கரோனா பொதுமுடக்கத் தளர்வுகள் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாகக் கொடுமணலில் அகழ்வாய்வுப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது தமிழகத் தொல்லியல் துறை. திட்டமிட்டதைவிட 5 மாதங்கள் தாமதமாகத் தொடங்கினாலும், பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாகத் தெரிவிக்கிறார்கள் தமிழகத் தொல்லியல் துறை அலுவலர்கள்.
ஆதிச்சநல்லூர், கீழடி போலவே மிகவும் பேசப்பட்ட அகழாய்விடம் கொடுமணல். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் கொடுமணலில் கி.மு. 6 - 5-ம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறைய உள்ளன. பட்டை தீட்டப்பட்ட கல்மணிகள், வெண்கற்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்களுக்கான பொருட்கள், இரும்பு, தங்கம், வெண்கலம், உருக்கி வார்க்கும் உலைக் கருவிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட அரிச்சுவடிகள், பானை ஓடுகளில் பிராமி வரி வடிவ எழுத்துகள் எனப் பல பழங்காலப் பொருட்கள் இங்கே கிடைத்துள்ளன. இந்த ஊரிலிருந்து ரோமாபுரிக்கு வர்த்தகம் நடந்துள்ளதாகவும் அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, 1965 தொடங்கி புதுச்சேரி பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழகத் தொல்லியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அறிஞர்கள் பல்வேறு ஆண்டுகளில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, ‘தமிழக அரசின் நிதி உதவி கொண்டு நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியால் கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்களை மத்தியத் தொல்லியல் இலாகாவால் கண்டுபிடிக்க முடியும்’ என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.
அந்த அடிப்படையில் கடந்த 2018 ஜனவரி மாதம் மத்தியத் தொல்லியல் துறையினர் 6 மாத காலம் இப்பகுதியில் பெரிய அளவில் ஆய்வுகளை நடத்தினர். இந்த ஆராய்ச்சியில் நடு குழிகளோடு கூடிய சதுர வடிவிலான வீடு மற்றும் தொழிற்கூடம் ஆகியவை கண்டறியப்பட்டன. தவிர கி.மு 2-ம் நூற்றாண்டிற்கான வெண்மணிக் கற்கள், ரத்தினங்கள், பானை ஓடுகள் போன்ற பொருட்களும் கிடைத்தன.
இந்த ஆய்வுகளை நடத்திய மத்தியத் தொல்லியலாளர்கள், “பொதுவாக ஒன்றிரண்டு மாதிரிகள் மட்டும் கிடைத்தால் அந்த இடங்களைப் பெரிய ஆய்வுக்கு உட்படுத்தமாட்டோம். குறைந்தபட்சம் ஒரு பொருளில் நூறு மாதிரிகள் கிடைத்தால்தான் அதை அகழாய்வுக்குப் பொருத்தமான இடமாக அங்கீகரிப்போம். கீழடியில், ஆதிச்சநல்லூரில் கிடைத்ததைவிட இங்கு பல மடங்கு மாதிரிகள் கிடைக்கின்றன. அவையெல்லாம் கி.மு. நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
பின்னர், தங்கள் முதல் கட்ட ஆய்வை முடித்துக்கொண்ட மத்தியத் தொல்லியல் துறையினர், இந்த இடத்தை மேலும் ஆய்வு செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதன்படி ஆறு மாதங்களுக்கு முன்பே குறிப்பிட்ட கணிசமான நிதியுதவி மத்திய அரசால் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதை வைத்து, ஜனவரி மாதமே கொடுமணலில் அகழ்வாராய்ச்சி நடத்த தமிழகத் தொல்லியல் துறை திட்டமிட்டிருந்தது. எனினும் அதற்கான ஏற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே கரோனா பரவல் ஏற்பட்டுவிட்டதால், மொத்தமாக 5 மாதம் கடந்துவிட்டது.
இப்படியான சூழலில், யாரும் எதிர்பாராதவிதமாக, தமிழகத் தொல்லியல் துறையினர் கடந்த வியாழக்கிழமையிலிருந்து இங்கே ஆய்வை ஆரம்பித்துவிட்டனர். உள்ளூர்வாசிகள் 15 பேருடன், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழகத் தொல்லியல் துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘‘மத்தியத் தொல்லியல் துறை பரிந்துரைத்தன் பேரில் இந்தப் பணிகளுக்காகக் குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை எவ்வளவு என்பதை இப்போதைக்கு வெளியிட முடியாது. எப்படியும் இந்த ஆய்வு 6 மாதங்களுக்கு மேல் நீடிக்கலாம். உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பால் பணிகள் உற்சாகமாக நடக்கின்றன” என்றார்.