வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1828 செப்டம்பர் 9: தன் படைப்புகளை நாட்டுடமையாக்கியவர்

சரித்திரன்

“ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார் களேயொழிய தன்னை மாற்றிக்கொள்ள நினைப் பதில்லை” என்றார் ஒருவர். தன் வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்க, உண்மையிலே தன் எழுத்துகள் மற்றும் சொத்துகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கினார். 19-ம் நூற்றாண்டில் அவர் எழுதியவை இன்றளவும் மனிதநேயத்தை உலகுக்குப் போதித்துக்கொண்டிருக்கின்றன. ‘போரும் அமைதியும்’, ‘அன்னா கரீனினா’ போன்ற உலகைப் புரட்டிப்போட்ட படைப்புகளை உருவாக்கிய லியோ டால்ஸ்டாய்தான் அந்த மாமனிதர்.

1828 செப்டம்பர் 9-ல் ரஷ்யாவில் பிறந்தார் டால்ஸ்டாய். அவர் பச்சிளம்பிள்ளையாக இருந்தபோதே அவருடைய தாய் இறந்துவிட்டார். ஒன்பது வயதை எட்டியபோது தந்தையும் மரணமடைந்தார். அத்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். அதுவே அறநெறி குறித்து ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது எனப் பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார் டால்ஸ்டாய். தன் முதல் நாவலான ‘சைல்ட்ஹூட்’-ஐ எழுதி 1852-ல் வெளியிட்டார். 1853-ல் கிரிமியன் போர் மூண்டபோது போர் முனைக்கு அனுப்பப்பட்டார். அந்தப் போர் அனுபவம் வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்தியது. “மனித இனம் வளர்ச்சி அடையப் புதிய மதம் ஒன்றை உருவாக்க வேண்டும்” எனும் எண்ணத்துடன் ராணுவத்திலிருந்து விடைபெற்றார். புனித பீட்டர்ஸ்பர்கில் உள்ள இலக்கிய வட்டத்தில் இணைந்து, 1859-ல் மாஸ்கோ இலக்கிய சமூகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக மாற்றம் உண்டாக்க, பள்ளிகள் தொடங்கலாம் என எண்ணி ஐரோப்பா முழுவதிலும் உள்ள வெவ்வேறு கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டார். 34-வது வயதில் சோபியாவைத் திருமணம் செய்தார்.

நிலவுடைமைச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் தொடர்ந்து தன் வாழ்க்கை முறையைக் கேள்விக்குள்ளாக்கினார். இது அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே பல சிக்கல்களை உண்டாக்கியது. ‘போரும் அமைதியும்’, ‘அன்னா கரீனினா’ மட்டுமின்றி

`நடனத்துக்குப் பின்’, `குடும்ப மகிழ்ச்சி’, ‘இரண்டு ஹுஸ்ஸார்கள்’, ‘க்ரேஸர் சொன்னாட்டா’, ‘இவான் இலியீச்சீன் மரணம்’ போன்றவையும் அவருடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தியவை. தனக்கென எதுவும் சொந்தமில்லை என்பதில் உறுதியாக இருந்த டால்ஸ்டாய், தன் பெயரில் ஒரு பண்ணை அமைத்து அங்கே இளைஞர்களை டால்ஸ்டாய்வாசிகளாக மாற்றிக்கொண்டிருந்தார்.

டால்ஸாடாய் காலத்துக்குப் பின்னால் தன் பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என எண்ணிய அவருடைய மனைவி, அவரது படைப்புகளின் முழு உரிமையையும் தனதாக்க முயன்றார். ஆனால், தனது குடும்பத்தைவிட ரஷ்யச் சமூகம்தான் முக்கியம் என்று தனது எல்லாப் படைப்புகளையும் நாட்டுடைமை ஆக்கினார் டால்ஸ்டாய். இதனால் அவர் மனைவி சண்டை போட, 82-வயதில் வீட்டிலிருந்து வெளியேறினார். உலகின் மகத்தான இலக்கிய ஆளுமையின் பயணம் 1910 நவம்பர் 10-ல் முடிவடைந்தது.

SCROLL FOR NEXT