வலைஞர் பக்கம்

கோவிட்டும் நானும் 4- பார்வையை மாற்றிய கரோனா

செய்திப்பிரிவு

புதுடெல்லியைச் சேர்ந்த வணிகர் ரோஹித், இப்போது தன் மகளுடன் பாம்பும் ஏணியும் விளையாட்டை விளையாடிவருகிறார். வீட்டிலிருக்கும்போது பெற்றோர்கள்தானே குழந்தைகளுடன் விளையாட முடியும், வேறு யார் விளையாடுவார்கள் என்றுதானே கேட்கிறீர்கள். இல்லை, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர் ரோஹித். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொள்கிறார்:

கடைசி நேர சஸ்பென்ஸ்

கோவிட்-19 என்னுடைய பார்வையை மாற்றிவிட்டது. குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் மிக முக்கியம் என்பதை இப்போது நான் உணர்ந்துவிட்டேன்.

பிப்ரவரி மாதம் இத்தாலியில் இருந்து திரும்பியவுடன் காய்ச்சலும் தொண்டை எரிச்சலும் தொடங்கின. இது சாதாரணக் காய்ச்சல்தான் என்று என்னுடைய மருத்துவர் கூறினார். ஆனால், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியாத நிலையில், ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் நானே சென்று சேர்ந்துகொண்டேன். என்னுடன் இரண்டு பேர் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் கோவிட்-19 நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்தபோது, நானும் பையை எல்லாம் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தேன். ஆனால், நீங்கள் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறீர்கள் என்றார் மருத்துவர்.

சப்தர்ஜங் மருத்துவமனையில் பாதுகாப்புக் கவச உடை அணிந்த மூன்று மருத்துவர்கள், எனக்குக் கோவிட்-19 இருப்பதாகக் கூறினார்கள். அதேநேரம் என்னை அச்சுறுத்தாமல் மனநல ஆலோசனையும் வழங்கினார்கள். இடைப்பட்ட காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த 50 பேரும் பரிசோதிக்கப்பட்டார்கள். யாருக்கும் கோவிட்-19 இல்லை.

மருத்துவக் கவனிப்பு

மூன்றாவது நாளில் இடைவிடாது இருமத் தொடங்கினேன். ஆனால், செல்போனை அணைப்பதற்கு வழியே இல்லை. ஏனென்றால், என் வீட்டினருடன் பேசுவதற்கான ஒரே வழி, அதுவாக மட்டுமே இருந்தது.

கோவிட்-19 இந்தியாவில் அப்போதுதான் பரவத் தொடங்கியிருந்தது என்பதால், என்ன சிகிச்சை அளிப்பது என்பது குறித்து மருத்துவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் என்னை மிகவும் கவனமாகவும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை உடனடியாகத் திட்டமிடுபவர்களாகவும் இருந்தார்கள். காய்ச்சலுக்கு எதிரான மருந்துகளைக் கொடுத்தார்கள். எளிமையான உணவு, பால் போன்றவை தரப்பட்டன.

மருத்துவமனையில் இருந்த காலத்தில் என்னுடைய குழந்தைகளை வீடியோ கால் வழியாக மட்டுமே பார்க்கவும் பேசவும் முடியும். வீடு திரும்பிய பிறகும் நான் தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டேன். அப்போதும்கூட அவர்களுடன் நெருக்கமாக இருக்க முடியவில்லை. மருத்துவமனையில் இருந்த காலமா அல்லது வீட்டில் தனித்திருந்த காலமா, இரண்டில் எது மோசமானது என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.

SCROLL FOR NEXT