வலைஞர் பக்கம்

சுரங்கத்துக்காக தகர்க்கப்பட்ட பழங்குடிகள் குகை!

சு.அருண் பிரசாத்

ஆஸ்திரேலியாவில் இரும்புச் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்காக 46,000 ஆண்டுகள் பழமையான அபோரிஜினல் பழங்குடிகளின் குகை தகர்க்கப்பட்டிருக்கிறது. இது சட்டத்தின் அனுமதியுடன் நடந்துள்ளது என்பது இந்நிகழ்வின் விசித்திரம்.

ஆஸ்திரேலியாவின் ஹாமெர்ஸ்லி மலைத்தொடரின் ஜுகான் கோர்ஜில் அமைந்துள்ளது புட்டு குந்தி குர்ராமா மற்றும் பினிகுரா பழங்குடியினரின் குகை. மேற்கு பில்பாரா பகுதியில் மிகவும் பழமையான, உள்பகுதியாக அமைந்தே ஒரே குகையான இது, கடைசி பனியுகத்தில் இருந்து மனிதர்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவந்த தடங்களைக் கொண்டுள்ளது. சுமார் 4,000 ஆண்டுகளாக மரபணுப் தொடர்பைப் பேணி வந்திருக்கும் தளமாகவும் இது திகழ்கிறது.

இத்தகைய வரலாற்று, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஜுகான் கோர்ஜ் குகையை, இரும்புச் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்காக சட்டத்தின் அனுமதியோடு ரியோ டின்டோ என்ற நிறுவனம் அழித்துள்ளது. சுரங்க நிறுவனங்களுக்குச் சாதகமாக 1972இல் உருவாக்கப்பட்ட, இப்போது காலாவதியாகிவிட்ட சட்டத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டது.

சட்டத்தின் பின்னணி

புதிய தேசிய பாரம்பரிய இடங்களைப் பட்டியலிடுவது, அவற்றின் மேம்பாட்டு நடவடிக்கைகளை வரையறுப்பது ஆகிவை வேளாண்மை, நீர், சுற்றுச்சூழல் துறையின் கீழ் வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பன்மை பாதுகாப்புச் சட்டம் 1999 இந்த இடங்களின் நிர்வாகம், பாதுகாப்புக்கான சட்டப்பூர்வமான வரையறைகளையும் வழங்குகிறது. இந்த இடங்களைச் சேதப்படுத்துவது குற்றமாகும்.

ஆனால், பழமையான அபோரிஜினல் தொல்லியல் தளங்கள் தேசிய பாரம்பரிய இடங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. தேசிய பாரம்பரிய இடங்களின் பட்டியலில் வராத இடங்களை மாநிலச் சட்டங்கள் நிர்வகிக்கும். ஆனால், மேற்கு ஆஸ்திரேலியாவின் அந்தச் சட்டங்களுமே 50 ஆண்டுகள் பழமையானவை.

சட்டத்தின் 17ஆம் பகுதி, அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் தோண்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கிறது. ஆனால், 18ஆம் பகுதியோ, அந்த இடத்தின் உரிமையாளர் (இது சுரங்க அனுமதி வைத்திருப்பவரையும் உள்ளடக்கியது) அபோரிஜினல் பண்பாட்டுப் பொருட்கள் குழுவிடம் அனுமதி பெற்று மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது 17 ஆம் பகுதியை மீறும் கூறுகளைக் கொண்டிருக்கிறது.

இடத்தை அழிக்கும் நடவடிக்கை குறித்து அதன் பாரம்பரிய உரிமையாளர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை என்று சட்டம் சொல்கிறது. எனவே, தங்கள் இடம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதில் இருந்து அதன் உரிமையாளர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள்.

மேல்முறையீடு?

ஆஸ்திரேலியாவில் இதுபோன்று நடப்பது புதிதல்ல. 210 கோடி டாலர் மதிப்பிலான ரயில் பாதை அமைப்பதற்காக சிட்னியில் கடந்த ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்று அழிக்கப்பட்டது.

இப்போது அழிக்கப்பட்ட ஜூர்கன் கோர்ஜ் கூட, அழிக்க அனுமதி வழங்கப்பட்ட பிறகே அதன் உண்மையான தொல்லியல் முக்கியத்துவம் கண்டறியப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு, இந்த இடத்தில் தொல்பொருட்கள், பின்னல் முடி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. முடியின் டி.என்.ஏ-வைப் பரிசோதித்ததில், இப்போது இங்கு வாழ்பவர்கள் புட்டு குந்தி குர்ராமா மற்றும் பினிகுரா பழங்குடியினரின் நேரடி வாரிசுகள் என்பது கண்டறியப்பட்டது. என்றபோதிலும், தகர்ப்புக்கான அனுமதியை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பை காலாவதியான சட்டம் வழங்கவில்லை. எனவே, புட்டு குந்தி குர்ராமா மற்றும் பினிகுரா அமைப்பினரால் இத்தளத்தின் அழிப்பைத் தடுக்க முடியவில்லை.

‘முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக புட்டு குந்தி குர்ராமா மற்றும் பினிகுரா பழங்குடியினரோடு ரியோ டின்டோ நிறுவனம் இணைந்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டுவருகிறது. அவர்களுடைய பண்பாட்டு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள பாரம்பரிய இடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதற்கு முன்பு திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன’ என்று அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதீத நகர்மயமாக்கல், தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் மாசு உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுக்க உள்ள இதுபோன்ற வரலாறு-தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆபத்தில் இருக்கின்றன. இந்நிலையில், அந்த இடங்களில் அழிவுக்கு சட்டமே வழிவகுப்பது வரலாறு-தொல்லியல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT