தற்போது ஊட்டி மார்க்கெட் கடைகள். 
வலைஞர் பக்கம்

இயல்பு வாழ்க்கைக்கு மெல்லத் திரும்பும் ஊட்டி மார்க்கெட்: சேதமடைந்த கடைகளைக் கட்டிக்கொடுக்க வியாபாரிகள் கோரிக்கை

கா.சு.வேலாயுதன்

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடந்த மாதம் 22-ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 82 கடைகள் எரிந்து நாசமாகின. இங்குள்ள டீக்கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததுதான் இவ்விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட செய்திகள் சொன்னாலும், இதன் பின்னணியில் கள்ள மார்க்கெட் எரிவாயு சப்ளையும் காரணமாக இருக்கலாம் என்ற புகார்களும் கிளம்பின. இதுதொடர்பாக, இந்து தமிழ்திசை இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மொத்தம் 1,460 கடைகளைக் கொண்ட இந்த மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன. எனினும், மார்க்கெட்டிற்குள் இருக்கும் டீ, போண்டா, வடை விற்கும் கடைகளுக்கு எரிவாயு சிலிண்டர் வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

தவிர இதற்குள் இயங்கிவரும் ஸ்டவ், மிக்ஸி, கிரைண்டர் பழுதுபார்க்கும் கடைகளிலும் சிலிண்டரில் கள்ளத்தனமாக எரிவாயு நிரப்புவது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டின் எந்த இடத்திலும் எரிவாயு வாசனை மருந்துக்குக்கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர் கடைக்காரர்கள்.

விபத்து நிகழ்ந்த இரண்டாவது நாளே பெரும்பாலான கடைக்காரர்கள் மீண்டும் வியாபாரத்தை ஆரம்பித்தனர். விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களும், சேதமாகிக் கிடந்த பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தின் வாசலில் தங்கள் வியாபாரப் பொருட்களை வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டீக்கடைக்காரர்களுக்கு எரிவாயு சிலிண்டர் வைக்க அனுமதியில்லை என்பதால், இவர்கள் வடை, போண்டா, பஜ்ஜி போன்ற பலகாரங்களைத் தங்கள் வீட்டிலிருந்தே சமைத்து எடுத்து வந்து கடை பரப்புகின்றனர். பெரிய பிளாஸ்க்குகளில் டீ, காபி கொண்டுவந்து விற்கின்றனர்.

மேலும், மற்ற கடைகளிலும் யாராவது எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துகிறார்களா அல்லது வேறு எரிபொருட்கள் உபயோகம் அங்குள்ளதா என்பதை நகராட்சி அலுவலர்கள் அவ்வப்போது வந்து கண்காணிப்பதாகச் சொல்கிறார்கள் மார்க்கெட் கடைக்காரர்கள்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு அதிமுக சார்பில் தலா ரூ 5 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. பாதிப்புக்குள்ளான கடைகளுக்குக் கூட்டுறவு வங்கி மூலம் கடன் வசதிக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தந்திருக்கிறது.

தீ விபத்தில் பொருள் சேதம் அடைந்தவர்கள் இதுகுறித்துக் கூறும்போது, “வங்கிக் கடன் கொடுப்பது ஒரு வகையில் ஆறுதல்தான். ஆனால், அதுவே நிரந்தரத் தீர்வு ஆகாது. ஏற்கெனவே கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்விழந்து கிடக்கிறோம். இப்போது தீ விபத்து எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. எனவே சேதமடைந்த கடைகளை நகராட்சி நிர்வாகம் சரிசெய்து தர வேண்டும். அப்போதுதான் ஓரளவுக்காவது நாங்கள் தொழில் செய்து மீண்டெழ முடியும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

நகராட்சி நிர்வாகம் மனது வைக்குமா?

SCROLL FOR NEXT