"இந்த முழு நாடும் கரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 உடன் போராடுகிறது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாம் நோயுடன் போராட வேண்டுமே தவிர நோயாளியுடன் அல்ல" இந்த வாசகம்தான் நாம் யாரை கைப்பேசி மூலமாக அழைத்தாலும் கேட்கும் விழிப்புணர்வு பிரச்சாரமாகும்.
அரசு வெளியிட்டுள்ள இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மதிப்புடன் நடத்தவேண்டும் அவர்களை எந்த காரணத்திற்காகவும் ஒதுக்கக்கூடாது என்பதாகும். அதனால்தான் "நாம் நோயுடன் போராட வேண்டுமே தவிர நோயாளியுடன் அல்ல" என்பதை மிக அழுத்தமாக வலியுறுத்துகிறார்கள். ஆனால் அரசின் இந்த நோக்கத்திற்கு முற்றிலும் நேர்மாறாக வெளியிடப்பட்டுள்ளது ‘Kent Smart Chef Appliences’ என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள விளம்பரம்.
தவறான சித்தரிப்பு
பொதுவாக புதியதாக அறிமுகப்படுத்தப்படும் பொருளின் சிறப்பு அம்சங்களைச் சொல்லித்தான் அதற்கான விற்பனையைச் சந்தையில் அதிகரிப்பார்கள். ஆனால் இந்நிறுவனம் சப்பாத்தி மாவு பிசைவதற்கான புதுவகை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ‘உங்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாளரிடம் மாவு பிசையக் கொடுக்கிறீர்களா? அவர்கள் நோய்த் தொற்று உடையவர்களாக இருக்கலாம்’ என வீட்டு வேலைச் செய்யும் பணியாளர்களைத் தவறாக விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சமூக அறம் சார்ந்த கேள்விகள்
பலரின் வேலையைக் குறைக்கும் வகையில் சப்பாத்தி மற்றும் ரொட்டி செய்வதற்கான மாவு பிசையும் இயந்திரத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சிதான். ஆனால் புதியவகை இயந்திரத்தை விளம்பரப்படுத்திய முறைதான் தற்போது விவாதத்தை உருவாக்கியுள்ளது.
நிறுவனத்தின் விளம்பரத்தில், "உங்களுடைய வீட்டில் வேலை செய்யும் பணியாளரிடம் சப்பாத்தி மாவு பிசையக் கொடுக்கிறீர்களா? அவருடைய கைகள் நோய்த் தொற்றுடையதாக இருக்கலாம். அதனால் எங்கள் நிறுவனத்தின் புதிய வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி கை படாமல் மாவு பிசைந்து இந்த நோய்த் தொற்று காலத்தில் தூய்மையைப் பேணுங்கள்" என்கிறது விளம்பரம். அப்போது வீட்டு வேலை செய்பவர்கள் என்றால் அசுத்தமானவரா? அவர்களுடைய கைகள் நோய்த் தொற்றுடையதா? என மறைமுகமாக நிறுவனத்தினர் கூறுகிறார்களா?
வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள பணியாளர்கள் இருப்பதால்தானே சம்பந்தப்பட்டவரின் வீடு சுத்தமாகவும் நோய்த் தொற்று ஏற்படாமலும் இருக்கிறது? என்கிற சமூக அறம் சார்ந்த கேள்விகளே இந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் எழுகிறது. கரோனா காலத்தில் சுத்தம், சமூக இடைவெளி என்பது அதிகம் நாம் அறிந்து கொண்ட வார்த்தைகளாகும். சுத்தம் என்பதை தூய்மை வாதம் என்கிற பெயரில் சமூகத்தில் கீழ்நிலையில் வைக்கப் பட்டிருப்பவர்களோடு பலர் பொருத்திவிடுகின்றனர். அத்தகைய வெளிப்பாட்டின் ஒரு பகுதியே இவ்விளம்பரமும். கரோனா தொற்று இந்தியாவிற்குள் வந்ததே விமானம் மூலமாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களால்தான். அப்படி வந்தவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் ஓரளவிற்கேனும் மேல்நிலையில் இருப்பவர்கள் தானே? அப்போது அவர்களைச் சுத்தமற்றவர்கள் என்று கூற முடியுமா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளை இந்த சிறு விளம்பரம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. இந்த விளம்பரத்திற்கு பலர் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்து அவ்விளம்பரத்தை சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது.
மனத் தொற்றை எப்போது கடப்போம்
ஒரே சாதி, ஒரே மதம், ஒரே வாழ்நிலை கொண்டவர்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதே நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும். ஏனெனில் நோய்த் தொற்றைப் பரப்பும் கரோனா போன்ற வைரஸ் கிருமிகளைப் பொறுத்தவரை அதற்கு எல்லோரும் மனித உடல்தான். ஆனால் மனிதர்களுக்குத்தான் அது தெரிவதில்லை. அப்படித் தெரிந்திருந்தால் "உங்கள் வீட்டு வேலைப் பணியாளரின் கையில் நோய்த் தொற்று இருக்கலாம்" என்று விளம்பரம் செய்வோமா? கரோனா போன்ற வைரஸ்களால் வாழ்க்கையில் பல சந்தோஷமான தருணங்கள் அனுபவிக்க முடியாமல் லட்சக்கணக்கான மனிதர்கள் உயிரிழந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘மனிதம்’ என்ற ஒன்றைச் சொல்தான் இந்த உலகத்தை கரோனா பேரிடர் காலத்திலும் மக்களை ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து வாழக் கற்றுக்கொடுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் சமூகத்தில் தங்களுடைய உடல் உழைப்பைச் செலுத்தி வாழ்க்கை நடத்தும் வீட்டு வேலைப் பணியாளர்கள் குறித்து இழிவாகச் சித்தரித்துள்ள இந்த விளம்பரம் மனிதம் என்கிற மாண்பில்லாமல் அணுகியிருப்பதே பிரச்சினையாகும்.
கரோனா எனும் நோய்த் தொற்றை நவீன அறிவியல் மூலமாக நாம் கடந்து விடுவோம். ஆனால், மனிதர்களில் மேல் என்றும் கீழ் என்றும் அணுகும் மனத்தொற்றை எப்போது கடக்கப்போகிறோம்?