மதுரை உலகத்தமிழ் சங்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும் சங்கத்தமிழ் காட்சியகம் காந்தி மியூசியம் எதிரே அமைந்துள்ளது. இங்கு காட்சிக்கூடத்தில் தமிழர்களின் வாழ்வியல் தொடர்பான ஓவியம், தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த காட்சிக் கூடத்தின் வெளிப்புற சுவர்களில் தொல்காப்பியம் உள்ளிட்ட சங்கத் தமிழ் இலக்கியங்களின் பாடல்களை விளக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் ஏற்கெனவே தீட்டப்பட்டு இருந்தன.
தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரை கவரும் வகையில் இந்த வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தற்போது, அந்த ஓவியங்கள் சற்று சிதைந்து இருப்பதால், அந்த ஓவியங்களைப் புதுப்பிக்க, உலகத் தமிழ் சங்கத்தின் இயக்குநர் அன்புசெழியன் நடவடிக்கை எடுத்தார்.
இதன்படி, சங்க இலக்கியப் பாடல்களான நற்றினை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு உள்ளிட்ட எட்டுத் தொகைநூல்கள், மலைபடுகடாம், நெடுநல்வாடை போன்ற சங்கப் பாடல்களின் காட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டுக் காளை ஓவியங்களை மதுரையைச் சேர்ந்த ஓவியர் கண்ணன் புதுப்பிக்கிறார்.
இது குறித்து கண்ணன் கூறுகையில், ‘‘ சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கலை ஓவியங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. உலகத் தமிழ் சங்கம் தமிழ், கலை, கலாசாரங்களை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது.
அந்த வகையில் இங்கு சங்கத்தமிழ் காட்சிக் கூடத்தில் பழந்தமிழர் களின் வாழ்வியல் குறித்த தகவல்கள் இடம் பெற் றுள்ளன.
இதன் வெளிப்புறசுவர்களிலும் சங்க இலக்கியங்களை பறைசாற்றும் விதமாக ஓவியங் கள் 2016-ல் வரையப்பட்டன. தற்போது, அந்த ஓவியங்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
இருப்பினும், மாணவர்கள், குழந்தைகளைக் கவரும் வகையில் நமது பாரம்பரிய வீரவிளையாட்டு சின்னமான ஜல்லிக்கட்டு காளை வித்தியாசமாக தத்ரூபமாக தீட்ட உள்ளேன்’’ என்றார்.