ராமநாதபுரம் சமஸ்தானம், நல்ல படிப்பு, நடனம் என்று அருமையான வாழ்க்கைதான் அவருக்கு. அந்த சமயத்தில், அப்படியொரு இடத்திலிருந்து சினிமா வாய்ப்பு வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘நடிப்பா... வேண்டாமே... படிக்கணுமே...’ என்றிருந்தவரை, துரத்தித்துரத்தி வந்து மடியில் வந்து உட்கார்ந்தது அதிர்ஷ்டம். அப்படித்தான் நடிக்க வந்தார். அவர்... லதா! அப்படி அவரை நடிக்க அழைத்தவர்... எம்ஜிஆர்.
முதல் படமே எம்ஜிஆருடன். அதுவும் அவர் இயக்கிய படத்தில். இன்னும் சொல்லப்போனால், முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட படம். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை, தமிழ் சினிமாவே மறக்காதுதானே. கலர்ஃபுல் பிரமாண்டம். கூடவே, பிக் ஓபனிங் லதாவுக்கு.
முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார் லதா. அடுத்தடுத்து படங்கள். அதுவும் எம்ஜிஆர் படங்கள். ’நேற்று இன்று நாளை’ யில் மஞ்சுளாவும் நடித்தார். கிட்டத்தட்ட முதல் இரண்டு படங்களுமே இரண்டு நாயகிகள் (உ.சு.வாலிபனில் மூன்று பேர்). இதன் பிறகு வந்த ‘சிரித்து வாழவேண்டும்’ படத்தில் தனிநாயகியாக வலம் வந்தார் லதா.
’உரிமைக்குரல்’, ‘பல்லாண்டு வாழ்க’ என அடுத்தடுத்து ஹிட்.. எம்ஜிஆர் படமென்றால் ‘ஹீரோயின் யாரு, லதாதானே?’ என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு, எம்ஜிஆருடன் தொடர்ந்து நடித்தார். தொடர்ந்து சரோஜாதேவி எம்ஜிஆருடன் நடித்தது போல், ஜெயலலிதா நடித்தது போல், லதாவும் தொடர்ந்து நடித்தார். இத்தனைக்கும் அதேகாலகட்டத்தில் மஞ்சுளாவும் அப்படித்தான் தொடர்ந்து எம்ஜிஆருடன் நடித்தார்.
’உரிமைக்குரல்’, ‘பல்லாண்டு வாழ்க’ படத்தையெல்லாம் லதாவுக்காக வந்து பார்த்த ரசிகர்களும் உண்டு. லதாவுக்கு ஒரு கிரேஸ். அவருக்கென தனிக்கூட்டம். இந்தசமயத்தில், அப்படியே அந்தப் பக்கம் போனார். சிவாஜியுடன் ‘சிவகாமியின் செல்வன்’ படத்தில் நடித்தார்.
பின்னர், ’நாளை நமதே’, நினைத்ததை முடிப்பவன்’, ’உழைக்கும் கரங்கள்’, ‘நீதிக்கு தலைவணங்கு’ ,‘மீனவ நண்பன்’, ’நவரத்தினம்’ என தொடர்ந்து படங்கள் வந்தன. எம்ஜிஆரின் கடைசிகாலப் படங்களின் நாயகி எனும் பெருமை லதாவுக்கு உண்டு. அவரின் கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தின் நாயகியும் இவரே!
அதன் பிறகுதான், லதா அற்புதமான நடிகை என்று கொண்டாடும் அளவிலான கேரக்டர்கள் மளமளவென வந்தன. ‘வட்டத்துக்குள் சதுரம்’ இவரின் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியது. கமலுடன் ஸ்ரீப்ரியா தயாரித்த ‘நீயா’ படத்தில் நடித்தார். மலையாளப் படத்தில், கமலுடன் நடித்த போது, அதில் மேக்கப் போடாமலே நடித்தார். ஆனாலும் அவரின் அழகும் நடிப்பும் பேசப்பட்டது.
ரஜினியுடன் ‘சங்கர் சலீம் சைமன்’ படத்திலும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்திலும் நடித்தார். இதிலொரு சுவாரஸ்யம்... ‘சங்கர் சலீம் சைமன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடி. ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் ரஜினியின் சகோதரி. விஜயகுமாருக்கு ஜோடி.
ஸ்ரீதரின் ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில், அற்புதமான கேரக்டர் கிடைத்தது லதாவுக்கு. தன் முதிர்ந்த நடிப்பால் மனதை அள்ளினார். தொடர்ந்து ஜெய்கணேஷ், சிவகுமார் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தார். எழுபதுகளில் தொடங்கி எண்பதுகளின் தொடக்கம் வரை நடித்துக்கொண்டிருந்தவர், திருமணம், இல்லறம், சிங்கப்பூர் என செட்டிலானார்.
இப்போது அதே எனர்ஜியுடன், உற்சாகத்துடன் சீரியல்களிலும் வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆனால், இன்றைக்கும் எழுபதுகளில் மக்கள் மனங்களில் இடம்பிடித்த அதே லதாவாக, எல்லோரின் அன்புக்கும் பாத்திரமாகத் திகழ்கிறார்.
எழுபதுகளில், லதா நடித்தாலே படத்துக்கு மார்க்கெட் வேல்யூ கூடிப்போனதெல்லாம் உண்டு. இன்றைக்கு நயன்தாரா போல், தனித்துவமிக்க நாயகியாக, மார்க்கெட் பலம் பொருந்திய நடிகையாக இருந்தார். இந்த மார்க்கெட் ரிலே ரேஸில் லதாவுக்குப் பிறகு பெற்றவர், ஸ்ரீதேவியாகத்தான் இருக்கும்.
எழுபதுகளின் அட்டகாச ஹீரோயின்... அற்புத நடிகை லதா... இன்னும் உற்சாகத்துடன், உத்வேகத்துடன் நடிக்க வாழ்த்துவோம்.
ஜூன் 7 லதா பிறந்தநாள்.