கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா பல திறமைகளை உள்ளடக்கியவர். பாடகர், சாகித்யகர்த்தா, நடிகர், வயலின், வயோலா, புல்லாங்குழல், மிருதங்கம் உள்ளிட்ட பல இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர் என அவருடைய திறமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அவரது பிறந்த நாளான ஜூலை 6 அன்று அவருடைய சீடர்கள் பலரும் தங்களின் குருவைப் போற்றும் இசை நிகழ்ச்சிகளை நினைவு கொள்வதிலும் அவரின் பன்முகத் திறமையைப் போற்றியும் வருகின்றனர்.
அந்த வகையில் கலப்பிசை என்று சொல்லப்படும் ஃப்யூஷன் பாணியில் அமைந்த இசைக் கோவையின் பின்னணியில் அவர் பாடிய பாடல்களின் தொகுப்பு ‘அமால்கம்’. இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற பாடல்களுக்கு டிரம்ஸ் வாசித்திருப்பவர் ஜி.ஜெகன். இந்தியா முழுவதும் ப்ளூஸ், ப்ளூஸ் ராக், ஜாஸ் ஃபங்க் போன்ற மேற்கத்திய இசைப் பாணிகளை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் வாசித்துவருபவர். ‘அமால்கம்’ குறித்து அவரிடம் பேசியதிலிருந்து…
“கர்னாடக இசை மேதையான பாலமுரளி கிருஷ்ணாவின் பாடல்களை ஃப்யூஷனில் பாடியதன் தொகுப்பு எனும் பெருமையைக் கொண்டது ‘அமால்கம்’. கீபோர்ட் மற்றும் புல்லாங்குழல் நிகில், எலெக்ட்ரிக் வயலின் மற்றும் ஸ்லைட் கிதார் ஷியாம் ரவிஷங்கர், கிதார் ராகவன் மணியன், பாஸ் கிதார் மிதுல் டேனியல், மிருதங்கம், சாக்ஸபோன் முறையே அக்ஷய் ராம், பசந்த் முரளி கிருஷ்ணன் ஆகியோர் வாசித்தனர். கிளாசிக்கல், மேற்கத்திய பாணியிலான ஜாஸ், ராக் பாணியில் நாங்கள் அமைத்திருந்த இசைக் கோவையோடு அவ்வளவு ஈடுபாட்டோடு பாடிக்கொடுத்தார் பாலமுரளி கிருஷ்ணா.
மகநீய, க்ஷிசபுத்ராய, கிருஷ்ணயானு, ஓம்காரகாரணி, மோகன வம்சி, த்விஜாவந்தி ராகத்தில் அமைந்த ஒரு தில்லானா ஆகியவை இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலைக் கேட்கும்போதும் புதுவிதமான அனுபவத்தை ஃப்யூஷன் இசையின் பின்னணியில் ஒலிக்கும் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் உணரமுடியும்” என்றார்.
கனகாங்கி, கேதாரம், ரேவதி உள்ளிட்ட பல ராகங்களை இந்த ஆல்பங்களின் பாடல்களுக்கு பாலமுரளி கிருஷ்ணா பயன்படுத்தியிருந்தாலும், ஆல்பத்தின் முதல் பாடலான `மகநீய மதுர மூர்த்தே…’ என்னும் பாடல் மிகவும்
விசேஷமானது. காரணம் இந்தப் பாடல் அமைந்திருக்கும் ராகமான மஹதியை கர்னாடக இசை உலகுக்குத் தந்தவர் பாலமுரளி கிருஷ்ணா.
ஒரு ராகத்தில் ஏழு ஸ்வரஸ்தானங்களும் அமைந்துள்ள ராகங்களை சம்பூர்ண ராகங்கள் என்பர். ஐந்து ஸ்வரஸ்தானங்கள் இருக்கும் ராகங்களை ஜன்ய ராகங்கள் என்பர். மஹதி ராகத்தில் நான்கு ஸ்வரஸ்தானங்கள் (ஆரோகணம்: ஸ க ப நி ஸ.. அவுரோகணம்: ஸ நி ப க ஸ) மட்டுமே இருக்கும். இதுதான் அந்த ராகத்தின் விசேஷம். இப்படியொரு ராகத்தை உருவாக்கி அதற்கு நாரதரின் கையிலிருக்கும் வீணையின் பெயரான மஹதியை வைத்தவர் பாலமுரளி கிருஷ்ணா.