வலைஞர் பக்கம்

தண்ணீரைச் சேமிக்க உதவும் கருவி

ஹமிதா நஸ்ரின்

தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப் போர் மூளும் என்று பல அறிஞர்கள் ஆருடம் சொல்கிறார்கள். பெருகும் மக்கள் தொகையும், அகன்று விரியும் நகரங்களும், எண்ணிக்கையில் அதிகரிக்கும் தொழிற்சாலைகளும் தண்ணீரின் தேவையை அந்த அளவுக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கோடைக் காலங்களில் நெடிய வரிசையில் தண்ணீருக்காகத் தவமிருக்கும் காலிக் குடங்கள் அதற்குச் சிறிய சான்று. எனவே, தண்ணீரை வீணடிக்காமல் முறையாகப் பயன்படுத்துவது நம் அனைவரின் முன் இருக்கும் இன்றியமையாத கடமை. அந்தக் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவும் வகையில் ஒரு ஸ்மார்ட் கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கண்காணிக்கும் ஸ்மார்ட் கருவி

இந்த ஸ்மார்ட் கருவி நம் வீட்டின் மேலிருக்கும் தண்ணீர்த் தொட்டியின் நீர் மட்டத்தை எப்போதும் கண்காணித்து நமக்குத் தகவல் அளிக்கும். இது தண்ணீர்த் தொட்டி நிரம்பியவுடன் தானாகவே தண்ணீரை மேலேற்றும் பம்பை நிறுத்திவிடும். அதே மாதிரி தண்ணீர் மட்டத்தின் அளவு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே செல்லும்போது அது தானாகவே அந்த பம்பை இயங்க வைக்கும். அது மட்டுமின்றி ஆழ்துளைக் கிணற்றிலோ நம் வீட்டின் கீழ் இருக்கும் தொட்டியிலோ தண்ணீர் இலையென்றாலும் அது பம்பின் இயக்கத்தை உடனே நிறுத்திவிடும்.

பணி

நாம் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு பற்றிய தகவல்களை நாள்வாரியாகவும் வாரவாரியாகவும் மாதவாரியாகவும் இது நமக்கு அளிக்கும். இத்தகைய தகவல்களின் அடிப்படையில் தொட்டியில் இருக்கும் தண்ணீர் நமக்கு எத்தனை நாட்களுக்குப் போதுமானது என்று சொல்லும் அதன் திறன் நமக்கு மிகவும் பயனுள்ளது. குறிப்பாக, மின்வெட்டு, தண்ணீர் லாரி தட்டுப்பாடு நிலவும் காலகட்டங்களைச் சமாளிக்க இந்தத் திறன் வெகுவாக உதவும்.

எவ்வாறு செயல்படுகிறது?

இது வயர்லெஸ் இணைப்பு வசதி கொண்ட ஸ்மார்ட் சாதனம். நமது குறுக்கீடு ஏதுவுமின்றி தானாகவே நமது வீட்டின் தண்ணீர்த் தொட்டியை நிரப்பும் வல்லமை இதற்கு உண்டு.

இந்த அமைப்பில் தொட்டியைக் கண்காணிக்கும் அமைப்பு, கையடக்க டிஸ்பிளே கருவி, பம்பு இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு என்று மூன்று அமைப்புகள் உள்ளன. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று வயர்லெஸ் மூலம் இணைந்திருக்கும். தொட்டியைக் கண்காணிக்கும் அமைப்பில் உள்ள உணரிகள் (சென்சார்) தண்ணீரின் மட்டத்தையும் தரத்தையும் கண்டறிந்து தகவல் அனுப்பும். தண்ணீர் மட்டம்பற்றிய தகவல் பம்பை இயங்கவோ நிறுத்தவோ செய்யும். தண்ணீரின் தரம்பற்றிய தகவல் நம் வீட்டிலிருக்கும் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனத்தை முறையாகப் பராமரிக்க உதவும்.

டிஸ்பிளே கருவி தண்ணீர்த் தொட்டி பற்றிய எல்லாவித தகவல்களையும் நமக்கு அளிக்கும். இதில் மூன்று அங்குல அளவிலான தொடு உணர்ச்சி கொண்ட திரை உண்டு. இதைச் சுவரிலோ நமது மேஜையின் மீதோ நிறுவிக் கொள்ளலாம். இந்த டிஸ்பிளே கருவி மூலம் தான் இந்த ஒட்டுமொத்த அமைப்பின் இயக்கமும் நம்மால் முதலில் வடிவமைக்கப்படும். இதன் திரையானது தண்ணீரின் மட்டத்தை அதனுள் ஒளிரும் தொட்டியின் மாதிரிப் படம் மூலம் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கும். அதன் அருகில் தொட்டியிலிருக்கும் தண்ணீர் எவ்வளவு நேரத்திற்கு போதுமானது என்பதும், தண்ணீரின் தரம்பற்றிய தகவல்களும் எப்போதும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும்.

எப்படி நிறுவுவது?

இது DIY (Do It Yourself) வகையைச் சார்ந்த ஸ்மார்ட் கருவி. எனவே இதை நாமே எளிதில் நிறுவிக் கொள்ளலாம். தொட்டியைக் கண்காணிக்கும் அமைப்பையும் பம்பு இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவியையும் நிறுவுவதற்குத் தேவைப்பட்டால் பிளம்பரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பின் மொத்த அமைப்பையும் டிஸ்பிளே கருவிமூலம் நாம் எளிதில் வடிவமைத்துக் கொள்ளலாம்.

தொட்டியின் அளவு, நாம் விரும்பும் உயர்ந்த மற்றும் குறைந்த பட்ச தண்ணீரின் மட்டம், தண்ணீரின் தரம்பற்றிய எச்சரிக்கை, பம்பின் விசை போன்ற தகவல்களைத் துல்லியமாக இதில் முதலில் நாம் பதிவிட வேண்டும். இந்த டிஸ்பிளே கருவி ஒன்றுக்கு மேற்பட்ட தொட்டிகளையும் பம்புகளையும் நிர்வகிக்கும் திறன் கொண்டது. இந்தத் திறன் அடுக்குமாடி காலனிகளுக்கு மிகவும் பயனுள்ளது. இது தவிர சில நிறுவனத்தின் அமைப்புகள் மழைநீர் சேகரிப்பையும் அளவிடும் திறன் கொண்டவை.

விலை

தொட்டிகளின் எண்ணிக்கை, பம்புகளின் எண்ணிக்கை, உணரிகளின் எண்ணிக்கை, திரையின் அளவு, தகவல்களைப் பதிவு செய்யும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இதன் விலை மாறுபடும். இதன் குறைந்த பட்ச விலை சுமார் இருபது ஆயிரம் ரூபாய் ஆகும். தி ஸ்மார்ட் வாட்டர் வயர்லெஸ் வாட்டர் லெவல் மானிட்டரிங் சிஸ்டம், சிஸ்டர்ன் வாட்டர் லெவல் மானிட்டர், அக்வா டெல் வயர்லெஸ் டாங்க் லெவல் மானிட்டர், டெக் வாட்டர் லெவல் மானிட்டர், லெவல் ஃபில் வயர்லெஸ் லெவல் மானிட்டர் ஆகியவை சந்தையில் கிடைக்கும் பிரசித்தி பெற்ற அமைப்புகள்.

தண்ணீரைச் சேமிப்போம்

ஒருபக்கம் தண்ணீரின்றித் தவிக்கும் நாம், மறுபக்கம் அந்தத் தண்ணீரை அபரிமிதமாக வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். தேவையின்றி ஒளிரும் மின் விளக்கையும் ஓடும் மின் விசிறியையும் பாய்ந்து சென்று நிறுத்தும் நாம், அதே அளவு முக்கியத்துவத்தைத் திறந்த குழாயில் ஒழுகும் தண்ணீருக்கோ வீட்டின் மேலிருக்கும் தொட்டியிலிருந்து நிரம்பி வழியும் தண்ணீருக்கோ அளிக்கிறோமா? ஒருவேளை இயற்கையும் நம்மிடம் மாதக் கட்டணம் வசூலித்தால் இத்தகைய நிலை மாறலாம். அதற்குச் சாத்தியமற்ற சூழ்நிலையில் தண்ணீர்த் தொட்டியின் நீர் மட்டத்தைக் கண்காணிக்க உதவும் இந்த ஸ்மார்ட் கருவி நம்மால் விரயமாகும் தண்ணீரை மிச்சப்படுத்தும்.

SCROLL FOR NEXT