வலைஞர் பக்கம்

எதிர்காலம் நாம் ஆவோம்!

வா.ரவிக்குமார்

உலகம் முழுவதும் நாவல் கரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் 150 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ மதிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் கல்வி கற்க முடியாமல், மனத்தளவில் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களும் அவநம்பிக்கை மனநிலையில் வாழும் மாணவர்களும் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் கைக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ‘பீ த ஃபியூச்சர்’ என்னும் பாடல் இணையம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் ஓர் அங்கமான குளோபல் எஜுகேஷன் கொலிஷன் மூலம் தென்கொரியாவின் கே-பாப் கலைஞர்கள் இந்த இசைக் காணொலியை, மில்லேனேசியா புராஜெக்ட் வழியே யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்கள். தென்கொரியாவின் கே-பாப் கலைஞர்களுக்கு உலகம் முழுவதும் 40 கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்.

‘ஐ நோ வாட் யு ஹேவ் பீன் திங்கிங்…’ என்று தொடங்கும் துள்ளல் இசைப் பாடலில் வீட்டிலிருந்தே பாதுகாப்புடன் கல்வி கற்பதன் அவசியம், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி சுகாதாரத்தைப் பேண வேண்டியதன் அவசியம், தவிர்க்க முடியாத காரணத்துக்காக வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன. குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கல்லூரிக்குச் செல்லும் இளைஞர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் ரசிக்கும் வகையில் காட்சிகளையும் இசையையும் நேர்த்தியாக இணைத்துள்ளனர்.

நம்முடைய சுகாதாரப் பழக்கவழக்கங்களின் மூலம் கரோனாவை எதிர்கொள்வோம். ஒருவருக்கொருவர் இடைவெளியுடன் அதே வேளை, மனத்தளவில் ஒன்றுபட்ட சமூகமாக எதிர்கொள்வோம். நாளை நமதே என்பது பழைய சிந்தனை… ‘நாளையே நாம்தான்’ என்னும் புதிய சிந்தனையைக் கேட்பவர்களின் மனத்தில் இந்தப் பாடல் மலரச் செய்கிறது.

ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, மெலன் போன்ற 25 இசை தொடர்பான இணையச் சேவைகளில் இந்தப் பாடலைக் காணலாம்.

பாடலைக் காண:

SCROLL FOR NEXT