வலைஞர் பக்கம்

ஊரடங்குக்கு மேல் ஊரடங்கு; எப்படியிருக்கிறது மதுரை?

கே.கே.மகேஷ்

மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி மற்றும் மூன்று ஒன்றியங்களில் கடந்த 24-ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, ஜூலை 12-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள அதே நடைமுறைதான் என்றாலும்கூட, சென்னையைக் காட்டிலும் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது மதுரை. ஒரு புறம் தீவிர ஊரடங்கு, இன்னொரு புறம் வேகமான நோய்த்தொற்று என்று இரட்டை நெருக்கடி.

சென்னையில் வீடு வீடாகப் பரிசோதனை செய்கிறார்கள். மதுரையில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தி, அங்கே வந்தவர்களில் சந்தேகப்படும்படியான அறிகுறி இருந்தால்தான், கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்படியிருந்தும் தினமும் 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. சென்னையுடன் ஒப்பிட்டால் மதுரையில் இறப்பு விகிதமும் அதிகமாகவே இருக்கிறது. சென்னையில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3,000-ஐ எட்டியபோது, பலி எண்ணிக்கையானது 24 ஆக இருந்தது. ஆனால், மதுரையில் தொற்று எண்ணிக்கை 3,000-ஐத் தொட்டபோது இறந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துவிட்டது.

தனியார் மருத்துவமனைகளில் இறந்தோரின் பெயர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சென்னையுடன் ஒப்பிடுகையில் மதுரையில் வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் மிகமிகக் குறைவு என்பதும், தொற்று முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதும் கவலை தரும் விஷயங்கள்.

இது ஒருபுறமிருக்க, முழு ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடிக்கிடக்கின்றன. காய்கனி, மளிகை, இறைச்சிக் கடைகள் மட்டும் திங்கள் முதல் சனிக்கிழமை வரையில் செயல்படுகின்றன. ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், மதுரை மாநகர் பகுதியில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் செயல்படாததால், மேற்கொண்டு 10 ஆயிரம் பேருக்கு வேலையில்லை.

இதேபோல உணவகங்கள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனையகங்கள், செருப்புக் கடைகள், புத்தகக் கடைகள் போன்றவற்றில் வேலை பார்ப்போரும், அவற்றை நம்பி பிழைப்பு நடத்துகிற ட்ரை சைக்கிள் ஓட்டுநர்கள் போன்றோரும் வேலையிழந்திருக்கிறார்கள். பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாதச்சம்பளம் பெறுவோர் பலருக்குச் சரியான சம்பளம் இல்லை. கரோனாவில் இருந்து பிழைப்பதா? பசியில் இருந்து தப்பிப்பதா? என்கிற நெருக்கடிக்கு அடித்தட்டு மக்கள் வந்திருக்கிறார்கள்.

மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், நிவாரணமாக ரேஷன் கடைகள் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறது அரசு. இது போதுமானதல்ல, கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்களும், அரசியல் கட்சியினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முழு ஊரடங்கு, மேலும் நீட்டிக்கப்பட்டால் மதுரையில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கலாம் என்பதால், ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஆனால், அதற்கு தொற்று குறைய வேண்டுமே?

SCROLL FOR NEXT