடுவில், சக மனிதர்களுக்குத் தோள் கொடுக்கும் அற்புதமான மனிதர்களையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில், ஒரு கால் செயலிழந்து, இன்னொரு கால் கணுக்காலுக்குக் கீழே வெட்டி எடுக்கப்பட்ட நிலையிலும் மனிதாபிமானம் கொண்ட மனிதர்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறார் சுந்தரேசன் எனும் முதியவர்.

65 வயதான சுந்தேரசனுக்குப் பூர்விகம் கேரள மாநிலம் கோழிக்கோடு. 40 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்தவர், ஊர், ஊராகத் திரிந்தார். அழகுக்கலை பயிற்சி பெற்றவர் புதுக்கோட்டை அருகே உள்ள கறம்பக்குடிக்கு வந்திருக்கிறார். அங்கேயே, தான் கற்ற அழகுக்கலை மூலம் பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார்.

உற்றார் உறவினர் யாரும் இல்லாத நிலையில், கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது தனது சொந்த ஊருக்கே சென்றுவிடலாம் என்று புறப்பட்டு வந்துள்ளார். பொதுமுடக்கம் காரணமாகப் பொள்ளாச்சியைத் தாண்டிச் செல்லப் பேருந்துகள் இல்லாததால் பேருந்து நிலையத்திலேயே அலைந்திருக்கிறார் சுந்தரேசன். பின்னர் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஏப்ரல், மே மாதங்களில் அங்கேயே தங்கியிருந்தவருக்குத் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. நீரிழிவு நோயாளியான இவரது இடது காலில் சிறு புண் இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அது பெரிதாகிச் சீழ் பிடித்து அழுகத் தொடங்கியது. ஏற்கெனவே வலது கால் செயலிழந்தவர் என்பதால் கடும் துயரத்துக்குள்ளானார். பொள்ளாச்சி மாக்கனாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தாய்வழி தமிழ் தொடக்கப்பள்ளிச் செயலாளர் வே.பாரதி, இவரது நிலையைப் பார்த்து உதவ முன்வந்தார். முதலில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுந்தரேசன், பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இடது காலில் கணுக்கால் அளவு, அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது.

இவரைப் பற்றிய விவரங்களை பொள்ளாச்சி சப்-கலெக்டர் இரா.வைத்தியநாதனின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார் வே.பாரதி. இதையடுத்துக் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமாருக்குக் கடிதம் மூலம் சப்-கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் இயங்கிவரும் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் இவரைச் சேர்த்துப் பராமரிக்குமாறு ஆணையர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். ஜூலை 7-ம் தேதி அந்தக் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சுந்தரேசன், தற்போது இல்லவாசிகளின் அரவணைப்பில் இருக்கிறார்.

இதே இல்லவாசியான ஆறுமுகம் இவரை அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொள்கிறார். ஆறுமுகத்துக்கு இரண்டு கால்களும் இல்லை. சக்கர நாற்காலியில் இருந்தபடியே, சுந்தரேசனை சக்கர நாற்காலியில் அமர வைத்து நகர்த்த உதவுவதும், ஆறுதல்படுத்துவதுமாக அனைவரின் மனதையும் நெகிழச்செய்கிறார் ஆறுமுகம்.

சுந்தரேசன், ஆறுமுகம் தற்போது

இதுகுறித்துக் காப்பகப் பராமரிப்பாளர் கி.கங்காதரன் கூறுகையில், “தனக்கென சொந்தம் என யாருமே இல்லை என்றே சொல்கிறார் சுந்தரேசன். எனினும், இங்கு சக மனிதர்கள் காட்டும் அன்பில், மனதளவில் நன்றாகத் தேறியிருக்கிறார்.

வரும்போது பையில் ரூ. 500 வைத்திருந்தார். அதை ரூ.10, ரூ.20 நோட்டுகளாகச் சில்லறையாக்கி அவர் பாக்கெட்டில் அன்றாடம் போடுகிறோம். தன் அன்றாடச் செலவுகளுக்குத் தனது பாக்கெட்டிலிருந்து எடுத்துத் தருகிறார். தன் காசைக் கொடுத்துத்தான் டீ, காபி சாப்பிடுகிறோம் என்பதில் இவருக்கு உள்ளூர ஒரு பூரிப்பு. நம்பிக்கை. இதுவே இவரைக் காப்பாற்றிவிடும் என்று நம்புகிறோம்” என்றார்.

நம்மிடம் பேசிய சுந்தரேசன், “இரண்டு காலும் போயி கையிலும் காசில்லாத நிலையில் இருக்கேன். பெத்த புள்ளைங்க இருந்திருந்தாக்கூட என்னை இப்படிக் கவனிச்சுக் காப்பாத்தியிருக்க மாட்டாங்க. இவங்கதான் என் உறவுகள்” என்று கண்ணீர் ததும்பக் கையெடுத்துக் கும்பிட்டார்.

அந்தக் கணத்தில், மனிதம் மரித்துவிடவில்லை. இதோ உயிரோடுதான் இருக்கிறது என்று தோன்றியது!

SCROLL FOR NEXT