பொதுமுடக்கத்தால் முடங்கிக் கிடக்கும் தன்னுடைய தொகுதி மக்களுக்காக தொகுதி முழுக்க அரிசி, பருப்பு உள்ளிட்ட 22 பொருட்களை வழங்கிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தற்போது இரண்டாம் கட்டமாக மக்களுக்குக் காய்கனி முட்டைகளை வழங்கிக்கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு, ஏதோ தங்கள் சக்திக்கு ஏற்ப நிவாரண உதவி வழங்கும் எம்எல்ஏக்கள், அமைச்சரின் உதவிகளைக் கண்டு வருத்தத்தில் உள்ளார்கள் என்று தெரிகிறது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுமே 1,000 ரூபாயுடன் ரேஷன் பொருட்களையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கியது தமிழக அரசு. அதைத் தொடர்ந்து கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் சார்பில் இலவச அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. முக்கியமாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்தத் தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதி முழுக்க உள்ள குடும்பங்களைக் கணக்கெடுத்து டோக்கன் கொடுத்து, அதற்கேற்ப அரிசி, எண்ணெய், பருப்பு, சோப்பு, முகக்கவசம் என 22 பொருட்கள் வழங்கப்பட்டன.
இதுவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும்தான் இத்தனைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன; தொகுதி மக்களுக்குப் பொருட்கள் சென்று சேர்வதை அமைச்சரின் ஆட்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போன் செய்து உறுதிசெய்து கொள்கிறார்கள். ’’மற்ற தொகுதிகளில் ஊசிப்போன பருப்பும், செல்லரித்த அரிசியும், புழு ஊறும் மாவும்தான் தரப்படுகிறது. குறைவான பொருட்களே வழங்கப்படுகின்றன’’ என்றெல்லாம் புகார்கள் கிளம்பின. குறிப்பாக, கோவை தெற்கு எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன் தொகுதியில் வழங்கப்பட்ட பொருட்கள் சரியில்லை என்று சொல்லி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் அமைச்சர் வேலுமணி சார்பாக 50 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதனுடன் எம்எல்ஏக்கள் கூடுதல் தொகை சேர்த்து அவரவர் சக்திக்கேற்றபடி மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அமைச்சர் கொடுப்பதற்கு நிகராக நிவாரணப் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்றால், ஒரு தொகுதிக்கு 5 கோடி ரூபாய் வரை தேவை. அது எல்லோராலும் முடியாது என்பதால் அவரவர் இஷ்டப்படி தருகின்றனர். இதனால், கட்சி பார்த்து நிவாரணம் கொடுக்கிறார்கள் என்ற புகார்களும் வெடித்தன.
இந்த அமளி எல்லாம் சற்றே ஓய்ந்த நேரத்தில், கடந்த வாரம் தொண்டாமுத்தூர் தொகுதி முழுக்க மீண்டும் அமைச்சர் வேலுமணி தரப்பு ஆட்கள், ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் காய்கனி வழங்குவதாகச் சொல்லி டோக்கன்கள் வழங்கிச் சென்றனர். இப்போது அந்த டோக்கன்களைப் பெற்றுக்கொண்டு காய்கனி முட்டைகளை வழங்கி வருகின்றனர்.
முருங்கைக்காய்-5, தக்காளி 1 கிலோ, சேனைக்கிழங்கு 1 கிலோ, முட்டைக்கோஸ் 1 கிலோ, பீட்ரூட் அரை கிலோ, கத்திரிக்காய் அரை கிலோ, எலுமிச்சை பழம் -5, முட்டை 1 டஜன் என நீண்டுகொண்டே செல்கிறது நிவாரணப் பட்டியல்.
மற்ற தொகுதிகளில் இந்த அளவுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாகக் கட்சிக்காரர்கள் மத்தியிலேயே புகைச்சல் எழுந்திருக்கிறது. “அமைச்சருக்கு வசதி இருக்கிறது. நிறைய செலவு செய்கிறார். நிவாரணப் பொருட்கள் வழங்க அவரிடம் 200 பேர் இருக்கிறார்கள். அரசு ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கிறது. எம்எல்ஏக்களால் அப்படியெல்லாம் செய்ய முடியுமா?” என்கிறார் அதிமுக பிரமுகர் ஒருவர்.
“அமைச்சரின் நிவாரண உதவிகளை அதிக அளவில் பெறும் தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் கொடுத்துவைத்தவர்கள்” என்று சொல்லும் அதிமுகவினர், ”இதேபோல் மற்ற தொகுதிகளுக்கும் அதே அளவுக்கு நிவாரண உதவிகள் சென்று சேர்ந்தால்தானே மாவட்டம் முழுமைக்கும் நற்பெயரைப் பெற முடியும்” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.