சமைக்கப்படுவதற்கு முந்தைய பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி, ரொட்டிக்கு 5% ஜிஎஸ்டி என்ற ஜிஎஸ்டி வகைப்படுத்தல் குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் ஒன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதாவது பரோட்டாவை ரொட்டியுடன் சேர்க்க முடியாது என்று ஜிஎஸ்டி க்காக இவ்வாறு வகைப்படுத்தப்பட்டது குறித்து சுமார் 70 லட்சம் பேர் பின் தொடரும் ட்விட்டர் கணக்கைக் கொண்ட ஆனந்த் மஹிந்திரா, “இந்தக் காலக்கட்டத்தில் நாடு சந்திக்கும் அனைத்து சவால்களுடன் பரோட்டாவின் இருப்புக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்தும் நாம் கவலைகொள்ள வேண்டும் போல் தெரிகிறது. ஆனால் இருப்பதை வைத்துக் கொண்டு ஜாலம் செய்யும் இந்திய திறமைகளை வைத்துப் பார்க்கும் போது விரைவில் புதிய உணவு வகையான ‘பரொட்டிக்கள்’ என்ற புதிய உணவைத் தயார் செய்வார்கள் என்று கருதுகிறேன், இது ரொட்டியா, பரோட்டாவா என்ற கறார் வகைப்படுத்தலுக்கு சவாலாக விளங்கும்” என்று கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ஐடி பிரஷ் ஃபுட்ஸ் என்ற பாதி-சமைத்த உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் சப்ளை நிறுவனம் மேற்கொண்ட மனுவில் பரோட்டா எடுத்த எடுப்பில் உண்பதற்கு தயாரான உணவு அல்ல, நுகர்வுக்கு முன்னால் அதைச் சூடுபடுத்துவது அவசியம் என்று கோரியிருந்தது. இதனையடுத்து கர்நாடகா அதாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங் அமர்வு பரோட்டாவை சப்பாத்தி அல்லது ரொட்டி என்ற வகையில் சேர்க்க முடியாது. ஏனெனில் ரொட்டி, சப்பாத்தி உடனடியாக சாப்பிட கூடியது, ஆனால் கோதுமைப் பரோட்டா, மலபார் பரோட்டா ஆகியவை 3 முதல் 5 நாட்கள் வரை அலமாரியில் வைக்கப்படலாம், சமைத்த பிறகே பரோட்டாவை உண்ண முடியும் ஆகவே இதை ரொட்டி உணவு வகையுடன் சேர்க்க முடியாது என்று கூறி அதற்கு தொடர்ந்து 18% ஜிஎஸ்டி என்று கூறியது.
அதாவது முழுதும் சமைக்கப்பட்டு உண்பதற்கு தயாராக இருக்கும் பிரிவில் பரோட்டா வராது என்பதால் பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ட்விட்டர்வாசிகளிடையே கடும் கிண்டலுக்கான மீம்களை ஈர்த்துள்ளது. #HandsOffParotta என்ற ஹேஷ்டேக்கில் இந்த மீம்கள் ட்ரெண்டாகி வருகிறது.