எந்தத் துறையாக இருந்தாலும் புகழின் வெளிச்சம் ஒருவரின் மீது விழ ஆரம்பித்துவிட்டால், அவரின் கலையை, செயலை மறந்துவிட்டு, அவரை கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். `அதெல்லாம் பிறப்பிலேயே வரவேண்டும்..’ என்றும், `அவருக்கு கலை ரத்தத்திலேயே இருக்கே.. அப்புறம் என்ன?’ என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு புகழ ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட புகழுரைகள் எல்லாம் உண்மையா?
ஒருவரின் திறமை ரத்தத்தில் வருவதா, பயிற்சியில் வருவதா? என்னும் கேள்விகள் எட்டு வயது சிறுவனுக்கு தோன்றுகிறது. காரணம் திடீரென்று அவனுக்கு புல்லாங்குழல் வாசிப்பதற்கு அபாரமாக வருகிறது. எப்படி இது நடக்கிறது என்னும் சிறுவனின் சுயதேடல்தான், சென்னையைச் சேர்ந்த அகஸ்டோ எழுதி, இயக்கிய `வானவில்லின் அம்பு’ நாடகத்தின் கதை. பல நாடக விழாக்களிலும் சிறந்த கதை, சிறந்த இயக்கம், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம் போன்ற பிரிவுகளில் பல விருதுகளை வென்றிருக்கிறது இந்த நாடகம்.
இந்தக் கதையின் மையத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, பிரபல நடிகர்கள் ரிதுபர்னா சென்குப்தா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடிக்க இந்தியில் `பன்சூரி’ என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்துமுடித்து விட்டார் சென்னையைச் சேர்ந்த ஹரி விஸ்வநாத். இவர் கடந்த 2015ல் விமர்சன ரீதியாக பலரின் வரவேற்பைப் பெற்ற `ரேடியோபெட்டி’ திரைப்படத்தை இயக்கியவர். “வானவில்லின் அம்பு’ நாடகத்தின் பிரதான கதையம்சத்தை அகஸ்டோ சொல்லிக் கேட்டதும், இது நிச்சயம் உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும் என்று முடிவு செய்து இந்தியில் படமாக்கும் பணிகளைத் தொடங்கி முடித்தேன் என்னும் ஹரி விஸ்வநாத், தற்போது கரோனா ஊரடங்கால் `பன்சூரி’ படத்தை ஒடிடி அலைவரிசைகளில் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.