91 வயதில் இறந்துபோன இசை மேதையான என்னியோ மோரிகோனேவை நினைவுகூரும் விதமாக முகநூல் நண்பரும் காமிக்ஸ் வாசகருமான ஒருவர், தான் 'டெக்ஸ் வில்லர்' கதைகளை வாசிக்கும்போது என்னியோ மோரிகோனேவின் இசையைக் கேட்டவாறே வாசிப்பேன் என்றும் அது தனக்குப் பெரிய கிளர்ச்சியைக் கொடுக்கும் என்றும் நேற்று எழுதியிருந்தார்.
செர்ஜியோ லியோனேவின் ‘ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் வெஸ்ட்’ போன்ற திரைப்படங்களின் வழியாக வன்மேற்கு நிலங்களை ஒரு கனவு வெளியாக ஆக்கியதில் என்னியோ மோரிகோனேவின் இசைக்குப் பெரும் பங்குண்டு. வன்மேற்கின் நிலம் அளிக்கும் கிளர்ச்சிக்கு இணையாகவே அந்த நிலத்தின் ஆன்மா என என்னியோ மோரிகோனின் இசை நமக்கு ஆகிவிட்டிருக்கிறது. சீட்டியொலியும் ஜலதரங்கம் போன்ற மணியோசையும் குழலோசையும் ஊடுபாவாகப் பின்னிக்கிடக்கும் அவரது இசை வழியாக அந்தப் பாலை நிலம் ஒரு கனவு போல எழுந்து வருகிறது.
ரோமில் பிறந்த என்னியோ மோரிகோனே முறையாக இசைக்கல்வி பயின்றவர். பாப்புலர் பாடல்களுக்கு இசையமைக்க ஆரம்பித்து, பின் இத்தாலிய இயக்குநர்களால் ஒரு அலையென உருவான ’ஸ்பாகெட்டி வெஸ்டர்ன்’ (வெஸ்டர்ன் திரைப்படங்களில் ஒரு உப வகைமை) திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். செர்ஜியோ லியோனே – க்ளிண்ட் ஈஸ்ட்வுட் கூட்டணியில் உருவான வெஸ்டர்ன் திரைப்படங்களின் (’த குட், த பேட் அண்ட் த அக்ளி’ வரிசைப் படங்கள்) வெற்றி அவரை உலகெங்கும் கொண்டு சேர்த்தது. அதன் பாதிப்பில் உலகெங்கும் அந்தந்த நிலங்களில் கவ்பாய்கள் தோன்றினார்கள். துப்பாக்கியைத் தொங்கவிட்டவாறு குதிரைகளில் அலைந்தனர். இங்கே ஜெய்சங்கரை கவ்பாயாக வைத்து திரைப்படங்கள் உருவாகின. இந்த வகைத் திரைப்படங்களின் இசையிலும் என்னியோவின் பாதிப்பைக் காண முடியும்.
1960களிலும் 70களிலும் மிகவும் பரபரப்பான இசையமைப்பாளராக கிட்டதட்ட ஐநூறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள மோரிகோனே, பல கிராமி விருதுகளையும் கோல்டன் குளோப் விருதுகளையும் அந்த இசைத் தொகுதிகளுக்காகப் பெற்றிருக்கிறார். சர்வதேச அளவில் இன்றும் ரசித்து விவாதிக்கப்படும் மேதைகளின் சினிமாக்களுக்கு இசை முத்திரை அளித்தவர் இவர். பிந்தைய காலத்தில் திரைப்பட இசையில் அல்லாமல் மேற்கத்திய செவ்வியல் இசையில் தனது கவனத்தைப் பதிக்கிறார்.
அதேநேரம், க்வெண்டின் டரண்டினோ, ’கில் பில்’ உட்பட பல படங்களில் மோரிகோனேவின் இசையை அவரது அனுமதியின்றியே கையாண்டதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டும், டரண்டினோவை அவர் முட்டாள் என்று சொன்னதாக ’ப்ளேபாய்’ பத்திரிகையில் வெளியான நேர்காணலை அவரே மறுத்ததும் நடந்தது. ’இங்குளோரியஸ் பாஸ்டர்ட்’ போன்ற டரண்டினோவின் முந்தைய சில படங்களுக்கு இசையமைக்கும் அழைப்பை மறுத்திருந்த மோரிகோனே, ’ஜேங்கோ அன்செயிண்டு’ படத்தில் ஒருபாடலுக்கு இசையமைக்கிறார். பிறகு 2015-ல் ’த ஹேட்ஃபுல் எயிட்’ படத்தின் இசைக்காக டரண்டினோவுடன் இணைகிறார். 1979 ஆண்டிலிருந்தே டெரென்ஸ் மாலிக்கின் ’டேஸ் ஆஃப் ஹெவன்’, ரோலண்ட் ஜாஃப்ஃபின் ‘தெ மிஷன்’ (1986) எனப் பல படங்களின் இசைக்காக அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் அவருடைய முதல் ஆஸ்கர் சினிமா இசையில் அவர் செய்த பெரும் சாதனையின் பொருட்டு 2006லேயே வழங்கப்பட்டது. முதன் முதலாக ஒரு படத்தின் இசைக்கான ஆஸ்கரை க்வெண்டின் டரண்டினோவின் வன்மேற்குத் திரைப்படமான ‘த ஹேட்ஃபுல் எயிட்’ மூலமே பெற்றார். வன்மேற்கு அவரைக் கடைசிவரை விடவேயில்லை.
சினிமா என்ற ஊடகத்தின் வளர்ச்சியோடு இணைந்து வளர்ந்த என்னியோ மோரிகோனேவின் இசைப்பணி அரை நூற்றாண்டுக்கும் மேலானது. வாழ்நாள் இறுதிவரை பணியாற்றிக் கொண்டேயிருந்த அவர் எத்தனையோ ஹாலிவுட் திரைப்படங்களுக்குப் பணியாற்றி புகழ்பெற்ற பிறகும், ரோமை விட்டு நகரவேயில்லை.