1665இல் லண்டனை பூபானிக் பிளேக் நோய் தாக்கியது. அப்போது அந்த நகரின் மக்கள்தொகையில் கால்வாசிப் பேர் பலியானார்கள். அதைக் குறித்த பதிவாக புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான டேனியல் டெபோ எழுதிய நாவல், A Journal of the Plague Year (1722). தற்போதைய பெருந்தொற்றைப் புரிந்துகொள்வதற்கும், அதற்குத் தீர்வுகாண்பதற்கும் முன்னோட்டமாக இந்த நாவல் திகழும் என்று தொற்றுநோயியலாளர்கள் கருதுகிறார்கள்.
ஒரு தனிநபரின் அனுபவமாக இந்த நாவல் விரிகிறது. இந்த நோய் 'லண்டனின் பெரும் பிளேக்' என்று அறியப்பட்டது. இந்தப் பெருந்தொற்றே, லண்டனை உலுக்கிய கடைசி பெரிய பிளேக் தொற்றாகக் கருதப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அறிவியலாளர் நியூட்டன் போன்றோர் ஊர் திரும்பியது, இந்த பிளேக் நோய்த் தொற்றுக் காலத்தில்தான்.
அவருடைய புகழ்பெற்ற நாவலான ராபின்சன் குரூசோ 1719 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்றாக ராபின்சன் குரூசோ கருதப்படுகிறது. புகழ்பெற்ற குழந்தைகள், இளையோர் கதையாக மறுவடிவம் பெற்று இன்றுவரை அது படிக்கப்பட்டுவருகிறது. அந்த நாவல் வெளியாகி மூன்று ஆண்டுகள் கழித்து பிளேக் குறித்த இந்த நூல் வெளியானது. ராபின்சன் குரூசோ அளவுக்கு இல்லாவிட்டாலும், இந்த நாவலும் புகழ்பெற்ற ஒன்றே.
டேனியல் டெபோ (1660-1731) வர்த்தகர், இதழாளர், உளவாளி ஆகிய பணிகளையும் செய்தவர். அதேநேரம் அவருடைய எழுத்துப் பணியே இன்றுவரை அவருடைய அடையாளமாகத் திகழ்ந்துவருகிறது. ஆங்கில நாவல் இலக்கியத்தை வளர்த்த முன்னோடிகளில் ஒருவராக டேனியல் டெபோ கருதப்படுகிறார். அந்தக் கால அறிவாளிகளும் அரசியல் தலைவர்களும் டெபோவின் நண்பர்களாக இருந்தார்கள். அதிகார மட்டத்தில் இருந்தவர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த டெபோ சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். அரசியல் விமர்சனங்களுக்காகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.