’ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’ என்ற பாடலையும் அந்தப் பாடல் இடம்பெற்ற ‘முதலாளி’ திரைப்படத்தையும் மறக்கவே முடியாது. படத்துக்குப் பெயர் ‘முதலாளி’. ஆனால் படத்தின் கர்த்தா... எப்போதுமே தொழிலாளிகளின் பக்கம்தான். இத்தனைக்கும் தம்பியான அவர் இயக்குநர். அண்ணனோ தயாரிப்பாளர். இவர்கள் இருவருமே தொழிலாளிகளின் நலனில் அக்கறை கொண்டு படமெடுப்பவர்கள். இப்படித் திரையுலகில் பெயர் வாங்கிய அண்ணன் - தம்பி... முக்தா ராமசாமி, முக்தா சீனிவாசன்.
உடலில் கதர்ச்சட்டையும் மனதில் கம்யூனிஸ சிந்தனைகளுமாக வாழ்ந்தவர் முக்தா சீனிவாசன். காந்தியின் மீதும் பற்று கொண்டவர். கம்யூனிஸக் கொள்கையிலும் விடாப்பிடியாக இருந்தவர். ஜூபிடர் பிக்சர்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் என பல நிறுவனங்களில் பணியாற்றியவர். பாடல்களே இல்லாத முதல் தமிழ்ப் படம் என்று பேரெடுத்த வீணை பாலசந்தரின் ‘அந்தநாள்’ படத்திலெல்லாம் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.
ஏ.பீம்சிங், பந்துலு, ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், ஏ.சி.திருலோகசுந்தர், டி.யோகானந்த், பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் என இயக்குநர்கள் சிவாஜியை ரசித்து ரசித்துப் படமாக்கினார்கள். ஓர் ரசிகனைப் போல் சிவாஜியை அணு அணுவாக ரசித்து இயக்கினார்கள் என்பார்கள். இந்தப் பட்டியலில் முக்தா சீனிவாசனுக்கும் இடம் உண்டு. ’நிறைகுடம்’, ‘தவப்புதல்வன்’, ‘அன்பைத்தேடி’, ‘கீழ்வானம் சிவக்கும்’, ‘அந்தமான் காதலி’ என அடுக்கிக் கொண்டே செல்லலாம்... சிவாஜி - முக்தா சீனிவாசன் கூட்டணியை!
இதேபோல், ஜெயலலிதா மிகச்சிறந்த நடிப்பை வழங்கிய படங்களின் பட்டியலில், முக்தா சீனிவாசனின் படங்களும் இடம்பெறும். ‘சூரியகாந்தி’ ஒன்று போதும் உதாரணத்துக்கு! கமலுக்கு ‘அந்தரங்கம்’, ‘சினிமா பைத்தியம்’, ’சிம்லா ஸ்பெஷல்’ என்று சொல்லலாம். இதில் முக்தா சீனிவாசனுக்கு கூடுதல் சந்தோஷமும் கெளரவமும் உண்டு. கமல் மிகச்சிறந்த பாடகர் என்பது தெரியும். அவர் முதன் முதலில் பாடிய பாடல் ‘ஞாயிறு ஒளிமழையில்’ என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் பாடல் முக்தா சீனிவாசனின் ‘அந்தரங்கம்’ படத்தில்தான் இடம்பெற்றது.
தான் ஒரு கதாசிரியர், வசனகர்த்தா, நீண்ட அனுபவம் உள்ளவர் என எந்த பந்தாவுமில்லாதவர் முக்தா சீனிவாசன். ஒருபக்கம் சிவாஜியுடன் நல்ல நட்பு, இன்னொரு பக்கம் ஜெய்சங்கர், அந்தப் பக்கம் சிவகுமார் என எல்லாருடனும் தோழமையுடன் பழகும் பண்பாளர் எனக் கொண்டாடுகின்றனர். நடிகர் சோவிடம் வசனம் வாங்குவார். மகேந்திரன், ஏ.எஸ்.பிரகாசம், விசு முதலானோருட கதைகளை வாங்குவார். சிவசங்கரி முதலானவர்களின் நாவல்களைப் படமாக்குவார்.
ஆபாசம் இருக்காது. காமெடி இருக்கும். சமூகத்துக்குச் சொல்லக்கூடிய கதை இருக்கும். எவரையும் எள்முனையும் தாக்காத வசனங்கள் இருக்கும். படத்தில் நடித்த எல்லோருக்கும் நடிப்பதற்கு ஸ்கோப் கொடுக்கப்பட்டிருக்கும். ரஜினிக்கு அட்டகாசமான ‘பொல்லாதவன்’, ‘சிகப்பு சூரியன்’ முதலான படங்களையும் வழங்கினார். ஜெயலலிதா, ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா, லட்சுமி, சரிதா என இவரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படங்களும் ஏராளம்.
கும்பகோணம் அருகில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம்தான் முக்தா சீனிவாசனுக்கு பூர்வீகம். இவரின் நடத்தையையும் படிப்பின் மீதான அக்கறையையும் குடும்பச் சூழலையும் அறிந்த அதே பள்ளியின் மாணவர், இவருக்காக பள்ளிக்கட்டணத்தைச் செலுத்தினார். அவருடன் வளர்ந்த நிலையிலும் அதே அன்பும் மரியாதையும் கொண்ட பழக்கம் நீடித்தது. முக்தா சீனிவாசனை அவர் சார் என்று அழைப்பார். அவரை இவர், ஐயா என்றுதான் கூப்பிடுவார். அந்த ஐயா... ஜி.கே.மூப்பனார்.
போட்ட பட்ஜெட் ஒன்று... படம் எடுக்கும் போது அப்படியே மும்மடங்கு என்றெல்லாம் இருக்கிற திரையுலகில், பட்ஜெட் போட்டு பத்துப்பைசா கூட அதிகமாகாமல் எடுப்பதில் கில்லாடி என்று முக்தா சீனிவாசனையும் அவரின் சகோதரர் முக்தா ராமசாமியையும் சொல்லுவார்கள். பட்ஜெட்டில் மட்டுமல்ல... சொன்ன நேரத்தில் ஷூட்டிங், சொன்ன தேதியில் பட ரிலீஸ் என்று பக்காவாக செயல்படுவார் என்கிற பெயரும் இவருக்கு உண்டு.
‘’அன்பு, பண்பு இந்த இரண்டும் முக்தா சீனிவாசனின் இரண்டு கண்கள். யாரையும் மரியாதைக் குறைவாகப் பேசியோ ஒருமையில் அழைத்தோ பார்க்கவேமுடியாது. எல்லோரிடமும் அன்பு, எல்லோருக்கும் மரியாதை என்று வாழ்ந்தவர் அவர். தவிர, பர்பெக்ஷனிலும் அப்படித்தான். நடிகர் திலகம் ஆறுமணிக்கு செட்டுக்கு வந்திருந்தால், முக்தா சீனிவாசன் பத்துநிமிடம் முன்னதாகவே வந்திருப்பாராம்.
மதிய உணவு இடைவேளையை வழக்கம்போல ஒருமணிக்கு மேல் விடுவதை மாற்றினார் முக்தா சீனிவாசன். ஒருமணிக்கு பிரேக் விட்டால், முக்கியமானவர்கள் சாப்பிடச் செல்வார்கள். பிறகு, டெக்னீஷியன்ஸ் அப்புறமாக லைட்மேன்கள். கிட்டத்தட்ட அவர்கள் சாப்பிடும் போது மணி மூன்று மூன்றேகால் கூட ஆகிவிடுமாம். இதைப் பார்த்த முக்தா சீனிவாசன், மதியம் பன்னெண்டரைக்கே பிரேக் விட்டார். லைட்மேன்கள் இரண்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டார்கள். இப்படி கீழ்நிலை தொழிலாளர்களைத்தான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பார் அவர் என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள்.
‘’ஒரு குடும்பத்துல எல்லா வயசுக்காரர்களும் இருப்பாங்க. அவங்க எல்லாரும் வந்து படம் பாக்கணும். குடும்பமா வந்து பாக்கணும். அப்படிப் பாக்கற மாதிரிதான் நாம படம் எடுக்கணும்’’ என்பதுதான் முக்தா சீனிவாசனின் தாரக மந்திரம். இந்த மந்திரத்தையே வாழ்க்கையாகக் கொண்டு இயக்கினார். யதார்த்த சினிமாக்களும் குடும்ப சினிமாக்களும்தான் முக்தா சீனிவாசனின் ஸ்டைல்.
சினிமாவில் தொடர்ந்து படங்களை இயக்கிக் கொண்டே இருந்த வேளையில்தான் அரசியலிலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டார். திரைப்படம் சம்பந்தப்பட்ட அமைப்புகளிலும் பொறுப்பு வகித்து செயல்பட்டார். இன்னொரு பக்கம், தன் அனுபவங்களை பத்திரிகைகளில் தொடராக எழுதினார். புத்தகங்கள் வெளியிட்டார். நிறைய புத்தகங்கள் படிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேயத்துடனே வாழ்ந்தார்.
‘’முக்தா பிலிம்ஸ்ல வேலைன்னா, வீட்ல அடுப்புல உலையைப் போட்டுட்டு தைரியமா வரலாம்’’ என்றொரு வாசகம் திரையுலகில் அப்போது சொல்லப்பட்டது. அன்றைய படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் செட்டில் இருந்து வெளியே வரும்போது முக்தா சீனிவாசனின் சகோதரர் முக்தா ராமசாமி, வாசலில் பணத்துடன் தயாராக இருப்பார். எல்லோருக்கும் வரிசையாக சம்பளத்தை வழங்குவார்.
அதனால்தான் 60 ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது முக்தா பிலிம்ஸ். இன்னும் நூறாண்டுகளானாலும் பேசப்பட்டுக்கொண்டிருப்பார் முக்தா சீனிவாசன்.
முக்தா சீனிவாசன் நினைவு தினம் இன்று (29.5.2020).