வலைஞர் பக்கம்

சுற்றுலா பயணிகளுக்காக இடம்பெயர்ந்த செட்டிநாடு கண்டாங்கி சேலை நெசவாளர்கள்: கரோனாவால் வாழ்வாதாரம் இழப்பு

இ.ஜெகநாதன்

சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இடம்பெயர்ந்த செட்டிநாடு கண்டாங்கி சேலை நெசவாளர்கள் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

செட்டிநாடு என்றாலே நம் நினைவுக்கு வருவது உணவு, கட்டிடக் கலைக்கு அடுத்தபடியாக கைத்தறி கண்டாங்கி சேலை தான். இந்த சேலைகளுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எப்போதுமே மவுசு உண்டு. அழகிய வேலைப்பாடுகள் உள்ள இந்த சேலைகளை வாங்குவதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு ஏராளமானோர் வருகின்றனர்.

இந்த கைத்தறி சேலைகளை காரைக்குடி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த சேலைக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்தது. மேலும் கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு அரண்மனையை பார்ப்பதற்காக உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

அவர்கள் கண்டாங்கி சேலைகளை விரும்பி வாங்கியதால், 100 நெசவாளர் குடும்பங்கள் கானாடுகாத்தான் பகுதியில் குடியேறினர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருவதில்லை. இதனால் நெசவாளர்கள் தயாரித்த சேலைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றனர்.

மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு தொடர்வதால் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இடம்பெயர்ந்த நெசவாளர்களில் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து நெசவாளர்கள் வி.வெங்கட்ராமன் கூறியதாவது: மூன்று தலைமுறையாக செட்டிநாடு கண்டாங்கி சேலைகளை உற்பத்தி செய்கிறோம். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுபாடு தொடர்கிறது. முழுமையாக சுற்றுலா பயணிகளை நம்பியே சேலைகளை உற்பத்தி செய்கிறோம்.

தற்போது ஊரடங்கால் 80 நாட்களுக்கு மேலாக சேலைகளை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் உணவிற்கே சிரமப்படுகின்றனர். தங்களின் வேதனை தீர்க்க அரசு உதவ முன் வர வேண்டும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT