பத்திரிகை வாயிலாகப் பழக்கமான மதுரைத் தோழர் ஒருவர் வீட்டிற்கு அவ்வப்போது போவதுண்டு. பரம ஏழை எல்லாம் கிடையாது. எப்போதும் ரேஷன் சாதம்தான் வடிப்பார் அவரது அம்மா. ஆனாலும், அது அவ்வளவு சுவையாக இருக்கும். அந்தம்மாவின் கைப்பக்குவம் அப்படி. நம் வீட்டில் புளியங்கொட்டைபோலத் துருத்திக்கொண்டிருக்கும் ரேஷன் பருப்பு கூட, அவரது சாம்பாரில் பூப்போல வெந்து, கரைந்திருக்கும். "உங்க கைப்பக்குவத்துல, சின்ன வயசுல சாப்பிட்ட சத்துணவு சாம்பார் எல்லாம் ஞாபகத்துக்கு வருதும்மா" என்பேன்.
கடந்த மாதம் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, பொன்னி அரிசி சாப்பாடு. "திமுக, அதிமுகன்னு போட்டி போட்டு அரிசி, பருப்பு கொடுத்தாங்கப்பா. ஒரு மாசத்துக்கு நாங்களும் பொன்னி அரிசிதான்" என்று புன்னகையோடு சொன்னார் அந்தம்மா.
ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்து அவர் மீண்டும் ரேஷன் அரிசிக்கு மாறிவிட்டார். காரணம், நிவாரண அரிசி கொடுக்க ஆளில்லை. எந்த உதவினாலும் கேளுங்க என்று போன் நம்பர் கொடுத்துவிட்டுப் போனவர்கள், போனையே எடுப்பதில்லை. இவரைப் போன்றோருக்காவது விலையில்லா ரேஷன் அரிசி எனும் குறைந்தபட்ச உணவுப் பாதுகாப்பு இருக்கிறது.
ஆனால், ஆதரவற்றோர், நாடோடிகள், இரவலர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்ட முதியோரின் நிலையை யோசித்துப் பாருங்கள். சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் அம்மா உணவகத்திலும் இலவச உணவு நிறுத்தப்பட்டு விட்டது. எளிய மக்கள் மீண்டும் பசி பட்டினியை நோக்கி நடைபோடுவதைப் பார்க்க முடிகிறது. கட்சிக்காரர்களை விடுவோம்; நம்முடைய தன்னார்வலர்களுக்கு என்னவாயிற்று என்று விசாரித்தேன். எல்லோரும் சொன்ன ஒரே பதில், "எங்களுக்கும் பணமுடை" என்பது.
8 ஆண்டுகளாக இளைஞர்களையும், மாணவர்களையும் கொண்டு சமூக சேவைகளைச் செய்து வரும் மதுரை ‘படிக்கட்டுகள்’ அமைப்பின் மேனேஜிங் டிரஸ்ட்டி எஸ்.மலைச்சாமியிடம் இதுபற்றிக் கேட்டபோது, "ஏப்ரல், மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இப்போது எங்கள் நிவாரணப் பணியை மிகமிகக் குறைத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. முதல் காரணம், நமது அமைப்புக்கு நிதி உதவி அளிப்பவர்களில் பெரும்பாலானோர் தனியார் வேலைகளில் இருப்பவர்கள். அதில் சிலர் வேலையிழப்புக்கும், பலர் 20 முதல் 50 சதவீத சம்பள வெட்டுக்கும் ஆளாகி இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கே எதிர்காலம் குறித்த பயம் வந்துவிட்டது. தங்களது குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்யவே முடியாத நிலையில், அவர்களால் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும்?
இருப்பினும், வழக்கம் போல நிறையப் பேர் உதவி கேட்டு எங்களைத் தொடர்பு கொள்கிறார்கள். நேற்றுகூட ஒரு அம்மா போன் போட்டு அழுதார். தன்னார்வலர்களிடம் நிர்பந்தப்படுத்தி நிதி கேட்க முடியாது என்பதால், எங்கள் அமைப்பில் மிஞ்சியிருந்த தொகையை அவருக்கு அனுப்பி வைத்தோம். மதுரையில், வீடுதேடிச் சென்று உதவுவதற்காக 3 பேர் நிரந்தர பாஸ் வைத்திருக்கிறோம். நோய்த்தொற்று அபாயம் அதிகரித்திருப்பதும் கூட நாங்கள் வெளியே செல்ல முடியாத நிலைக்கு ஒரு காரணம். இவ்வளவு காலம் உதவியவர்களுக்கு இப்போது உதவ முடியவில்லையே என்று கவலையாக இருக்கிறது" என்றார்.
அகதிகள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களுக்கு உதவுவதையே பிரதானமாகச் செய்துவரும் 'பசுமைநடை' ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனிடம் கேட்டபோது, "இந்தப் பணியில் நான் அவதானித்த விஷயம் என்னவென்றால், ஓரளவுக்குச் சொத்து வைத்திருக்கும் மத்திய தர வர்க்கம் இறுகிப் போய்க் கிடக்கிறது. பெரிய பங்களாவும், இரண்டு மூன்று காரும் வைத்திருப்பவர்கள் பசியின் ஓலத்தைக் கேட்க மறுத்து முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். வெளிநாடு வாழ் தமிழர்களும், ஐடி ஊழியர்களும்தான் மனமுவந்து உதவுவார்கள். இப்போது அவர்களும் நெருக்கடியில் இருக்கிறார்கள்.
ஏதோ வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம் போல நினைத்து உதவியவர்கள் இப்போது, ஒரு மாதப் பிரச்சினையல்ல... ஓராண்டு வரையில் நீடிக்கிற பிரச்சினை என்பதைப் புரிந்துகொண்டு விலகிக் கொண்டார்கள். இருந்தாலும் நாங்கள் உதவுவதை முற்றாக நிறுத்திக் கொள்ளவில்லை. உதவி கேட்பவர்கள் உண்மையிலேயே வறுமையில் இருக்கிறார்களா என ஒன்று ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு உதவுகிறோம்" என்றார்.
அரசே தாங்கமுடியாத நிதி நெருக்கடியில் இருக்கும்போது, தனியார்கள் எல்லாம் எம்மாத்திரம்?