வலைஞர் பக்கம்

ஊரடங்கில் முடங்காத மேதைகள் 4- ஜியோவன்னி பாவ்காஷோ 

ஆதி

இத்தாலியின் புகழ்பெற்ற பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர் ஜியோவன்னி பாவ்காஷோ (1313-1375). வழக்குரைஞர், வணிகர், அரசியல் ராஜதந்திரி, அறிஞர், கவிஞர் என மறுமலர்ச்சி கால இத்தாலியின் அடையாளமாக பன்முகத்திறமையுடன் அவர் திகழ்ந்தார்.

1348இல் பரவிய பூபானிக் பிளேக் தொற்றுநோயால் அவருடைய குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவருடைய அப்பா, மாற்றாந்தாய் ஆகியோர் பலியானார்கள். தந்தை இறந்ததால், அவருடைய சொத்தில் இழப்பும் ஏற்பட்டது.

பிளேக் நோய் பரவலால் பிளாரன்ஸ் நகரைவிட்டு வெளியேறிய பாவ்காஷோ, டஸ்கன் கிராமப்புறத்தில் தங்கினார். இந்தக் காலத்தில் 'தி டெகாமரன்' (10 நாட்கள்) என்ற நாவலை எழுதினார். வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள், தனித்திருந்தது போன்றவற்றின் காரணமாகவே இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும்.

10 கதைகள்

பிளாரன்ஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் இளம் பெண்கள், ஆண்கள் குழு ஒன்று சந்திக்கிறது. அந்தக் காலத்தில் பிளேக் நோய் அந்த நகரைச் சூழ்ந்திருந்தது. இதன் காரணமாக அந்த நகரைவிட்டு வெளியேறி ஒரு கிராமப்புற மாளிகையில் அவர்கள் குடியேறுகிறார்கள். நண்பர்கள் குழு இப்படித் தனித்திருக்கும் காலத்தில் தங்களுக்குள் கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த நாவல் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒரு குறுநாவல் வடிவில், பல கதைகள் சேர்ந்ததாக இந்த நாவல் அமைந்திருந்தது.

நண்பர்களில் ஒரு நாளுக்கு ஒருவர் என்ற வீதம் பத்து நாட்களுக்கு பத்து பேர் கதை சொல்கிறார்கள். பகடி - பேராசை, காதல் - இழப்பு, நகைச்சுவை - சோகம் என பல உணர்வுகள் கலந்த கலவையாக இந்தக் கதைகள் உள்ளன. இந்தக் கதைகளுக்கான ஓவியங்களையும் பாவ்காஷோவே வரைந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கதை 1453இல்தான் பதிப்பிக்கப்பட்டது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால சிறந்த இலக்கியங்களுள் ஒன்றாக 'தி டெகாமரன்' கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT