வலைஞர் பக்கம்

உடல்நலம் குன்றிய மகன்களோடு தவித்த முதிய தம்பதி: 2 லட்ச ரூபாய் நிதி திரட்டி நெகிழ வைத்த உளவுத்துறை ஆய்வாளர்

என்.சுவாமிநாதன்

வயதான நிலையில் இருக்கும் பெற்றோரை அவர்களது பிள்ளைகள் கடைசிக் காலத்தில் தங்களோடு வைத்து அரவணைத்துக் கொள்வதுதான் வழக்கம். ஆனால், நெல்லையில் ஒரு முதிய தம்பதி, தங்களைவிட இயலாத நிலையில் இருக்கும் தங்கள் மகன்களைப் பராமரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தத் தகவல் காவல்துறை ஆய்வாளர் ஒருவருக்குத் தெரியவர, அவரது முயற்சியால் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்தக் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கி நெகிழ வைத்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணன் - திருமலைநம்பி நாச்சியார் தம்பதியின் மகன்களான சின்னத்துரை, முருகன் இருவருமே மிகத்தீவிர நிலையிலான தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் இவர்களது அன்றாட வாழ்வை வாழ்வதே மிகச்சவாலான விஷயம். இதனால் இவர்கள் இருவரையும் தங்களது வயோதிகத்திலும் கிருஷ்ணன்- நாச்சியார் தம்பதியினரே தங்களோடு வைத்துப் பராமரிப்பு செய்துவந்தனர்.

இந்நிலையில், இந்தத் தம்பதியின் மகள் முத்துலெட்சுமி, தன் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்துட, ஐந்து வயது மகனுடன் பெற்றோருடனே வசிக்கிறார். தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சின்னத்துரை, முருகன் இருவருமே படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளிகள். இந்தக் குடும்பத்தின் பரிதாப நிலை குறித்துத் தெரியவந்த நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவகுமார், வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுக்கு இந்த விஷயத்தைப் பகிர்ந்தார். இதைக் கேள்விப்பட்டு அவரது நண்பர்கள் சிலர் உதவிக்கரம் நீட்ட, அவர்கள் மூலம் அந்தக் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறார் சிவகுமார். இதையடுத்து, வறுமையின் விளிம்பில் வாடிக்கிடந்த அந்த வீட்டுக்குள் மகிழ்ச்சி ரேகை படர்ந்துள்ளது.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் சிவகுமார் ‘இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “பெரியவர் கிருஷ்ணனுக்கு தூத்துக்குடி மாவட்டம், கெட்டியம்மாள்புரம்தான் பூர்விகம். வீடு, தோட்டம், கால்நடைங்கன்னு வசதியா வாழ்ந்த மனுஷன். சொந்த அக்கா பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுருந்தாரு. சொந்தத்துக்குள்ள திருமணம் செஞ்சதால ஏற்பட்ட சிக்கல்னு நினைக்குறேன். இரண்டு பையன்களுக்கும் முப்பது வயசு நெருக்கத்துல உடம்பு சரியில்லாம ஆகி, தசைச்சிதைவு நோயால் படுத்த படுக்கையாகிட்டாங்க. தங்களின் இயற்கை உபாதைகளைக்கூட மத்தவங்க உதவியில்லாமக் கழிக்கமுடியாத நிலைமைக்குப் போயிட்டாங்க. சென்னைக்குப் பசங்களைக் கூட்டிட்டுப் போய் வைத்தியம் செஞ்ச கிருஷ்ணன், வீடு, தோட்டம்னு எல்லா சொத்தையும் வித்துட்டாரு. சொத்துதான் தீர்ந்துச்சே தவிர, மகன்களின் நோய் தீர்ந்தபாடில்லை.

இதுக்கு இடையில்தான் அவரோட மகளும் விவாகரத்தாகி கிருஷ்ணன் வீட்டுக்கே வந்தாங்க. திசையன்விளை பக்கம் கொஞ்ச காலம் இருந்த கிருஷ்ணன் குடும்பம், அதுக்கப்புறம் நெல்லை மாவட்டம் செய்துங்க நல்லூருக்கு வந்தாங்க. இங்க வீட்டு வாடகை மட்டும் 2,000 ரூபாய். கிருஷ்ணனின் மனைவி அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைக்குப் போவாங்க. தசைச் சிதைவால் பாதிக்கப்பட்டிருக்கும் மகன்கள் ரெண்டு பேருக்கும் சமூக நலத்துறையின் மூலமா ஆளுக்கு 1,500 ரூபாய் உதவித்தொகை வந்துட்டு இருக்கு.

அதை வைச்சுத்தான் வீட்டு வாடகை கொடுத்துட்டு இருக்காங்க. வீட்டு வேலை செஞ்சு நாச்சியாருக்கு கிடைக்குற சொற்ப பணத்தில்தான் ஆறு பேரோட வயித்துப்பாடும் கழிஞ்சுது. இந்த விஷயம் அவங்க வீட்டுப் பக்கத்துல இருக்குற ஹரிஹரசுதன் என்பவர் மூலமா எனக்குத் தெரிஞ்சுது. அப்போதான் நண்பர்கள் சேர்ந்து உதவி செய்யலாம்னு தோணுச்சு.

உடனே, அந்தப் பணியை முன்னெடுத்தேன். ஹரிஹரசுதன், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கணேசராம், சோமாலியா நாட்டில் இருக்கும் ராமச்சந்திரன் ஆகியோர் எனக்கு இந்தப் பணிக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க. நேற்றும், இன்றுமாக இதுவரை மொத்தம் 2 லட்ச ரூபாய் பணமா கொடுத்துருக்கோம். இதுபோக அரிசி, மளிகைப் பொருள்கள்னு ஒரு மாசத்துக்குத் தேவையான பொருள்களையும் கொடுத்துருக்கோம்.

இன்னிக்கு சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கு. அதன் மூலமா பல ஆக்கபூர்வ விஷயங்களைச் செய்யலாம். அந்த வகையில் நானும், என்னோட நண்பர்களுமா சேர்ந்து செஞ்ச சிறிய முன்னெடுப்பு ஒரு குடும்பத்துக்கு அவங்களோட கஷ்டமான காலத்தில் உதவியிருப்பது மன நிறைவைத் தருது. இந்தக் கரோனா காலத்திலும் என்னோட அழைப்பை ஏற்று உதவி செஞ்ச நல்ல உள்ளங்களுக்கு நன்றி”என்றார்.

இதேபோல் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் பழனிக்குமாரின் முகநூல் பதிவின் மூலமும் முகம் தெரியாத பலரும் உதவிக்கரம் நீட்ட, அதன் மூலம் திரட்டப்பட்ட 24,000 ரூபாய் நிதியும் கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT