மதுரையில் ‘கரோனா’ ஊரடங்கால் ஆங்காங்கே செயல்படும் தற்காலிக காய்கறிச் சந்தைகளுக்கு கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி செய்து கொடுக்காததால் அதிகாலையிலே வியாபாரத்திற்கு வரும் வியாபாரிகள் சாலைகள், அருகே உள்ள குடியிருப்புகளில் திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கீழமாரட் வீதி தயிர் மார்க்கெட், ஒருங்கிணைந்த பழ மார்க்கெட், மொத்த மீன் மார்க்கெட், பூ மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் தினமும் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் தற்காலிகமாக நகரின் பல்வேறு இடங்களில் நகர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில், நகரின் முக்கியத்துவம் வாய்ந்த ரேஸ்கோர்ஸ் மைதானம் சாலை, சர்வேயர் காலனி 120 அடி சாலை போன்றவற்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் சந்தைகள் தற்போது வரை அங்கு செயல்படுகின்றன. இதில், சர்வேயர் காலனி 120 அடி சாலையில் செயல்படும் தற்காலிக சாலையோரச் சந்தைகளால் அப்பகுதி குடியிருப்பு பகுதிகள் தூர்நாற்றத்தால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக காய்கறிக் கடைகள் அதிகாலை 4 மணி முதலே இயங்க ஆரம்பித்துவிடும். வியாபாரிகள் வரத்தொடங்கிவிடுவார்கள். மக்கள் 5 மணி முதலே காய்கறி வாங்க வருவார்கள். வியாபாரிகள், பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இப்பகுதிகளில் கூடுவார்கள். அதனால், அவர்களுக்கான குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுப்பது அத்தியாவசியமானது. ஆனால், சர்வேயர் காலனி 120 அடி சாலைக்கு காய்கறிச் சந்தையை மாற்றியதோடு சரி, அங்குள்ள வியாபாரிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. வியாபாரிகள் சாலையின் இருபுறமும் கடைகள் விரித்து காய்கறி வியாபாரம் செய்தனர்.
இந்த தற்காலிகச் சந்தை அருகில் தற்காலிக கழிப்பிட அறை, நடமாடும் கழிப்பிட அறைகள் ஏற்பாடு செய்யவில்லை. அதனால், அதிகாலையில் வரும் வியாபாரிகள் அப்பகுதி சாலை, குடியிருப்புப் பகுதிகளில் வெட்ட வெளியில் மலம், சிறுநீர் கழிக்கின்றனர். அவர்கள் காலைக் கடன் சென்ற பிறகு கை, கால்களைச் சுத்தம் செய்வதற்கான தண்ணீர் வசதியில்லாததால் சுகாதாரமில்லாமல் காய்கறி வியாபாரமும் செய்கின்றனர். லேசான மழை பெய்தால் அப்பகுதியே தூர்நாற்றம் வீசுகிறது.
அதிகாலையில் சர்வேயர் காலனி 120 அடி சாலை பகுதியில் குடியிருக்கும் மக்கள் அதிகாலையில் நடைப்பயிற்சி செல்ல முடியவில்லை.
அந்த அளவுக்கு சாலைகள் மிக மோசமாகக் கிடக்கின்றன. சில தற்காலிக காய்கறிச் சந்தைகள் செயல்படும் இடங்களில் நடமாடும் கழிப்பறை வசதி செய்து கொடுத்தாலும் தண்ணீர் வசதியில்லாமல் அதை வியாபாரிகள் பயன்படுத்த முடியவில்லை. அதனால், மாநகராட்சி நிர்வாகம், தற்காலிக காய்கறிக் கடைகள் செயல்படும் இடங்களில் போதுமான கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.