“ஊரடங்குக்கு முன் பெரிய அளவில் வருமானம் இல்லையென்ற போதும், குடும்பம் நடத்தும் அளவுக்காவது வருமானம் கிடைத்தது. ஊரடங்கு ஆரம்பித்த போது பெரிதாகக் கஷ்டம் தெரியவில்லை. பின்னர் நிலைமை மோசமானது. முதலில், கடன் தொல்லை. அதன்பிறகு, ரேஷன் பொருட்களைக்கூட சரியாக வாங்க முடியவில்லை. அரசு கொடுக்கிற நிவாரணப் பணத்தை வாங்க நலச்சங்க அட்டையும் என்னிடம் கிடையாது. எங்கள் குடும்பம் நன்றாகச் சாப்பிட்டு, இரண்டு வாரங்கள் ஆகின்றன.
வறுமையால் தன்மானத்தைப் பொருட்படுத்தாமல் கடைகடையாக நாகஸ்வரம் வாசித்து, ’காசு வேண்டாம்; சாப்பாட்டுக்கான பொருட்களை மட்டும் கொடுக்க முடியுமா?’ எனப் பிச்சை எடுத்தேன். அப்படியாவது சாப்பிட்டாக வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.
எனக்கு நான்கு பிள்ளைகள். அதில் ஒரு பையனுக்கு மூளை வளர்ச்சி இல்லை. ஒரு அப்பாவாக இவர்களுடைய முகங்களைப் பசியில் பார்க்கப் பிடிக்காமல், இந்த நிலைமைக்கு வந்துவிட்டேன்” என வருத்தத்துடன் கூறுகிறார் திண்டுக்கல் மாவட்டதைச் சேர்ந்த சரவணன். கடந்த 20 ஆண்டுகளாக நாகஸ்வரத் தொழிலில் ஈடுபட்டு வருபவர் இவர். இவருடைய குடும்பத்தில் நாகஸ்வரக் கலைஞர்கள் இருந்தும் அவர்களிடம் கற்றுக்கொள்ள முடியாமல், தானாகவே முயன்று நாகஸ்வரம் கற்றுக்கொண்டவர்.
கடைகளில் சரவணன் நாகஸ்வரம் வாசித்ததை சமூக வலைதளத்தில் யாரோ பதிவிட, அதில் கிடைத்த உதவியின் மூலம் தற்போது வாழ்க்கையை ஓட்டிவருகிறார். ‘நலவாரிய அட்டை இல்லாதவர்களைப் பற்றி அரசு யோசிக்காமல் இருப்பது ஏன்?’ என ஆதங்கத்துடன் கேட்கிறார் சரவணன்.
எதிர்காலம் உண்டா?
கோயில் நிகழ்ச்சிகள், கல்யாணங்கள் தொடங்கி சடங்குகள் வரை நாகஸ்வரக் கலைஞர்களின் பங்கு, தமிழ்ச் சமுகத்தில் முக்கியமான ஓர் அங்கமாக இருந்துவந்திருக்கிறது. தற்போதைய ஊரடங்கு எல்லா துறைகளிலுமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுபோல், நாகஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் ஊரடங்கு உத்தரவு விதிகளின்படி கோயில் நிகழ்ச்சிகளோ, கல்யாணச் சடங்குகளோ பொது இடங்களில் நடத்தக் கூடாது. கடைசியாக வெளியிடப்பட்ட கட்டுப்பாட்டில், பொது நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் நாகஸ்வரக் கலைஞர்களுக்கு இடம் இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
“எங்களுடைய தொழிலில், சாதாரணமாக 8 மாதங்களுக்கு மட்டுமே நிலையான வருமானம் வரும். கரோனாவுக்கு முன்பே, நிறைய சடங்குகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட வடிவில் நாகஸ்வர இசையையும், இதர இசை வடிவங்களையும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அதனால் எங்களுடைய தொழில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியிருந்தது.
நான் சொந்த ஊரை விட்டு சென்னை மதுரவாயலில் தங்கித்தான் 'ராஜா நாகஸ்வரம், பக்கவாத்தியக் குழுவை' நடத்திவருகிறேன். ஊரடங்குக்கு முன்புவரை ஓரளவுக்குத் தொழில் நடைபெற்றுக்கொண்டிருந்ததது. ஊரடங்குக்குப் பிறகு, எல்லா முகூர்த்தங்களும் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. ஊரடங்குக் காலத்தில் நடைபெறும் கல்யாணங்களில்கூட, அரசு உத்தரவுப்படி கூட்டங்களைக் குறைத்துக்கொள்ளும் சூழலில் எங்களை யாரும் கூப்பிடுவதில்லை. ஊரடங்குக்குப் பின், இந்தக் கலைக்கு வாழ்வு இருக்குமா என்று பயமாக இருக்கிறது. எனக்கு இந்தத் தொழிலை விட்டால் வேறு எந்தத் தொழிலுமே தெரியாது” என்கிறார் தவில் கலைஞர் ராஜா.
ஏதோ சமாளிக்கிறேன்
நாகஸ்வரம், பக்கவாத்தியத்தை மக்கள் ரசித்த முந்தைய காலத்தைத் தாண்டி, தற்போது கல்யாணங்களிலோ கோயில்களிலோ வாசிக்கக்கப்படும் நாகஸ்வர இசையை மக்கள் தேவையற்ற ஒன்றாகக் கருதத் தொடங்கிவிட்டார்கள் என்பது நாகஸ்வரக் கலைஞர்களின் வருத்தம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாகஸ்வரக் கலைஞர்கள் இதுபோல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
“திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 வருடங்களாக நாகஸ்வரம் வாசித்துவருகிறேன். திருவண்ணாமலையில் உள்ள சுற்றுவட்டாரக் கிராமங்களிலேயே கல்யாணம், கோயில் நிகழ்ச்சிகளுக்கு நாகஸ்வரம் வாசிக்கச் செல்வேன். ஊரடங்குக்கு முன்புவரை வாடிக்கையாளர்களுடைய சக்திக்கு ஏற்ப, பணம் வாங்கியுள்ளோம். அப்போதே பல வாடிக்கையாளர்கள், இரண்டு வாத்தியங்கள் போதும் மூன்று வாத்தியங்கள் போதும் எனப் பேரம் பேசுவார்கள். ஊரடங்குக்குப் பிறகு, நாகஸ்வரக் கலைஞர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. பொதுப் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் ஊரடங்கின்போது நடைபெறக்கூடிய நிகழ்வுகளில்கூட எங்களால் வாசிக்க முடியவில்லை.
நான் நாகஸ்வரத்தைத் தவிர, பட்டுப்புழு வளர்க்கும் பண்ணையும், சிறிதளவு விவசாயமும் செய்துவருகிறேன். ஊரடங்கில் இவற்றின் மூலம் பெரிய அளவுக்கு வருமானம் இல்லையென்றாலும், ஏதோ சமாளித்துவருகிறேன். ஆனால் என்னைப் போன்று எல்லா நாகஸ்வரக் கலைஞர்களுக்குமே பின்புல வசதியேதும் இருக்காது. 90 சதவீத நாகஸ்வரக் கலைஞர்கள் நாகஸ்வரம் வாசிப்பதை மட்டுமே பிழைப்பாக வைத்துள்ளனர்” என்கிறார் சக்திவேல்.
சமூகவலைதளக் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாங்குடியைச் சேர்ந்த தவில் கலைஞரான மகாராஜா தன்னுடைய குழுவின் மூலம் நாகஸ்வரக் கலைஞர்களுக்குச் சமூக வலைத்தளங்களில் உதவி கேட்டுவருகிறார். ”நாகஸ்வரத் தொழில் உடனடியாகத் தொடங்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. வேறு சில தொழில்களில் பாதிக்குப் பாதி நடைபெறுவதற்கு அரசு அனுமதி அளித்தது. எங்களுடைய தொழிலிலோ அப்படி எந்த அனுமதியும் வாங்குவதற்கான வசதிகூட இல்லை” என்று வருத்தத்துடன் கூறுகிறார்.
“அரசு கொடுக்கும் உதவித்தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை. நலவாரிய அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. கிராமத்தில் இருக்கிற மக்கள் கஷ்டப்படுவது, இங்கு பெரும்பாலோரின் கண்களுக்குத் தெரியவில்லை. சென்னையில் இருக்கும் மக்களுக்கு எப்படியாது அரிசி, பருப்பு ஆகியவை கிடைக்கின்றன. ஆனால், எங்களுக்கு அப்படிக் கிடைக்கவில்லை. சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் மட்டுமே எங்களுக்கு வருமானம் கிடைக்கும். கரோனாவின் தாக்கத்தால் அதுவும் இப்போது எங்களுக்குக் கிடைக்கவில்லை. சமூக வலைதளங்கள் மூலமாக உதவி கேட்டோம். அதன் மூலமாகவும்கூட பெரிய உதவிகள் கிடைக்கவில்லை” என்கிறார் மகாராஜா.
ஊரடங்கின் காரணமாக திருமணம் நடைபெறும் முறைகளை மக்கள் எளிமைப்படுத்திவிட்டதன் தொடர்ச்சியாக, எதிர்காலத்தில் இதே வகையில் திருமணங்கள் நடைபெறுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. ‘அப்படியொரு நிலை ஏற்பட்டால், எங்களுடைய தேவை குறைந்து நாகஸ்வரம், பக்கவாத்திய இசைக் கலை அழிவதற்கு சாத்தியம் உள்ளது’ எனப் பல நாகஸ்வரக் கலைஞர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
எதிர்காலம் யார் கையில்?
நாகஸ்வரம், தவில் வாசிப்பது மட்டும்தான் இந்தக் கலைஞர்களின் ஒரே வாழ்வாதாரம். ஏற்கெனவே நலிந்துவிட்ட இந்தக் கலைகளைக் காப்பாற்ற இவர்களுடைய போராட்டம் பல காலமாகத் தொடர்ந்துவருகிறது. கடந்த நூற்றாண்டில், உடலில் சட்டை அணிவதற்கே அனுமதி இல்லாதிருந்தபோது, போராட்டங்களை நடத்தி தங்களுக்கான சமூக அந்தஸ்தை மீட்டெடுத்தார்கள். முன்பு இந்தக் கலைஞர்களுக்குக் கோயில்களில் ஓரளவு மரியாதை இருந்தது. ஆனால், ஊரடங்குக் காலத்தில் நாகஸ்வரக் கலைஞர்கள், நாகஸ்வரம் வாசித்து யாசகம் கேட்கும் நிகழ்வுகளைப் பார்ப்பது வேதனை தருவதாக இருக்கிறது. இவர்களுடைய தேவை கோயில்களிலும், சபாக்களிலும், கல்யாண நிகழ்வுகளில் குறைத்துவருகின்றன. கால மாற்றத்தால், தொழில்நுட்ப வளர்ச்சியில் இதுபோன்ற கலைகளின், கலைஞர்களின் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள கேள்வி அவர்களுக்கானது மட்டுமல்ல, நம் எல்லோருக்குமானதுதான்!
ச.ராஜலட்சுமி,
தொடர்புக்கு: rajalakshmisampath90@gmail.com