வலைஞர் பக்கம்

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயதொழில் பிரிவுத் தலைவராக ராஜி பாற்றாசன் நியமனம்

குள.சண்முகசுந்தரம்

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயதொழில் பிரிவு தலைவராக கனடாவில் வசிக்கும் ராஜி பாற்றாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகத்தமிழ் வம்சாவளி அமைப்புக்கு 52 நாடுகளில் கிளைகள் உண்டு. உலக அளவில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்த அமைப்பு. தமிழ்க் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், உணவு, உடை உள்ளிட்டவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதுதான் இதன் முக்கியப் பணி.

உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு என்ற பிரிவும் இயங்குகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக இருக்கும் இந்த அமைப்பின் நோக்கமே, படிக்கும் காலத்திலேயே இளைஞர்களை தற்சார்புடைய தொழில்முனைவோராக உருவாக்கும் விதத்தில் அவர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பதுதான்.

இந்த அமைப்பின் கீழ் இயங்கும் பெண்கள் சுயதொழில் பிரிவின் தலைவராக ராஜி பாற்றாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பேசிய உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் உலகத்தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவருமான ஜெ.செல்வக்குமார், “இலங்கையின் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி பாற்றாசன். தற்போது கனடாவில் வசிக்கிறார். இவரும் இவரது கணவர் வில்லியமும் சிறந்த சமூக சேவகர்கள்.

போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் சமூகத்துக்கு தன்னால் முடிந்த எதையாவது செய்துகொடுக்க வேண்டும் என்ற தாகம் ராஜி பாற்றாசனுக்குள் இருக்கிறது. போருக்கு பிந்தய இலங்கையில், தமிழர்களின் நிலைமை இன்னும் சீராகவில்லை. வீடிழந்தவர்களுக்கு அரசாங்கம் வீடுகளைக் கட்டித் தந்தாலும் அதில் பாதிக்கும் மேலான வீடுகளை சிங்கள மக்களுக்கே (அவர்களும் போரால் பாதிக்கப்பட்டவர்களே) தந்துவிடுகிறார்கள்.

இந்த நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்தான் ராஜி பாற்றாசன் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் பெண்கள் சுயதொழில் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மற்ற நாடுகளில் தமிழர்கள் ஓரளவுக்குக் கவுரவமாக வாழ்ந்தாலும் இலங்கையில் உள்ள பெரும்பகுதி தமிழர்கள் இன்னமும் கூனிக் குறுகித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மாகாணங்களில் கணவனை இழந்த பெண்கள் மட்டுமே சுமார் 90 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்குள் சுய உதவிக் குழுக்கள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி சுயதொழிலில் இவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதுதான் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான எங்களின் இலக்கு. அதற்கேற்ப, இவர்களுக்கும், ஆர்வமுள்ள மற்ற பெண்களுக்கும் சுயதொழில் பயிற்சிகள் அளிப்பது, அவர்களுக்கான வங்கிக் கடன் உதவிகளைப் பெற்றுத் தருவது, கூடுதலாகத் தன்னார்வ அமைப்புகளின் உதவிகளையும் அவர்களுக்குக் கிடைக்கச் செய்வது உள்ளிட்ட உதவிகளை நாங்கள் செய்து கொடுக்க இருக்கிறோம். இவர்களுக்கான தொழில் பயிற்சிகளை அளிப்பதற்கு அவினாசிலிங்கம் டீம்டு யுனிவர்சிட்டி உள்ளிட்ட சில நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புகளும் முன் வந்திருக்கின்றன.

ஜெ.செல்வக்குமார்

தொழில் பயிற்சியை முடித்து இந்தப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பிராண்டிங் செய்ய வேண்டும். அதற்கான வேலைகளையும் ராஜி பாற்றாசனும் அவர் தலைமையில் செயல்படும் சிற்பி தாமோதரன், பேச்சியம்மாள் உள்ளிட்ட 21 பேர் கொண்ட குழு கவனித்துக்கொள்ளும். உலகம் முழுவதும் சுமார் 13 கோடியே 60 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்களெல்லாம் ஆளுக்கு ஓர் உற்பத்திப் பொருளை வாங்கினாலே இலங்கை தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை தற்சார்பு நிலைக்கு வந்துவிடும்.

இதற்காக, தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் நாடுகளில் எல்லாம் கம்யூனிட்டி சென்டர்களை நிறுவி அங்கெல்லாம் தமிழர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனைக்கு வைக்கப் போகிறோம். பொதுமுடக்கம் முடிவுக்கு வந்ததும் இந்தப் பணிகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்கும். உலகத் தமிழினத்தை ஒருங்கிணைக்கும் எங்களின் இன்னொரு முயற்சியாக உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழின மருத்துவர்களை ஒருங்கிணைத்து 7 நாடுகளில் தமிழ் மெடிக்கல் அசோசியேஷன்களையும் உருவாக்கி இருக்கிறோம். இதேபோல் உலகின் பல நாடுகளில் வசிக்கும் தமிழாசிரியர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

உலகத் தமிழின மேம்பாட்டுக்காக ‘உலகத் தமிழ் டிவி’ என்ற தொலைக்காட்சி சேனலையும் நடத்திக் கொண்டிருக்கிறோம். கனடா, இலங்கையில் இந்த சேனல் பெரும் வீச்சைப் பெற்றிருக்கிறது. இதில் 20 சதவீதம் மட்டுமே பொழுதுபோக்கு அம்சம் இருக்கும். எஞ்சிய 80 சதவீதம் தமிழின மேம்பாட்டுக்காகவும் தமிழ் மொழி வளர்ச்சி, கலை, கலாசாரம் பற்றிப் பேசுவதாகவும் இருக்கும்” என்று சொன்னார்.

SCROLL FOR NEXT