தம் கண்கள் முன்னிலையிலேயே ஒரு மனித அவலம் நிறைவேறிக் கொண்டு வருகிறது. கரோனா என்ற விஷக் கிருமியின் தாக்குதலை இன்னும் முழுமையாக நம்மால் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் ஊரடங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நோய்த்தாக்கம் ஏற்பட்டிருந்த இடங்களில் அரசு அனைவரையும் வீட்டிற்குள்ளேயே அடங்கி இருக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் பின்னணியில், புலம் பெயர்ந்த தொழிலாளிகள், தங்கள் வீடு திரும்ப, வண்டி வாகனங்கள் இன்றி, உணவு இன்றி, மன அழுத்தத்தால் உந்தப்பட்டு, போதும் இந்த வாழ்க்கை, இறந்தாலும், இருந்தாலும் நம் மண்ணிலேயே, நம் குடும்பத்தினரோடு, நமது கிராமத்திலேயே இருப்பது மேல் என்ற முடிவோடு, மனத்துணிவே துணையாகக் கொண்டு நடந்தே வீடு திரும்ப சொந்த கிராமங்களை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
ஆயிரம் கண்ணுடையாள் எனின் முகம் ஒன்றுடையாள் என்ற பாரதி வாக்கு என்று பொய்த்துத்தான் போனதோ தெரியாது. ஆனால், அவர்களும் இந்தியர்கள் என்ற நிலை மறந்து, அவர்கள் எந்த மாநிலத்தவர்கள், வந்த மாநிலம் உதவிக்கரம் நீட்ட வேண்டுமா அல்லது அவர்கள் வேலை செய்து வந்த மாநிலம் அவர்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமா என்ற சச்சரவில் அனைவரும் இணைந்திருக்க, இவர்களோடு இருக்கும் குழந்தைகளை நாம் மறந்தே போனோம். சாரை சாரையாக மக்களும், குழந்தைகளும் நடக்கும் காட்சி நமது இயலாமையைப் பறை சாற்றுகிறது.
தலையில் ஒரு சுமை, இடுப்பில் ஒரு குழந்தை, தாயின் பின் ஓடோடி வரும் இன்னொரு குழந்தை என்று நடக்கத் துணிந்த குடும்பங்கள், நிகழ்வின் அவலத்தை வெளிக்கொண்டு வந்தன. பெட்டியை அணைத்தபடி தூங்கிக் கொண்டே சென்ற குழந்தையின் படம் ஊடகங்களில் வெளிவந்தபோதும், நாம் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எந்த செயல் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எத்தனை குழந்தைகள் இந்நிலையில் இருக்கின்றார்கள் என்ற எண்ணிக்கை கூட நம்மிடம் இல்லை. புலம் பெயர்ந்த குழந்தைகளின் நிலையை மூன்று விதங்களில் பார்க்கலாம்.
1. பெற்றோர்களில் ஒருவர் வேலைக்காக இடம் பெயர்ந்து போயிருக்கலாம். மற்ற குடும்பத்தினர், குழந்தைகள் உட்பட கிராமத்திலயே இருக்கலாம். வேலைக்காக விட்டுச் சென்றவரிடமிருந்து, கடந்த 3 அல்லது 4 மாதங்களில் எந்தத் தொகையும் குடும்பத்திற்கு வந்திருக்காது.
2. செங்கல் சூளை, நெற்களம் போன்ற இடங்களுக்கு பெற்றோரோடு வேலைக்குச் சென்று இருந்தாலும் எந்தவிதப் பாதுகாப்புமின்றி, தற்போது நிராதரவாக்கப்பட்ட நிலையில் நடந்து ஊர் திரும்ப வேண்டிய நிலையில் உள்ளவர்கள்.
3. குழந்தையை வேலைக்காக வெளியிடங்களுக்கு அனுப்பியிருக்கலாம், வீட்டிற்குத் திரும்ப வேண்டும் எனில் நடந்துதான் வரமுடியும்.
எனக்கு ஒன்று புரியவில்லை. மிக முன்னோடியான இளைஞர் நீதிச் சட்டத்தின் படி நாம் ஏன் இக்குழந்தைகளைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தை என்று அறிவிக்கப்படவில்லை. குழந்தை நலக்குழு, துயருறு சூழலில் உள்ள எந்த ஒரு குழந்தையையும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தையாக அறிவிக்க இயலும். இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால், தெலுங்கானாவில் இருந்து, தன் சொந்த கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கிய அந்த 12 வயதுப் பெண் குழந்தை, பசியாலும், உடல் சோர்வினாலும் இறந்திருக்கமாட்டாள்.
அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின் குழந்தைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகிறது. ஊரடங்கு முடிந்த பின்னரும், இக்குழந்தைகளின் நிலையில் எந்த ஒரு மாறுதலும் ஏற்பட சாத்தியம் இல்லை, ஒருவேளை இக்குழந்தைகள் மீண்டும் பணியில் அமர்த்தப்படலாம், கடன் பெற்ற தொகைக்காக வெளியிடங்களுக்கு மறுபடியும் பெற்றோரால் அனுப்பப்படலாம். குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கலாம். குழந்தை பாதுகாப்பு எல்லா நிலைகளிலும் பின்னுக்குத் தள்ளப்படும் இந்நிலையில் அரசு உடனடியாக இக்குழந்தைகளை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தையாக அறிவித்திருக்க வேண்டும். தற்காலிக பராமரிப்பு இல்லங்களைத் தொடங்கி அடுத்த ஒரு வருடத்திற்காவது அவர்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் கல்வி உறுதிப்படுத்தப்படவேண்டும். இளைஞர் நீதிச் சட்டத்தில் இதற்கும் இடம் உள்ளது. சட்டப்பிரிவு 43-ன் கீழ் அரசு இத்தகைய இடங்களை அறிவிக்கலாம்.
இன்னொரு முறையும் உள்ளது. இச்சட்டத்தின் அரசு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை வீட்டிலேயே பராமரித்துக் கொள்ள பெற்றோர் விரும்பினால் அவர்களது பராமரிப்பிற்காக மாதந்தோறும் 2000 ரூபாயை உதவித் தொகையாக அளிக்கலாம். தமிழக அரசு, JJ Fund ஒன்று ஏற்படுத்தி அதன் மூலம், இத்திட்டத்தைப் பரவலாக்கலாம். அல்லது பாரதப் பிரதமர் தெரிவித்துள்ள 20 லட்சம் கோடியில், நாட்டில் உள்ள பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளின் பராமரிப்பிற்காகவும் ஒரு நிதியை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கத் தவறினால், நாம் உண்மையிலேயே குழந்தைகளை நேசிக்கும் நாடு தானா என்ற கேள்வி எழுகிறது. நாம் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியவர்கள் ஆவோம்.
கிரிஜா குமார பாபு,
குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர்,
முன்னாள் செயலாளர், இந்திய குழந்தைகள் நலச்சங்கம்