வலைஞர் பக்கம்

அதிகார வைரஸ் அடிபணியுமா?

வா.ரவிக்குமார்

தனியொருவனின் துயரோடு அவன் சார்ந்திருக்கும் சமூகத்தின் துயரம் குறித்தும் பொதுவெளியில் பேசுவதுதான் எந்தவொரு கலை வடிவத்துக்கும் தலையாயக் கடமை.

அந்தப் பொறுப்போடு ‘அதிகார வைரஸ்’ என்னும் சொல்லிசைப் பாணியில் அமைந்த ஒரு பாடலைக் கச்சேரி மூவ்மென்ட்ஸும் காம்ரேட் டாக்கீஸும் இணைந்து யூடியூபில் வெளியிட்டுள்ளன. “உழைப்பைத்தான் நான் நம்பினேன்.. வைரஸால் நான் பின்னால் சென்றேன்…” என்னும் வரிகள் அன்றாடம் வேலை செய்தால்தான் உணவு என்று இருப்பவர்களின் நிலையை விளக்குகிறது.

சென்னை பெருநகரத்துக்கு உள்ளேயே தனித்தீவு போல் பலராலும் பார்க்கப்படும் கண்ணகி நகர் மக்களின் துயரை என்.கே.டி. மற்றும் காதல் ஜாக் ஆகிய சொல்லிசைக் கலைஞர்கள் பாடியிருக்கும் இந்தப் பாடலில் ஒரு பகுதி மக்களுக்கான துயரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கும் விளிம்புநிலை மக்களின் துயரமும் பதிவாகியிருக்கிறது.

கூலி வேலை செய்பவர்கள், பாரவண்டி இழுப்பவர்கள், நகரின் பல பகுதிகளுக்கும் சென்று வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு வரும் பெண்கள், முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுவரும் அன்றாடங்காய்ச்சிகள் போன்றோரின் வாழ்வாதாரம் கடந்த 100 நாட்களாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகி உள்ளன. அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் இந்த மக்களை அடையும் முன்பாகவே ஆவியாகிவிடுவதன் மர்மத்தை, ஆட்சியாளர்கள் ஓட்டுக்காகவே இவர்களை உயிரோடு வைத்திருக்கும் அவலத்தை வலியோடும் வலுவோடும் தோலுரித்துக் காட்டுகின்றன பாட்டு வரிகள்.

இந்தக் காணொலி குறித்து காம்ரேட் டாக்கீஸின் குழுவில் ஒருவரும் ஆவணப்பட இயக்குநருமான மதன்குமாரிடம் பேசியதிலிருந்து...

“இளம் இயக்குநர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என எல்லோரும் ஒரு குடும்பமாக, சமூகமாக இயங்குவது ‘காம்ரேட் டாக்கீஸ்’. இடதுசாரி கருத்தியலை கலை வடிவில் பேசக்கூடிய குழுவாக நவீன உத்திகளுடன் திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் அறிவுறுத்தலின்படி அவரது தலைமையின்கீழ் ‘காம்ரேட் டாக்கீஸ்’ இயங்குகிறது.

கண்ணகி நகர், பெரும்பாக்கம் பகுதிகளில் வாழும் விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகளை தொடர் வீடியோக்களாகப் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டோம். அது பெரும் விவாதத்தைக் கிளப்பியதோடு, அந்தப் பகுதி மக்களுக்கு உதவி கிடைப்பதற்கும் காரணமாக அமைந்தது. ‘அதிகார வைரஸ்’ பாடலை எழுதிப் பாடியிருக்கும் தோழர் என்.கே.டி., காதல் ஜாக் இருவரும் மும்பையின் தாராவி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவிலேயே உடல் உழைப்பை நம்பி வாழும் பெரும் மக்கள் திரளைக் கொண்டது தாராவி குடிசைப் பகுதி. அந்த இடத்திலிருந்து பல்வேறு மக்கள் பிரச்சினைகளைக் குறித்து எழுதிப் பாடிவரும் சொல்லிசைக் கலைஞர்களான என்.கே.டி., காதல் ஜாக் இருவரைக் கொண்டே இந்தப் பாடலைப் பாடவைத்து வெளியிடுவது என்று முடிவு செய்தோம், இதையடுத்து, இந்தியா முழுக்க இருக்கும் உழைக்கும் மக்களின் குரலாக ஒரு பாடலை அவர்கள் இருக்கும் பகுதியிலேயே அவர்களைப் பாடவைத்து, அங்கேயே படப்பிடிப்பை நடத்தி அதை ‘காம்ரேட் டாக்கீஸ்’ யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறோம்” என்றார். அதிகார வைரஸ்.

பாடலைக் காண:

SCROLL FOR NEXT