கடந்த மாதம் பரவலாக இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இப்போது சில மாநிலங்களில் மழை பெய்யத் தொடங்கினாலும் இன்னும் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வெயிலால் மனிதர்களைப் போல் பறவைகளும் விலங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அவற்றுக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. செடி, கொடிகள் வாடிப் போவதால் சரியான உணவும் கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு கோடைக்காலத்தில் இம்மாதிரியான பறவைகள், விலங்குகளுக்கு தண்ணீரும் உணவும் மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அளிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லிவருகின்றனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பார்மெரில் இதற்கு ஒரு நல்ல ஏற்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கைவிடப்பட்ட எண்ணெய் டின்களில் பறவைகளுக்கான உணவு, தண்ணீர் ஆகியவற்றுக்கான உணவுத் தட்டை அப்பகுதியினர் பயன்படுத்திவருகின்றனர். இதைக் கவனித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்திய வனப் பணி அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதன் ஒளிப்படத்தைப் பதிவிட்டுள்ளார். முற்றிலும் இந்தியக் கண்டுபிடிப்பு என தலைப்பிடப்பட்ட அந்த ட்வீட், ட்விட்டரில் ஆயிரக்கணக்கான பார்வைகளைத் தாண்டியது. அதைப் பார்த்த பலரும் அதுபோல் தாங்களும் செய்வோம் எனப் பின்னூட்டத்தில் கூறியது மட்டுமல்லாமல் பலரும் டின்களை பறவைத் தட்டாக மாற்றி அதை ஒளிப்படமாக மாற்றிப் பகிர்ந்துவருகின்றனர். சிலர் பழைய டின்களைச் சேகரித்து இதை ஒரு சேவையாகவும் செய்து வருகின்றனர்.
எண்ணெய் சேகரிக்கும் தகர டின்னின் நாலாப் பக்கமும் வெட்டி வெளியே அதன் பாகம் தெரிவதுபோல் வளைத்துள்ளனர். வளைத்துள்ள இந்தப் பகுதியில் தானியங்கள் இடலாம். டின்னின் அடிப்பகுதியில் தண்ணீர் ஊற்றிவைக்கலாம். சமூக வலைதளம் பல விதங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் இந்தச் சூழலில் இந்த ஒரு ட்வீட், பல ஆயிரம் பறவைகளுக்கு உணவு அளிக்கப் பயன்பட்டுள்ளது.