வலைஞர் பக்கம்

மதுரை தெப்பக்குளம் மைய மண்டபம் நோக்கி குரைத்த நாய்கள்; அபயக் குரலை அலட்சியம் செய்யாமல் குளத்தில் சோதனையிட்ட தீயணைப்பு வீரர்கள்- மக்கள் பாராட்டு

என்.சன்னாசி

அபயக் குரல் தாங்கி அழைப்பு வந்தவுடன் மனித குலத்திற்காக செயல்படும் தீயணைப்புத் துறையினர் மதுரையில் ஐந்தறிவு ஜீவனான நாய்களின் அபயக் குரலுக்கு செவிசாய்த்து களமிறங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை தெப்பகுளம் பகுதியில் சில நாட்களுக்கு முன் காலையில் சில நாய்கள் மைய மண்டபத்தை நோக்கி நீண்ட நேரம் குறைத்தன. நடைபயிற்சிக்கு சென்ற சிலர் குளத்திற்கு எதுவும் தவறி விழுந்திருக்கலாம் எனக் கருதி கரையோரமாகத் தேடினர்.

ஒன்றும் தென்படாத நிலையில், தண்ணீர் நிறைந்து இருப்பதால் மைய மண்டபத்தில் நாய்கள் சிக்கி இருக்க லாம் என, நினைத்து அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் உதயகுமார் தலை மையில் அனுப்பானடி, தல்லாகுளம் வீரர்கள் அங்கு விரைந்தனர். நாய்கள் குரைத்த பகுதியில் நீருக்குள் ரப்பர் படகு உதவியுடன் முழுவதும் சோதனையிட்டனர்.

மேலும், மைய மண்டபத்தில் நாய்கள் எதுவும் சிக்கி உள்ளனவா என, 1 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் அப்படி சிக்கியிருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து தீயணைப்புதுறையினர் புறப்பட்டுச் சென்றனர். இருப்பினும், நாய்கள் குரைப்பதை அறிந்து, அவற்றின் வேதனையைப் புரிந்து அலட்சியம் செய்யாமல் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் தீயணைப்பு வீரர்களின் செயலை அப்பகுதியினர் வெகுவாகப் பாராட்டினர்.

இது குறித்து தீயணைப்புத்துறையினர் கூறுகையில், ‘‘ நாய்கள் குரைப்பதை அறிந்து தான் பொதுமக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். மோப்ப சக்தி கொண்ட நாய்கள் சும்மா குரைக்க வாய்ப்பில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாம் அல்லது மைய மண்டபத்தில் நாய், நாய்குட்டிகள் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடினோம். ஒன்றும் சிக்கவில்லை. இருப்பினும், ஓரிரு நாட்களுக்கு முன்னதாக மைய மண்டபத்தில் சிக்கி தவித்த இரு நாய்களை மாநகராட்சியினர் மீட்டுச் சென்றிருக்கின்றனர். ஒருவேளை அது தெரியாமல் கூட, குரைத்திருக்கலாம்,’’ என்றனர்.

SCROLL FOR NEXT