வலைஞர் பக்கம்

அருங்காட்சியகங்களின் எதிர்காலம் என்னவாகும்?

பிடிஐ

உலகிலுள்ள 13 சதவீத அருங்காட்சியகங்கள் இனி எப்போதும் திறக்கப்படாமலே போவதற்கு வாய்ப்பிருப்பதாக ஐ.நா.வின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ எச்சரித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் 90 சதவீத அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன.

யுனெஸ்கோ, சர்வதேச அருங்காட்சியகங்கள் குழு (ICOM) ஆகிய இரண்டு அமைப்புகள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 பெருந்தொற்றின் காராணமாக அருங்காட்சியகங்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 90 சதவீதம், அதாவது 85,000 அருங்காட்சியகங்கள் இந்தப் பெருந்தொற்று நெருக்கடியால் மூடப்பட்டுள்ளன.

அத்துடன், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் அருங்காட்சியகங்களில் வெறும் 5 சதவீத அருங்காட்சியகங்களில் மட்டுமே ஆன்லைனில் உள்ளடக்கங்களைப் பார்வையாளர்களுடன் பகிர்வதற்கான வசதி உள்ளன. “உலகம் முழுவதும் 13 சதவீத அருங்காட்சியகங்கள் இனி எப்போதும் திறக்கப்படாமலே போகலாம்” என்று இந்த இரண்டு அமைப்புகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று சூழல், அருங்காட்சியகங்களின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அலசுவதற்காக அருங்காட்சியக நிபுணர்களை வைத்து இந்த ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்று சூழலிலும், அதற்குப் பிறகும் அருங்காட்சியகத் துறை எப்படி இயங்கலாம் என்பதற்கான வழிகளும் இந்த ஆய்வறிக்கையில் அலசப்பட்டுள்ளன.

“சமூகங்களின் மீட்சியில் அருங்காட்சியகங்கள் அடிப்படையான பங்களிப்பை வழங்குகின்றன. இந்த நெருக்கடியான சூழலில், பார்வையாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வழிகளை உருவாக்கி, அருங்காட்சியகங்களுக்கு நாம் உதவ வேண்டும்” என்று யுனெஸ்கோவின் பொது இயக்குநர் அவுத்ரே அஸுலே தெரிவித்துள்ளார்.

பார்வையாளர்கள் வரமுடியாத சூழலில், அருங்காட்சியகங்கள் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று சர்வதேச அருங்காட்சியகங்கள் குழுவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அருங்காட்சியகத் துறை நிபுணர்களின் செயல்பாடுகளும் மோசமாகப் பாதிக்கப்படும்.

“கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் இந்த சவால்களை எதிர்கொண்டுவரும் அருங்காட்சியகத் துறையினரின் உறுதிப்பாடு, நம்பிக்கையைப் பற்றி நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால், பொதுமக்கள், தனியார் துறையினரின் ஆதரவில்லாமல் இந்தச் சூழலில் அருங்காட்சியகங்களால் தனித்து இயங்கமுடியாது. அவசரகால நிதி, அருங்காட்சியகங்கள், அதன் ஊழியர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை உடனடியாக உருவாக்க வேண்டும்” என்று சர்வதேச அருங்காட்சியகங்கள் குழுவின் தலைவர் சொய் அக்சோய் தெரிவித்துள்ளார்.

உலகின் முக்கிய அருங்காட்சியங்கள் ‘மெய்நிகர் பயணங்கள்’ வழியாகப் பார்வையாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. “அருங்காட்சியகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கலாம். ஆனால், அவை தற்போதும் ‘மெய்நிகர் பயணங்கள்’ வழியாக அறிவுக்கான ஆதாரமாகத் திகழ்கின்றன” என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வறிக்கையில், அருங்காட்சியகத் துறை எப்படி இந்தப் பெருந்தொற்று காலத்தில் தகவமைத்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக அலசப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான சூழலில், கலைத்துறையைப் பாதுகாப்பதற்காகக் கடந்த மாதம் யுனெஸ்கோ ‘ResiliArt’ என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, கலை, கலைச்சார உலகத்தைப் பாதுகாப்பதற்காக சர்வேதச அளவில் கலைப் படைப்புகளின் மெய்நிகர்-உயர்நிலைப் பாரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அருங்காட்சிய ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு, அருங்காட்சியகங்களின் டிஜிட்டல் மயமாக்கம், ஆன்லைன் உள்ளடக்கம் உருவாக்கல் ஆகியவை தங்களின் முன்னுரிமைகளாக இருப்பதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

“இந்தப் பெருந்தொற்று உலகின் மக்கள்தொகையில் பாதிப் பேரிடம் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கான எந்த வசதியும் இல்லை என்பதையும் நமக்கு நினைவுபடுத்தியுள்ளது. அதனால், கலை, கலாச்சாரம் ஆகியவற்றை அனைத்துத் தரப்பினரிடம், குறிப்பாக விளிம்புநிலையில் இருக்கும் மக்களிடம் கொண்டுசெல்வதற்கான வழிகளை யோசிக்க வேண்டும்” என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

தமிழில்: என். கௌரி

SCROLL FOR NEXT