வலைஞர் பக்கம்

மழைக்குமிழிகள்: கரோனா களத்தில் மருத்துவர் குடும்பத்தின் அனுபவக் குறிப்புகள்! 

செய்திப்பிரிவு

“படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித்- தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்”- நாலடியார்

வீழ்கின்ற மழை நீரிலே தோன்றும் குமிழிபோலப் பலமுறை தோன்றி அழியும் ஒருவகைப் பொருள் இந்த உடம்பு எனக் கருதி, இப்பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்வோம் நாம் என்று உணர்ந்து, அதற்கான அறங்களைச் செய்யும் உறுதியான நல் ஞான முள்ளவரை இவ்வுலகில் காண இயலுமோ??

பல ஊரடங்குகளைச் சந்தித்த வேளையில் செய்கின்ற வேலை காரணமாக - முக்கிய உயிர் காக்கும் பணியில் உள்ள அரசு ஊழியர்களின் பயணங்கள் தொடர்கின்றன. மருத்துவம் பயிலும் மகளாக இருந்தாலும் அவர் கூறிய வார்த்தைகள் - காரில் பயணிக்கும்போது எண்ண வேண்டியிருந்தது.

“அரசு மருத்துவராக இருந்து - என்ன செய்தீர்கள்? ஒரு காரும் , ஒரு வீடும்- அதுவும் வங்கிக் கடனில்!” என்று கூறிய அவரின் எண்ணத்தை வார்த்தைகளால் மாற்ற முயலவில்லை.

காவல்துறையினர் வெயில் சாலையில் வெக்கையில் நின்று, தன் கடமையைச் செய்துகொண்டு இருந்தனர். காவல் ஆய்வாளர் ஒருவர் கரோனாவால் இறந்து சில நாட்களே ஆனபோதிலும் , மன அழுத்தத்தைக் காட்டாமல் அந்த இளவயதுக் காவலர் கையை அசைத்தார் .

காரின் வேகத்தை மட்டுப்படுத்தினேன். அரசு மருத்துவர் குறியீடு இருப்பதைக் கவனித்து, என்னை மரியாதையோடு வழி அனுப்பினார் .

கரோனா ஊரடங்கில் அரசு மருத்துவருக்கு சென்னை சாலை எங்கும் தடையில்லை என்பதை என் மகள் உணர்ந்துதான் இருந்தார். அன்று இரவு மகளுடன் பயிலும் நண்பரின் தாயாரிடமிருந்து , என் மனைவிக்கு அலைபேசி அழைப்பு . அவரிடம் பேசியபின் என்னிடம் “பிரவீனின் அத்தைக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாசத்தில் உள்ளார். கரோனா தொற்று ஆய்வறிக்கை வராமல் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் நிறைய பணம் செலவாகிவிட்டதாம் - நான் சென்னை பொதுமருத்துவமனைக்கு மாற்றச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

நாங்கள் இருவரும் அரசு மருத்துவர் என்பதாலும், சென்னை மருத்துவக் கல்லூரியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்ததாலும் - அரசு மருத்துவத்துறையின் மேல் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை!! எனது மகளின் சிறுவயதில் -அறுவை சிகிச்சைக்கோ, உடல்நலக் குறைவிற்கோ- எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையையே நம்பி இருந்தோம்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் - சமூக நீதியினால், உழைப்பால், மருத்துவர்களானதாலும் அரசு மருத்துவமனைக் கட்டமைப்பில் ஒற்றிணைந்தவர்களாக விளங்குகின்றார்கள்.

அரசு பெண் மருத்துவர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு இந்த சமயத்தில் குறிப்பிடத்தக்கது. மகப்பேறு, குழந்தைகள் நலம், மயக்கவியல் துறை மருத்துவர்களில் 65 சதவீதம் பெண் மருத்துவர்களே! வேறு ஒரு மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்ட பேறுகாலப் பெண்மணி, சிகிச்சை கிட்டாமல் உயிரிழந்ததாக செய்தி வந்த நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா பாதிக்கப்பட்ட பேறுகாலப் பெண்மணிகளுக்கு சிகிச்சை பலனாக தாய் சேய் நலம் என்ற செய்தி, அவர்கள் குடும்பத்திற்கு நற்செய்தியானது. அதே வேளையில் , அதற்காக உழைத்த பெண்மருத்துவர்களும் , செவிலியர்களும் - தங்கள் குடும்பத்தைப் பிரிந்து தனிமைப்படுத்திக்கொண்டனர் .

கரோனா பணி நிமித்தமாக நாங்கள் இருவருமே இருந்ததால் -அதனைப் பற்றியே எண்ணுவதும் எங்களைப் பாதுகாத்துக்கொண்டு வீட்டில் தனியே விடப்பட்ட மகள் பற்றிய எண்ணமும் மேலோங்கியே இருக்கும்.

“மூவரும் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? ஒருவர் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? மகள் தனியே என்ன செய்வார்?” போன்ற எண்ணங்களால் என் மனைவி சிறிது கலக்கத்தில் இருந்தார். மயக்கவியல் துறையைச் சேர்ந்தவர் என்பதால் கரோனா பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளவர்களைக் கவனிக்கும் பொறுப்பும், செயற்கை சுவாசம் செலுத்த வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருந்ததால், மாதம் பாதி நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு ஓட்டல் அறையிலேயே தங்க அரசாங்கமே முழுச் செலவினை ஏற்றுள்ளது.

கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் - பல மயக்கவியல் மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் மாதம் பத்து நாட்கள் கரோனா பணியில் செய்வதற்கான சூழ்நிலை அமைந்துவிட்டது!

அனுபவமிக்க மருத்துவர்களுக்கும் , பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும் - அனைவருக்குமே இதுபோன்ற கொள்ளை நோயினை எதிர்கொண்டதில்லை. அனைவருக்குமே இது புதுவித நடுங்க வைக்கும் அனுபவம் .

95 சதவீதக் கரோனா நோயாளிகளுக்கு - அரசு மருத்துவமனையே ஆபத்பாந்தவனாக இருக்கிறது! இதில் பணிபுரியும் மருத்துவர்களின் தினமும் சந்திக்கும் அனுபவம் - கண்ணதாசனின் வரிகளையே ஞாபகப்படுத்துகின்றன.

“அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்? எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்”.

இறப்பிற்கு இடைநின்று , தடுப்பாளியாக மருத்துவர் நிற்பது அறியாமல் - கண்ணதாசன் , இறைவனிடம் கேள்வி எழுப்பினாரோ?

“இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்,
இறந்து பாரென இறைவன் பணித்தான்!”

தொலைக்காட்சி விவாதமேடையில் பலர் இந்த அனுபவமே இல்லாமல் (இறப்பிற்கும் , பிறப்பிற்கும் நடுவே நிற்கும் ) தோன்றி , மறைகின்றனர் .

கரோனா வைரஸ் தொற்று மூக்கு, கண், வாய், காது வழியாக நுழைந்து - பின் 7 முதல் 10 நாட்களில் , தொண்டை வலி, உடல் வலி, காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். காய்ச்சல் பல வேளைகளில் மிதமானதாக இருப்பதால் பலர் இதனை அலட்சியம் செய்கின்றனர். சிலர் நன்றாக உடல் வலிமையுடன் இருப்பதால் கவனக்குறைவில் - கடுமையான விளைவுகளைச் சந்திக்கின்றனர்.

காய்ச்சல் ஏற்பட்ட மூன்றாம் நான்காம் நாட்களில் இருமல் ஆரம்பித்து -கட்டுக்கடங்காது மிக கடுமையான தொடர் இருமலாக மாறும் போது - நோயின் தாக்கம், வீரியம் அறிய முடிகின்றது. ஆறாவது ஏழாவது நாட்களில் மூச்சுத்திணறல் ஏற்படும் நிலையில்- நுரையீரல் பாதிக்கப்பட்டு உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கடுமையாக குறைந்துவிடுகிறது.

ஆக்ஸிஜன், அனைத்து உறுப்புகளும் செயல்படத் தேவையானது என்பது தெரிந்ததே! நுரையீரல் ஆக்ஸிஜன் உள்வாங்கி , அதனை ரத்தத்திற்கு மாற்றிவிடும் நுண்அமைப்பு-ஆல்வியோலை (Alveoli) பாதிக்கப்படுகின்றது. மேலும் நுரையீரலில் நுண்ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகின்றது. அதாவது தண்ணீரில் உள்ள மீனைத் தரையில் விட்டால் ஏற்படும் நிலை ஏற்படுகின்றது. உயிர்காக்கும் இந்தக் கடுமையான போராட்டக் களத்தில் தங்களுக்கும் தொற்று ஏற்படும் என்பதை அறிந்தே தங்கள் உயிரைப் பணயம்
வைத்தே கண்ணதாசனின் அனுபவத்தை அறிகின்றனர்.

என் மனைவியும் இந்த முறை கரோனா பணிக்காக ஆறாவது முறை செல்கிறார். அவர் என்னிடம் சொன்னது, ‘‘இந்த முறை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 14 நாட்கள் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதற்குள் நான் மீண்டு வருகின்றேன்”.

“ படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென்றெண்ணி!!”

வீழ்கின்ற மழைநீரிலே தோன்றும் குமிழி போன்று தோன்றி அழியாமல், பல நீர்க்குமிழிகளை உருவாக்கும் மழை நீரை போன்ற மருத்துவனாக , என் மகளும் உருவெடுப்பார். அனுபவமே ஆண்டவன் என்பதையும் அனுபவத்தில் அறிவார் .

- சேகுரா.மரு

SCROLL FOR NEXT