ஜூபிடர் பிக்சர்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் என பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்தவர் முக்தா சீனிவாசன். வீணை பாலசந்தர் உள்ளிட்டவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இத்தனை அனுபவங்களையும் கொண்டுதான், முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி, ஏராளமான படங்களை இயக்கினார் முக்தா சீனிவாசன்.
‘அந்தநாள்’, ‘பொம்மை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வீணை பாலசந்தரின் மற்றொரு படம் ‘கைதி’. இந்தப் படத்தில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை முக்தா சீனிவாசன், பல மேடைகளில் பேசியுள்ளார். எழுதியுள்ளார்.
‘’நான் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது, ‘கைதி’ என்கிற படம் தயாரானது. அந்தப் படத்தின் இயக்குனர் வீணை பாலசந்தர். இவருடைய ‘அந்தநாள்’ படத்துக்கும் இந்த ‘கைதி’ படத்துக்கும் நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன்.
ஜூபிடர் நிறுவனம், கோயம்புத்தூரில் இயங்கிக் கொண்டிருந்தது. வீணை பாலசந்தர் இயக்குவார். இசையமைப்பார். பாடுவார். நடிப்பார். கதையும் அவரே எழுதுவார். இப்படிப் பல வேலைகள் செய்துகொண்டிருந்த காரணத்தால், சென்னை, கோவை, சேலம் என மாறி மாறிச் சென்று வருவார்.
இந்தச் சூழலில், சில காட்சிகளை என்னை எடுத்துவிடும்படி சொல்லிவிட்டுச் செல்வார் வீணை பாலசந்தர். ஊரில் இருந்து வந்ததும் நான் எடுத்த காட்சிகளைப் பார்த்துவிட்டு பாராட்டுவார். அதேசமயம், ‘இந்தக் காட்சியை இப்படி எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்’ என்று அறிவுரையும் சொல்லுவார்.
இப்படித்தான், ‘கைதி’ திரைப்படம் சென்சாருக்கு தயாராகிக் கொண்டிருந்தது. கோவை அலுவலகத்திலேயே பிரிவியூ தியேட்டரும் உண்டு. அதில் படத்தைத் திரையிட்டு, ஷாட் பிரித்து, Duration Length எடுத்து எழுதிக் கொண்டிருந்தேன்.
அந்தசமயத்தில் அறிஞர் அண்ணா, ’வேலைக்காரி’ கதை விவாதத்துக்காக கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ வந்திருந்தார். பிரிவியூ தியேட்டரில் வசன ஒலியைக் கேட்டு அவரும் உடுமலையாரும் வந்தார்கள்.
"அட நம்ம சீனு தனியாக படம் பார்த்து எழுதிகிட்டிருக்கான்"என்று சொல்லிக்கொண்டே அருகில் வந்தார்.
" என்னப்பா எப்படி இருக்க?" என்று நலம் விசாரித்தார்.
"படத்தை நாங்க பார்க்கலாமா?" என்று அண்ணா கேட்க "அதனாலென்ன"என்று நான் சொன்னேன். அவர்களும் பார்த்தார்கள்.
கைதியில் ஒரு பாடல் " கொடுமையில் பிறந்து வளரும் இடம் சிறைக்கூடமே"என்று பல்லவியுடன் பாடல் இடம்பெற்றிருந்தது. கே.டி. சந்தானம் எழுதிய பாடல் இது.
அண்ணா என்னிடம் "இந்தப் பாடலை சென்சார்ல விடமாட்டாங்கய்யா."சிறைக்கூடம் கொடுமை பிறக்கும் இடம் " என்று இருந்தால், பிரச்சினையாகி விடும்யா" என்றார்.
அவர் சொன்னதில் நியாயம் இருந்தது.
உடுமலை நாராயண கவி அடுத்தவர் எழுதிய பாடல் என்பதால் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தார்.
நான் உடனே "அய்யா நான் உதவி இயக்குனர்தான். டைரக்டர் வீணை பாலசந்தர் வந்ததும் அவரிடம் சொல்கிறேன்" என்று சொன்னேன்.
அதற்கு அண்ணா "இன்னிக்கு நீ உதவி இயக்குனர். நாளைக்கு நீயே ஒரு பெரிய டைரக்டர் ஆகமாட்டியா? பாலசந்தர்கிட்ட நான் சொன்னதைச் சொல்லு..." என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அவர் சொன்னது போலவே சென்சார் போர்டு அதிகாரிகள், அந்தப் பாடல் முழுவதையும் நீக்கும்படி சொல்லிவிட்டார்கள்.
அப்போது வீணை பாலசந்தர், "எனக்கு இதை வெட்டுவாங்கன்னு ஏற்கெனவே தெரியும். அதாவது எடுக்கும்போதே தெரியும். அவங்க கவனம் முழுவதும் இந்த பாட்டை சுத்தி மட்டுமே இருக்கணும்னுதான் இந்தப் பாட்டையே வைச்சேன்.
இந்தப் பாட்டு இல்லைன்னா சென்சார்காரர்களுக்கு சீன்கள் மேல கண்ணு போகும். ஏதாவது சீனையோ வசனத்தையோ கட் பண்ணினா, பிரச்சினையாகிடும். அதான் அவங்களோட கவனத்தை திசை திருப்புறதுக்கு இந்தப் பாட்டை வைச்சேன். பாட்டுதானே... போகட்டும் விடுடா சீனு" என்று அலட்சியமாகச் சொன்னார்.
அப்படியே வாய்பிளந்து நின்றேன்’’ என்று முக்தா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
முக்தா சீனிவாசன் நினைவுதினம் இன்று (29.5.2020).