மதுரையில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால், வெறும் 58 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று கண்டறியப்பட்டதாகக் கூறி சுகாதாரத்துறை உண்மையான பரிசோதனை முடிவுகளை மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் நோய் பாதிப்புகளை மூடி மறைத்து, தொற்று பரவுவதைத் தடுக்கத் தேவையான ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் தொன்மை நகராக அறியப்படும் மதுரை, தொற்று நகரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று வரை 550 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். 345 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். 85 சதவீதம் பேர் வரை எந்த அறிகுறியும் இல்லாமல் மகிழ்ச்சியாகக் கரோனா வார்டுகளில் சாதாரணமாகவே சிகிச்சை பெற்று குணமடைந்ததால் மக்களுக்கு இந்தத் தொற்றின் அபாயம் தெரியவில்லை. அச்சமில்லாமல் வெளியே நடமாட ஆரம்பித்தனர். ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டப்பிறகு மக்கள் சாதாரணக் காலங்களைப் போலவே பொதுவெளிகளில் சமூக இடைவெளி இல்லாமல் முகக்கவசம் இல்லாமல் அலட்சியமாக இருந்தனர். திருமண விழாக்கள், துக்க நிகழ்ச்சிகளில் முன்புபோல் கூட ஆரம்பித்தனர்.
வணிக நிறுவனங்களும், காய்கறிச் சந்தைகளும் அரசு அறிவுறுத்திய ஊரடங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை. அதனால், மதுரை பரவை மார்க்கெட்டில் 12 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. கரோனா வார்டு, அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே பணிபுரிந்த காவல்துறை, சுகாதாரத்துறை, மற்ற துறைகளில் பணிபுரிவோர் முகக்கவசம் கூட அணியாமல் பணிபுரிந்தனர். சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. இந்நிலையில் சென்னையில் இருந்து இ-பாஸ் பெறாமலும், போலி இ-பாஸ் பெற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
அவர்களைக் கண்காணித்துப் பரிசோதனை செய்வதில் தமிழக அரசு நான்கு வழிச் சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைக்காமல் கோட்டைவிட்டது. அதனால், சென்னையில் இருந்து வெளியேறிவர்கள், தென் மாவட்டங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களில் இந்தத் தொற்றுப் பரவலுக்கு முக்கியக் காரணமாகிவிட்டனர். அதுபோல், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளாமலே சொந்த ஊர்களில் சாதாரணமாக நடமாடினர். அதனால், கடந்த 2 வாரமாக தென் மாவட்டங்களில் கரோனா வேகம் அதிகரித்தது.
தொற்று இல்லாத நிலையை நோக்கிச் சென்ற தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் மீண்டும் தொற்று பரவியது. கட்டுக்குள் இருந்த மதுரையில் கடைசியாகக் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் கரோனா பரவியது.
இந்நிலையில் நேற்று மதுரையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 94 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறையின் ஆய்வு முடிவுகள், நோயாளிகள் விவரம் ஆகியவை சமூக வலைதளங்களில் வெளியாகின. ஆனால், சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ அறிவிப்புப் பட்டியலில் 94 பேருக்குப் பதிலாக 58 பேர் மட்டும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘மதுரையில் தற்போது சென்னையைப் போல் பரிசோதனைகள் அதிகமாக நடத்தப்படுகின்றன. நேற்று முதல் முதலாக 2,500 பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டது. அதனால், இனி நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகத்தான் வரும். ஆனால், அரசு வெளிப்படையாக உண்மையான பட்டியலை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இந்த நோயின் பரவலும், அதன் வீரியமும் தெரியும். பாதுகாப்பாகவும், கவனமாகவும் செயல்படுவார்கள்’’ என்றனர்.
நேற்று தொற்று ஏற்பட்டோரில் மருத்துவத் துறை, காவல்துறை, மற்ற அரசுத் துறைகளில் பணிவோரும் அடங்குவர். இதே வேகத்தில் கரோனா தொற்று அதிகரித்தால் இரட்டை இலக்கம், மூன்று இலக்கமாகி மாறி மதுரையில் சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
பரிசோதனையை அதிகரித்து, சமூகப் பரவலைத் தடுத்தால் மட்டுமே மதுரையைச் சென்னையை போல் ஆகாமல் தடுக்க முடியும். இல்லாவிட்டால் தொன்மை நகரம், தொற்று நகரமாக மாறிவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.