இளையராஜா, 76ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தபோது, கமலும் ரஜினியும் கொஞ்சம் கொஞ்சமாக உயரத்துக்கு வந்துகொண்டிருந்தார்கள். சிவகுமார் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சத்யராஜ் வந்துவிட்டார். பின்னர், பிரபுவும் நடிக்க வந்தார். விஜயகாந்த் தனக்கென தனியிடம் பிடித்தார்.
‘அன்னக்கிளி’க்குப் பிறகு இளையராஜா இசையில் சிவகுமார் நிறைய படங்களில் நடித்தார். தேவராஜ் - மோகன் இயக்கம், சிவகுமார், இளையராஜா கூட்டணி வெற்றிக் கூட்டணி எனப் பேசப்பட்டது. இந்தக் கூட்டணியில் வந்ததுதான் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. பழைமையையும் புதுமையையும் மோதிக்கொள்ளவிட்டு, நாகரீகத்தையும் பண்பாட்டுச் சிதறலையும் கருவாக்கி உருவாக்கிய ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.
‘மாமன் ஒருநா மல்லிகப்பூ கொடுத்தான்’, ‘வெத்தல வெத்தல வெத்தலயோ’, ‘என்னுள்ளில் ஏதோ ஏங்கும் கீதம்’, ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி’ என்று எல்லாப் பாட்டுமே செம ரகம். இந்தப் பாடலைப் பாடாத தெருக்களோ கல்யாணவீடுகளோ திருவிழாக்களோ மேடைக் கச்சேரிகளோ இல்லை. சிவகுமாருக்கு இந்தப் படம் 100வது படம். அட்டகாச வெற்றியைத் தந்தது. 79ம் வருடம் மே மாதம் 18ம் தேதி ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ வெளியானது.
ஆமாம்... சிவகுமார், கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் ஆகியோருக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவர்களின் நூறாவது படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.
கமல் முதன்முதலாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு ஹாசன் பிரதர்ஸ் எனப் பெயரிட்டார். பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு, படத்துக்கு ‘ராஜபார்வை’ எனப் பெயரிட்டார். மிகப்பெரிய தயாரிப்பாளரும் இயக்குநருமான எல்.வி.பிரசாத்தை நடிகராக அறிமுகப்படுத்தினார். தெலுங்கில் மிகப்பெரிய டைரக்டராக இருந்து கொண்டு, தமிழில் ‘திக்கற்ற பார்வதி’யை இயக்கி, பின்னாளில் கமலின் ஆஸ்தான இயக்குநர் என்று பேரெடுத்த சிங்கிதம் சீனிவாசராவை முதன்முதலாக தன் சொந்த பேனரில் இயக்குநராக்கியது, இந்தப் படத்தில்தான்.
மாதவி நடித்திருந்தார். ‘அந்திமழை பொழிகிறது’, ‘அழகே அழகு தேவதை’ என பாடல்கள் எல்லாமே செம ஹிட்டு. சிவகுமாருக்கு ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ போல், கமலுக்கு ‘ராஜபார்வை’. ஆமாம், கமலின் 100வது படம். 81ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி வெளியானது ‘ராஜபார்வை’.
அநேகமாக, அதிக அளவில் ரஜினிக்குத்தான் இளையராஜா இசையமைத்தார் என்பார்கள். கவிதாலயா பேனரில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ரஜினி நடித்த ‘ஸ்ரீராகவேந்திரர்’ ரசிகர்களால் மறக்கமுடியாத படம். தன் ஆசைக்காக ரஜினி நடித்த படம். வசூல் பற்றிய கவலையில்லாமல், கமல் தரமான படம் கொடுக்க முன்வந்தது போல, ரஜினி தன் குருவைப் பற்றிச் சொல்ல படமெடுத்தார். 85ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் தேதி வெளியானது ‘ஸ்ரீராகவேந்திரர்’. இந்தப் படம் ரஜினியின் 100வது படம்.
89ம் ஆண்டு, அக்டோபர் 28ம் தேதி வெளியானது ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’. சத்யராஜ் நடிக்க, பி.வாசு இயக்கினார். இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் நன்றாக அமைந்திருந்தன. இது, சத்யராஜின் 100வது படம்.
இன்றைக்கு விஜயகாந்தை, கேப்டன் கேப்டன் என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். அப்படி கேப்டன் என்று அழைப்பதற்கு காரணம்... ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்.கே.செல்வமணி ‘புலன் விசாரணை’ எடுத்த கையோடு அடுத்ததாக இந்தப் படத்தைக் கொடுத்தார். சுவர்ணலதா குரலில் அமைந்த ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் போதுமே... பட்டையைக் கிளப்பிற்று. பின்னணி இசையிலும் பிரமாண்டம் ஏற்றியிருப்பார். 200 நாட்களைக் கடந்து ஓடிய ‘கேப்டன் பிரபாகரன்’ விஜயகாந்தின் 100வது படம். 91ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியானது.
சிவாஜி, பிரபு, கார்த்திக், ரஜினி, கமல் என்றெல்லாம் இயக்கி ஒரு ரவுண்டு வந்த ஆர்.வி.உதயகுமார், சிவாஜி புரொடக்ஷன்ஸின் ‘ராஜகுமாரன்’ படத்தை இயக்கினார். 94ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியானது இந்தப் படம். எல்லாப் பாடல்களும் அட்டகாசமாக அமைந்தது.
சிவகுமார், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோர் கொடிகட்டிப் பறந்த 80களில், மோகன் நடத்தியது தனி ராஜாங்கம். நூறு படங்களைத் தொட்டாரா தொடவில்லையா என்பது தெரியாத நிலையில், மோகன் நடித்த கோவைத்தம்பியின் ‘உதயகீதம்’ தான் 50வது படமாக இருக்கும் என்கின்றனர் அவரின் ரசிகர்கள். இது இளையராஜாவின் 300வது படம். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றபடம்.
அதேபோல், மோகன், சிவகுமார், லட்சுமி, ராதிகா நடிப்பில், கலைஞரின் வசனத்தில் வெளியான ‘பாசப்பறவைகள்’ 75வது படமாக இருக்கலாம் என்கிறார்கள். இதுவும் இளையராஜாதான் இசை. இதில் வரும் ‘தென்பாண்டித் தமிழே’ என்றைக்குமான ஆல்டைம் பாடல்!
ஆக, சிவகுமார், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோரில், சிவகுமார், விஜயகாந்த் படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. அதேசமயம், எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்து வெற்றிபெற்றார் இளையராஜா.
- இன்று இளையராஜா பிறந்தநாள் (ஜூன்2).