வலைஞர் பக்கம்

10 சதவீத இட ஒதுக்கீடு என்னானது?- பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் இணையத்தில் போராட்டம்

என்.சுவாமிநாதன்

எந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் வராத பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி இருக்கிறது. பொதுப்பிரிவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் இதன் மூலம் பலன் பெற்றுவந்த நிலையில் தமிழக அரசு, ‘பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்’ என்னும் சான்றிதழ் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக, பொதுப்பிரிவினர் இணைய வழியில் நூதனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள், ஆயிரம் சதுர அடிக்குக் குறைவாக வீடு வைத்திருப்பவர்கள - இவர்களில் இதுவரை எந்த இடஒதுக்கீட்டுப் பட்டியலிலும் வராத பொதுப்பிரிவினருக்கு மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை மாநில அரசுப் பணிகளில் இந்த நடைமுறை தொடக்கத்தில் இருந்தே பின்பற்றப்படவில்லை. அதேநேரம் மத்திய அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள ‘பொருளாதாரத்தில் பின்தங்கியோர்’ என்னும் சான்றிதழைப் பெறவேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில், தமிழகத்தில் இந்தச் சான்றிதழ் வழங்குவது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் சலுகையையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுப் பிரிவினர் தள்ளப்பட்டுள்ளனர். இந்தசூழலில் தமிழகம் முழுவதும் உள்ள பொதுப்பிரிவினர் இணையவழியில் நூதனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதுகுறித்து குமரி மாவட்டம், தெரிசனங்கோப்பு கிராமத்தைச் சேர்ந்த கோலப்பன் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “பொதுப்பிரிவில் இருக்கும் ஒரே காரணத்தால் எவ்வித அரசு சலுகையும் கிடைக்காமல் கஷ்ட ஜீவனத்தில் வாழ்வை நகர்த்தும் குடும்பங்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்றன. இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் மத்திய அரசு, பொதுப்பிரிவில் நலிவுற்றோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது.

இதன் மூலம் அஞ்சலகம், வங்கி என இப்போதுதான் எங்களில் சிலருக்கு அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலை கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சூழலில்தான், ‘பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பிரிவு’ என சான்றிதழ் வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக வட்டாட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்கூட நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். கேரளத்தில் மாநில அரசுப் பதவிகளில்கூட இந்த இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் சான்று வழங்குவதையே நிறுத்தச் சொல்லி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே சான்றிதழ் பெற்றவர்களுக்கும்கூட இதனால் பலன் இல்லை. பொதுவாக வருமானச் சான்றிதழைப் பொறுத்தவரை அதன் கால அளவு 6 மாதங்கள்தான் என்பதால் நீட் தேர்வு, கரோனாவுக்கு பின்வரும் வேலைவாய்ப்பு என எதிலும் இந்த சலுகையைப் பெற முடியாது.

ஏற்கெனவே தமிழக அரசு பணி நியமனங்களில் 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்றவே செய்யாதபோது, மத்திய அரசின் சலுகையையும் பயன்படுத்த விடாமல் தடுப்பது நியாயமா? அதனால்தான் எங்களின் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கக் கோரி முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்குத் தனித்தனியே கோரிக்கை மனுக்களை இணைய வழியில் அனுப்பி வருகிறோம்.

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர், நாயர், நெல்லை, கும்பகோணம் சைவப் பிள்ளை, முதலியார், தமிழகத்தில் பரவலாக இருக்கும் ரெட்டி, நாயுடு, கார்காத்த வெள்ளாளர், அய்யர், அய்யங்கார் ஆகிய சமூக மக்களோடு சேர்ந்து அவரவர் சார்ந்திருக்கும் அமைப்பின் மூலம் தனித்தனியே மனு அளித்து வருகிறோம். தினமும் முதல்வருக்கு சுமார் 2,000 பேர் வரை கோரிக்கை மனுக்களை அனுப்புகிறார்கள். இது எங்கள் உரிமைக்காக நாங்கள் நடத்தும் இணைய வழிப் போராட்டம்” என்றார்.

SCROLL FOR NEXT