வலைஞர் பக்கம்

கோவிட்டும் நானும்- 3: 24 மணி நேரக் கண்காணிப்பு

செய்திப்பிரிவு

ஹரியாணா மாநிலத்தின் குருகிராமைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் ஒரு பிரிவுக்கான மருத்துவ இயக்குநர் சுசீலா. அந்த மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் குழுவின் தலைவரும்கூட. இதுவரை 80 கோவிட்-19 நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்கிறார்:

உடனடி முடிவு

ஒவ்வொரு நாள் காலையிலும் ஒவ்வொரு நோயாளிக்கும் எப்படி சிகிச்சை அளிப்பது என்று வியூகங்களை வகுப்போம். யாருக்கு எந்த மருந்து, எந்தெந்தப் பரிசோதனைகள் எனத் திட்டமிடுவோம். பாராசிட்டமால், வைட்டமின் பி, சி, டி, துத்தநாக மாத்திரை, ஹைட்ராக்சி குளோரோகுயின், டாக்சிலிஸுமாப், சில நேரம் அசித்ரோமைசின் போன்றவற்றைக் கொடுத்தோம். சிலருக்கு மட்டும் ஆயுர்வேத மருந்தான 'காடா' கொடுக்கப்பட்டது.

வேறு நோயுடன் இருப்பவர்கள், நரம்பியல் பிரச்சினை இருப்பவர்களைக் கவனத்துடன் கண்காணிப்போம். அவர்களுடைய உடல்நிலை மோசமடைந்தால், உடனடி முடிவுகளை எடுப்போம்.

கடமையைச் செய்யாமல் இருக்கலாமா?

மார்ச் 3 ஆம் தேதி இத்தாலியைச் சேர்ந்த கோவிட்-19 நோயாளிக்குத்தான் எங்களுடைய மருத்துவமனையில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சீனா, இத்தாலியில் நடைபெற்ற மருந்துப் பரிசோதனைத் திட்டங்கள் தொடக்க நிலையில் இருந்தன. எங்கள் மருத்துவமனையும் மருந்துப் பரிசோதனைத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. அதன் காரணமாக சிகிச்சை முறையை அறிந்துகொள்வதற்காக வெளிநாட்டு மருத்துவர்களைத் தொடர்புகொண்டபோது, இத்தாலியில் நிலைமை மோசமாக இருந்தது. அப்போது கோவிட்-19 நோயாளிகளுக்கு திட்டவட்டமான சிகிச்சை முறை ஏதும் வகுக்கப்பட்டிருக்கவும் இல்லை.

மருந்துப் பரிசோதனைத் திட்டத்தில் நாங்களும் இணைந்திருந்ததால், சில வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அந்த இத்தாலிய நோயாளிக்காக அவருடைய வார்டிலேயே அவசர சிகிச்சைப் பிரிவு வசதிகளை ஏற்படுத்தினோம். 24 மணி நேரமும் படம்பிடிக்கக் கூடிய கேமரா அவருக்கு எதிரில் பொருத்தப்பட்டது. அப்போதுதானே வீட்டிலிருக்கும்போதும் அவரை நான் கண்காணிக்க முடியும்.

நான் வீட்டுக்குச் சென்றாலும் என்னுடைய அறையில் தனியாகத்தான் இருப்பேன். என்னுடைய குழந்தைகள் இருவரும் பதின்பருவத்தினர் என்பதால், என்னுடைய நிலைமையை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். கடந்த 75 நாட்களில் 80 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். அந்த வகையில் இந்த வைரஸ் விரைவில் வெளியேறிவிடாது என்பது எனக்குத் தெரியும். என் மீதும் ஒரு நாள் இந்த வைரஸ் தொற்றும். ஆனால், அதற்காக என் கடமையைச் செய்யாமல் இருக்க முடியுமா?

SCROLL FOR NEXT