பிரதிநிதித்துவப் படம் 
வலைஞர் பக்கம்

பிள்ளைகளின் வீடுகளுக்குச் சென்று சென்னையில் சிக்கிய பெற்றோர்கள்: சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

என்.சுவாமிநாதன்

கரோனா பொதுமுடக்க அறிவிப்புக்கு முன்னரே சென்னையில் உள்ள மகன், மகள்களைப் பார்க்கச் சென்ற பெரியவர்களில் பலரும் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் சென்னையில் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் எனப் பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் சென்னையில் செட்டிலாகி இருக்கின்றனர். இவர்களைப் பார்த்துச் செல்ல அவர்களது பெற்றோர்கள் பலரும் அவ்வப்போது சென்னை வந்து செல்வது வழக்கம். அப்படி கரோனா பொதுமுடக்க அறிவிப்புக்கு முன்னதாகவே சென்னையில் தங்கள் பிள்ளைகளின் இல்லங்களுக்கு வந்த பெற்றோர்கள் பலரும் மீண்டும் ஊர் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.

இதுகுறித்து சென்னையில் தனது மகள் வீட்டில் இருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறுகையில், “வருடத்துக்கு இரண்டு, மூன்று முறை சென்னையில் இருக்கும் மகளின் வீட்டுக்கு வந்துசெல்வது வழக்கம். இப்போது தாம்பரத்தில் நான் இருக்கும் என் மகள் வீட்டு காம்பவுண்டில் மட்டும் ஏழெட்டு வீடுகளில் தென்மாவட்டங்களில் இருந்து பிள்ளைகளைப் பார்க்க வந்தவர்கள் இருக்கிறோம். ஒரு காம்பவுண்டிலேயே 15 பேர் என்றால் மொத்த சென்னையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். மார்ச் மாதத்தில் திடீரென பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டதால் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த ரயில் டிக்கெட்டும் ரத்தாகிவிட்டது.

சென்னையில் மட்டும் என்னைப்போல் மகன், மகள் வீட்டிற்கு வந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிப் போக முடியாமல் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அனைவருமே முதியவர்கள். ஏற்கெனவே பல்வேறு உடல் உபாதைகளுடன் வாழ்ந்து வருபவர்கள். இ -பாஸ் எடுத்து, தனிவாகனத்தில் செல்வதும் சாத்தியமில்லாததாக இருக்கிறது. அரசு புலம்பெயர்ந்த தொழிலாளிகளை அவர்களது சொந்த ஊர்களுக்கு சிரத்தை எடுத்து அனுப்பிவைத்ததைப் போல, எங்களைப் போன்று சென்னையில் வந்து பிள்ளைகளின் வீடுகளில் சிக்கிக்கொண்டு தவிக்கும் முதியவர்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படிச் செய்தால் சென்னையில் கரோனா ஒழிப்பில் அரசின் நடவடிக்கைகளுக்கும் அது உதவியாக இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT