வலைஞர் பக்கம்

ஒரு நிமிடக் கதை: இடம்

வி.சகிதா முருகன்

பள்ளிகூடத்துக்கு ஆட்டோவில் ட்ரிப் அடிக்கும் ஆட்டோ டிரைவரிடம் கெஞ்சிக்கொண் டிருந்தாள் பாலசுந்தரி.

“ஆட்டோக்காரரே எப்படி யாவது என் மகளையும் ஸ்கூல் டிரிப்புல சேர்த்துக்கங்க.”

“சொன்னா கேளுங்கம்மா ஏற்கனவே அளவுக்கதிகமான பசங்களை ஏத்திட்டுப் போறேன்னு போலீஸ்காரர் அப்பப்ப புடிச்சு திட்டுறார். இதுல புதுசாவா... முடியவே முடியாதும்மா, நீங்க வேற ஆட்டோ பார்த்துக்கங்க.”

ஆட்டோக்காரர் திட்டவட்ட மாகச் சொல்ல அவரை விடாமல் மடக்கி கெஞ்ச ஆரம்பித்தாள் பால சுந்தரி.

“ஆட்டோக்காரரே... எங்க ஏரியாவுல இருந்து நீங்க மட்டும் தான் ஸ்கூல் ட்ரிப் அடிக்கறீங்க. நீங்க முடியாதுன்னு சொன்னா நான் டவுன்பஸ் புடிச்சுதான் என் பொண்ணை கொண்டு போய் விடணும், என் பொண்ணு இருக்கிற இடத்துல அட்ஜஸ்ட் பண்ணி உக்கார்ந்துக்குவா. கொஞ்சம் தயவு பண்ணுங்க.”

பாலசுந்தரியின் கெஞ்சல் ஆட்டோக்காரரை அசைக்க, “சரிம்மா இவ்வளவு கெஞ்சுற, உன் பொண்ணை கூட்டிட்டுவா” என்றார்.

மகளுக்கு ஆட்டோவில் இடம் கிடைத்த சந்தோஷத்தில் அவளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பிவிட்டு வந்த பாலசுந்தரியை அவளது மாமனார் சுந்தரம் கேட்டார்.

“ஏம்மா பொண்ணுக்கு ஆட்டோவில இடம் புடிச்சிட்ட போல?”

“ஆமா.” அலட்சியமாய் பதில் வந்தது பாலசுந்தரியிடமிருந்து.

“அவ்வளவு நெருக்கடியான ஆட்டோவுல உன் பொண்ணுக்கு இடம் புடிச்சு கொடுத்த நீ இவ்வளவு விசாலமான வீட்டுல எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இடமில்லைன்னு சொல்லி எங்களை காப்பகத்துக்கு அனுப்ப முடிவெடுத்திருக்கற. மனசுல தாம்மா இடம் விசாலமா இருக்கணும். மனமிருந்தா குருவிக் கூட்டில் மான்கள் வாழலாம்னு ஒரு பாட்டே இருக்குது. அவ்வளவு நெரிசலான ஆட்டோவுல உன் பொண்ணுக்கு இடம் புடிச்சு கொடுத்த நீ, கண்ணை மூடுறவரை இந்த வீட்டு மூலையில எங்களுக்கு ஒரு இடம் குடும்மா...” கைகூப்பி கூறிய மாமனாரின் குரல் பாலசுந்தரியின் மனதை கரைக்க ஆரம்பித்தது.

SCROLL FOR NEXT