அன்பு ஜெயமோஹன், வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களுக்கு எழுதுகிறேன். மீண்டும் உதவி கேட்டு. பண உதவி கேட்டால் ஏன் எல்லோரும் மிரண்டுபோய்ப் பதற்றம் அடைகிறார்கள் என்று இன்னமுமே எனக்குப் புரியவில்லை. ஒரே காரணம்தான் இருக்க முடியும். ஒருவரின் ஆளுமையைப் புரிந்துகொள்வதில், மதிப்பிடுவதில், ஏற்பதில் அல்லது மறுப்பதில் பணம் ஒன்றையே அளவுகோலாக வைக்கிறார்கள்.
2001-ல் ஷோபா சக்தி தன்னுடைய சொந்தப் பணத்தில் என்னை ஃப்ரான்ஸ் வரவழைத்தார். அவருடைய செலவு மட்டும்தான். இரண்டு மாதம் தங்கியதாக ஞாபகம். அப்போதே இரண்டு லட்ச ரூபாய் ஆகியிருக்கும். அதே ஆண்டு, அவருடைய நாவல் கொரில்லா வெளிவந்தது. வெளியீட்டு விழாவில் பேச அழைத்தார். பேசினேன். என்ன பேசினேன்? இது ஒரு நாவலே அல்ல. வெறும் டயரி. அதோடு மட்டும் அல்ல. இனரீதியாக இரண்டுபட்ட சமூகத்தில் நடந்த ஒரு போரை தனிநபர்களின் மதிப்பீட்டு வீழ்ச்சியாகக் கொச்சைப்படுத்தியிருக்கிறது கொரில்லா என்று தாக்கினேன்.
ஆக, என் உறவுகளை, நட்பைப் பரிபாலித்துக்கொள்வதற்குப் பணம் என்ற விஷயத்தை நான் அனுமதிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா? எனக்கு உதவி செய்பவர்கள் மீது எனக்கு நன்றியுணர்வு இருக்கும். ஆனால், அதையே அந்த நட்புக்கு ஆதார சக்தியாக வைக்க அனுமதிப்பதில்லை.
எழுத்தாளர்கள் அத்தனை பேரையுமே இந்தச் சமூகம் பிச்சைக்காரர்களாகத்தான் வைத்திருக்கிறது. ‘நான் கடவுள்’ படத்தில் வரும் பிச்சைக்காரக் கூட்டத்தைப் போல். கதை எழுதினால் என்ன ஐம்பதாயிரமா கிடைக்கும்? ரூ.500 கொடுப்பார்கள். கட்டுரை எழுதினால், ரூ. 1,000 எந்தப் பதிப்பகமாக இருந்தாலும் 2,000 பிரதிதான் விற்கிறது. ஊரெல்லாம் பேசுகிறார்களே, ஜெயமோகனின் மகாபாரதம். அதற்கே ப்ரீ ஆர்டர் திட்டத்தில் 300 பிரதிகளுக்குத்தான் பணம் வந்தது என்று ஜெ. எழுதியிருந்தார். ஆனானப்பட்ட மகாபாரதத்துக்கே இந்தக் கதி என்றால், நானெல்லாம் எம்மாத்திரம்? 50 புஸ்தகம் போட்ட முன்னணி எழுத்தாளனுக்கே இங்கே மாத ராயல்டி ரூ. 5,000 கிடைத்தால் அதிகம். அதனால்தான் நண்பர்களே, காசு கேட்கிறேன். கொடுத்தால் நலம். கொடுக்காவிட்டால் அதுவும் நலமே. ஆனால், இதில் அசூயை கொள்ளவோ பதற்றம் அடையவோ என்ன இருக்கிறது என்றுதான் எனக்குப் புரியவில்லை.
இதுபற்றித் தொடர்ந்து வசை பாடுபவர்களிடம் ஒரு கேள்வி: நான் என்ன உங்கள் பாக்கெட்டிலா கை விட்டேன்? என்னுடைய எழுத்து உங்களுக்கு எந்த விதத்திலாவது பயன்பட்டால், அதற்கான தட்சணையாக, உங்களிடம் இருந்தால் கொஞ்சம் காசு கொடுங்கள்.
இதில் என்னய்யா பிரச்சினை இருக்கிறது?
- சாரு நிவேதிதாதன் வலைதளத்தில்...