உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தனிநபர் இடைவெளி வலியுறுத்தப்பட்டது. இது கடுமையான சமூக நெருக்கடியை எளிய மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியது. பலதரப்பட்ட மக்கள் வேலையிழந்தனர். குறிப்பாக வீட்டுவேலைத் தொழிலாளர்கள். ஊரடங்கால் உலகம் முழுவதும் 5 கோடியே 50 லட்சம் வீட்டுவேலைத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.
வேலையிழந்துள்ள வீட்டுவேலைத் தொழிலாளர்களில் மூன்று கோடியே 70 லட்சம் பேர் பெண்களே. வேலையிழப்பு, வேலைநேரம் குறைப்பு, சம்பள வெட்டு எனப் பலவிதங்களில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய பசிபிக் பகுதிகளில்தான் வீட்டுவேலைத் தொழிலாளர்களின் வேலையிழப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது. 2020 ஜூன் மாதத்தில் மட்டும் 76 சதவீத வீட்டுவேலைத் தொழிலாளர்கள் இப்பகுதிகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீதியில் வீசப்பட்ட வாழ்வு
உலக அளவில் பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் பத்து சதவீதம் மட்டுமே. மீதமுள்ள பெரும்பான்மையான தொழிலாளர்கள் இந்தக் கரோனா காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. குறிப்பாக மற்ற நாடுகளில் பணியாற்றிவந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இக்காலத்தில் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் உரிமையாளர்களின் வீட்டில் குழந்தைகள், பெரியோர் என அனைவரும் வீட்டில் இருப்பதால் வீட்டிலேயே தங்கி வேலைசெய்யும் தொழிலாளர்களின் வேலை மேலும் அதிகரித்துள்ளது. ஓய்வு ஏதுமின்றி நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர்.
சிலர் எங்கே இவர்களால் நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தாலும் ஊதியம் கொடுக்க முடியாது என்பதாலும் வேலையை விட்டு அனுப்பப்படுகிறார்கள் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அயல்நாட்டில் நிர்க்கதியாக விடப்படும் புலம்பெயர் வீட்டுவேலைத் தொழிலாளர்கள் வீடின்றி இருப்பதால் பல்வேறு இன்னல்களைச் சந்திப்பதோடு பலர் கடத்தப்படும் அபாயமும் உள்ளது என எச்சரிக்கை செய்கிறது அறிக்கை. அயல்நாட்டில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்துப் பல்வேறு செய்திகள் முன்பு வெளிவந்துள்ளன. தற்போது அவர்கள் மேலும் சிக்கலான ஒரு கட்டத்தில் இருப்பதையே அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தமிழக நிலைமை
இந்தியா முழுவதும் சுமார் ஒன்பது கோடி பேர் வீட்டுவேலைத் தொழிலாளர்களாக உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 20 லட்சம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. வீட்டுவேலை போலவே அலுவலகங்களில் தூய்மைப் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கால் பெரும்பாலான அலுவலகங்கள் செயல்படாத நிலையில் அவற்றில் பணியாற்றிவந்த தூய்மைப் பணியாளர்களும் வருமானமின்றி சிரமப்படுகின்றனர். தமிழகத்தில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களுக்காக, பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ‘தமிழ்நாடு வீட்டுவேலை பணியாளர் நலவாரியம்’ அமைக்கப்பட்டது. ஆனாலும், நலவாரியம் குறித்த போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தாததால் வீட்டுவேலைத் தொழிலாளர்களில் பலர் நலவாரியத்தில் இணையவில்லை.
வீட்டுவேலை செய்பவர்கள், கட்டுமானப் பணி, தையல், சாலையோர வியாபாரம், ஆட்டோ ஓட்டுநர் எனத் தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 50 லட்சம் பேருக்குமேல் அமைப்புசாரா பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அமைப்புசாரா பணியில் ஈடுபடுவோரில் 72 லட்சம் பேர் மட்டுமே நலவாரியங்களில் பதிவு செய்துள்ளனர். அதில் 28 லட்சம் பேர் மட்டும் புதுப்பித்திருக்கின்றனர். இப்படிப் புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே அரசு அறிவிக்கும் நலத்திட்ட உதவி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கும் போதுமான நிவாரணம் வழங்கப்படவில்லை. நூறு நாட்களைக் கடந்துவிட்ட ஊரடங்கு காலத்தில் மொத்தமாகவே ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணமாக நலவாரியத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை ஆகிய மாவடங்களில் மட்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நலவாரியங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களின் உறுப்பினர் சேர்க்கை அவர்கள் வேலை செய்யும் ஊழியர் சங்கத்தின் மூலமாகவே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியம், அது தொடர்பான பயன்கள் குறித்து அரசுத் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது அவசியம் என்பதைக் கரோனா பேரிடர் காலம் உணர்த்தியுள்ளது.
எல்லா நிலைகளிலும் எல்லோரும் கரோனாவின் தாக்கத்தாலும் ஊரடங்காலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள வீட்டுவேலைத் தொழிலாளர்கள் போன்ற பிரிவினருக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்க வேண்டியது அரசின் கடமை.
ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவே இப்போது கரோனாவை எதிர்கொள்ள இருக்கும் ஒரே மருந்தாக உள்ளது. சொற்ப வருமானமும் இன்றி உணவுக்கே வழியில்லாமல் போனால் அது சமூகத்தை மேலும் நோயுற்றதாக மாற்றிவிடும். நோய்த்தொற்றை மட்டுமல்ல, எளிய மக்களின் வாழ்வைத் தொற்றியுள்ள இந்த அவலத்தைப் போக்குவதும் காலத்தின் தேவையே.