கரோனா நிவாரண உதவிகள் சரியாகச் சென்று சேர்கின்றனவா என்று காணொலியில் பேசி உறுதி செய்யும் உதயநிதி ஸ்டாலினால் உற்சாகமடைந்து இருக்கிறார்கள் திமுக இளைஞரணியினர்.
திமுக சார்பில் கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்படுவது போலவே அக்கட்சியின் இளைஞரணி சார்பிலும் உதவிகள் வழங்கப்படுகின்றன. கட்சித் தலைமைக்கு நேரடியாகப் பேசி நிவாரண உதவி கோரும் வகையில், கட்சி சார்பில் கட்டணமில்லாத் தொலைபேசி எண் சேவை அறிவிக்கப்பட்டது போலவே, இளைஞரணி சார்பாகவும் ஓர் எண் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த எண்ணுக்கு வந்து உதவி கேட்பவர்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்களுக்கு உதவும்படி சம்பந்தப்பட்ட மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களுக்குத் திமுக தலைமையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். அதன் அடிப்படையில் அந்தந்த ஊர்களில் நிவாண உதவிகளை மாவட்ட அமைப்பாளர்கள் செய்துவருகிறார்கள்.
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு மண்டல வாரியாக மாவட்ட அமைப்பாளர்களுடன் பேசியிருக்கிறார் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி. “கரோனா சூழலில் எப்படியிருக்கிறீர்கள்? குடும்பம் எப்படியிருக்கிறது? நம் அமைப்புகள் மூலமாக முறையான நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினீர்களா?” என்றெல்லாம் அவர் விசாரித்திருக்கிறார்.
அடுத்த கட்டமாக, இளைஞரணியின் மாவட்டத் துணை அமைப்பாளர்களிடம் காணொலி அழைப்பு மூலம் வரிசையாகப் பேசிவருகிறார் உதயநிதி. அந்த வகையில் கடந்த புதன்கிழமை மாலை 3 மணி தொடங்கி இரவு 9.30 வரை கோவை மண்டல திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்களிடம் உரையாடியிருக்கிறார்.
திமுகவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு கட்சி மாவட்டத்திற்கும் 5 இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் உள்ளனர். கோவையில் மட்டும் 4 கட்சி மாவட்டங்கள் உள்ளன. அதேபோல் திருப்பூர், ஈரோட்டில் தலா 2 கட்சி மாவட்டங்கள், நீலகிரி, கரூர் தலா ஒரு கட்சி மாவட்டம் எனக் கணக்கிட்டால் மொத்தம் 10 மாவட்டங்கள் உள்ளன. இத்தனை மாவட்டங்களில் உள்ள 50 துணை அமைப்பாளர்களுடனும் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் உதயநிதி.
இதுகுறித்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா கூறும்போது, “உதயநிதி ஸ்டாலின் என்னிடம் மட்டும் 20 நிமிடம் பேசினார். எங்கள் வீட்டுக்கு அருகில், டெல்லிக்குச் சென்று வந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதைத் தெரிந்து வைத்திருக்கும் உதயநிதி, அவரைப் பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் விசாரித்தார். அவர்களுக்கு எந்த மாதிரி உதவிகள் செய்யப்பட்டன என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
அதேபோல எங்கள் பகுதியிலிருந்து கட்டணமில்லா தொலைபேசி எண் வழியாக இளைஞரணியிடம் நிவாரண உதவி கேட்டவர்களின் பட்டியலையே அவர் வைத்திருக்கிறார். அதையெல்லாம் வரிசையாக வாசித்து, ‘உதவிகளெல்லாம் ஒழுங்காகச் சென்று சேர்கின்றனவா, மேற்கொண்டு உதவிகள் தேவைப்பட்டால் பொறுப்புடன் அவற்றை நிறைவேற்றுங்கள்’ என்று உத்தரவிட்டார். அவரை நேரில் சந்திக்கும்போதுகூட இப்படி சுதந்திரமாக உரையாட முடியாது. காணொலி அழைப்பில் அவ்வளவு இயல்பாக, யதார்த்தமாகப் பேசினார். அதில் எங்கள் நிர்வாகிகள் அத்தனை பேருமே உற்சாகமாக இருக்கிறோம்” என்றார்.