வலைஞர் பக்கம்

10 கிராம மக்களுக்கு இலவசக் குடிநீர்; பொதுக் கிணறுகள் தூர்வாரல்- நாகையில் சூழியல் சார்ந்து பயணிக்கும் நபர்

கரு.முத்து

10 கிராம மக்களுக்கு இலவசக் குடிநீர், கிணறுகளை இலவசமாகத் தூர்வாரித் தருவது என நாகப்பட்டினத்தில் சூழல் சார்ந்து பயணித்து வருகிறார் காசிராமன்.

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் காசிராமன், தனது வீட்டில் சுத்திகரிப்பு இயந்திரம் வைத்து சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இலவசமாகக் குடிநீர் வழங்கி வருகிறார். அங்கு யார் வேண்டுமானாலும் வந்து எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் இப்பகுதியில் உள்ள பல கிணறுகளைத் தனது சொந்த செலவில் தூர் வாரித் தந்திருக்கிறார்.

இந்த நிலையில், திருவெண்காடு அரசுப் பொது மருத்துவமனையில் பல வருடங்களாக இயங்காமல் இருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும் பொதுமக்களின் வசதிக்காகத் தனது செலவில் தற்போது பழுது நீக்கித் தந்திருக்கிறார்.

"ஊரடங்கு நாட்களில் டீக்கடைகள் இயங்காததால் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தினமும் டீ போட்டுத் தருமாறு கேட்டார்கள். அதை எடுத்துச் சென்று கொடுக்கப் போகும் போதுதான், அங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த கரோனா காலத்தில் கடைகள் இல்லாத நிலையில் அங்கு பணிபுரிகிறவர்கள், சிகிச்சைக்கு வருகிறவர்கள் என அனைவருமே தண்ணீர் இல்லாமல் தவிப்பது தெரிந்தது. அதனால் உடனடியாக, தெரிந்த பொறியாளரை வரவழைத்துச் சரி செய்யச்சொன்னேன்.

சுத்திகரிப்பு இயந்திரத்தின் மோட்டார் பழுதாகி குழாய்களும் உடைந்து சேதமாகி இருந்தன. எல்லாவற்றையும் சரிசெய்த பின் இப்போது மருத்துவமனைக்கு நல்ல ஆரோக்கியமான குடிநீர் கிடைக்கிறது. இனிமேல் அந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை நானே எனது பொறுப்பில் பராமரிப்பது என்றும் முடிவெடுத்திருக்கிறேன்.

அனைவருக்கும் அத்தியாவசியத் தேவையான நீர் சார்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி” என்கிறார் காசிராமன்.

SCROLL FOR NEXT