வலைஞர் பக்கம்

ரசிகர்களின் அன்பே ஊதியம்!

வா.ரவிக்குமார்

வெவ்வேறு வகையான தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் ஊரடங்கால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர். இவர்களில் ஓவியர்கள், சிற்பிகள், இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள் போன்ற பல பிரிவினரும் அடங்குவர். உலக அளவில் செயல்படும் ‘லிவிட்’ (Livit App) எனும் செயலி இசைக் கலைஞர்களையும் வாத்தியக் கலைஞர்களையும் ரசிகர்களையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது. இதில் இணையும் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ‘ஸ்டிரீமர்’ என அழைக்கப்படுகிறார். இவரோடு இணையவழியில் ரசிகர்கள் நிகழ்த்தும் நிகழ்ச்சியின் மூலமாக இந்தச் செயலிக்கு வரும் வருமானத்திலிருந்து இசைக் கலைஞர்களும் பயனடைகின்றனர். அண்மையில் இந்தச் செயலியில் ஸ்ட்ரீமராக இணைந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷில்வி ஷாரன்.

பன்முக இசை

பாரம்பரிய இந்தியக் கலைகளோடு சில தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் மேற்கத்திய இசையிலும் பாடிவருபவர் பின்னணிப் பாடகி ஷில்வி ஷாரன். பாப், ப்ளூஸ், ராக், மேற்குலகச் செவ்வியல் பாணி இசை போன்றவற்றில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பவர் ஷில்வி.

ஹாரிஸ் ஜெயராஜ், தரண், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோரின் இசையில் பாடியிருக்கும் ஷில்வி, இளையராஜா இசையில் வெளிவந்த ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தின் இசை வெளியீட்டின்போது, புகழ்பெற்ற சிம்பொனி இசைக் குழுக்களில் ஒன்றான புடாபெஸ்ட் இசைக் குழுவினருடன் இணைந்து பாடியிருக்கிறார்.

வியன்னா பல்கலைக்கழக இசைக் குழுவில் பங்கெடுத்துப் பாடியிருக்கும் இவர், ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தில் பாடகி பாத்திரத்தில் நடித்தார். ‘கொலைகாரன்’ திரைப்படத்தின் முத்திரைப் பாடலில் ஒலிக்கும் குரல் இவருடையதுதான். மேற்குலக இசையையும் இந்திய இசையையும் ஒரே புள்ளியில் சங்கமிக்க வைக்கும் இவருடைய பாணிக்கு யூடியூபில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

அன்பால் கிடைக்கும் ஊதியம்

இணையவழியில் பாடகர்கள், இசைக் கலைஞர்களுக்கென்றே உலக அளவில் செயல்படுவது லிவிட் செயலி. இதில் ‘ஸ்ட்ரீமராக’ அண்மையில் இணைந்துள்ளார் ஷில்வி. தினமும் நான்கு மணிநேரம் இந்தச் செயலியின் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் ஷில்வியோடு அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இவரோடு இசை குறித்த உரையாடல்களை அந்நாட்டு கலைஞர்களும் இசை ஆர்வலர்களும் நடத்துகின்றனர்.

“உலகத்தின் பல பகுதிகளில் இருக்கும் ரசிகர்களும் கலைஞர்களும் தினம் தினம் என்னை இணையவழியில் சந்திக்கும்போதும் உரையாடும்போதும் என் மீது பெரும் அன்பைப் பொழிவார்கள். என்னால் ஒரு நாள் ஸ்டீரிம் செய்யமுடியாது என்று அறிவித்தாலும் அதற்காக என் மீது பொய்க்கோபம் காட்டும் ரசிகர்கள் எனக்கு உலகம் முழுவதும் உண்டாகியிருப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. என்னிடம் இப்படி அன்பைப் பொழிபவர்களிடமிருந்து என்னுடைய பங்களிப்புக்காக அவர்களின் அன்பை ‘பேபி-காயின்’களாகத் தருகின்றனர். இந்த ‘பேபி-காயின்’களை அடிப்படையாகக் கொண்டு எனக்கான மாத ஊதியத்தை லிவிட் செயலி நிறுவனம் எனக்கு அளிக்கிறது.

இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளை கரோனா ஊரடங்கால் இசைக் கலைஞர்கள் இழந்திருக்கும் இந்த வேளையில், உலக அளவில் செயல்படும் லிவிட் செயலியின் மூலம் இசைக் கலைஞர்கள் வருமானமும் ஈட்டமுடியும் என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்?” என்கிறார் ஷில்வி.

லிவிட் செயலியை டவுன்லோடு செய்ய:

SCROLL FOR NEXT